Wednesday, December 17, 2008

விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல்! 170 சிங்கள சிப்பாய்கள் பலி! கிளிநொச்சியை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு.



கொழும்பு, டிச.18-

இலங்கையில், விடுதலைப்புலிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 170 சிங்கள சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். கிளிநொச்சியை கைப்பற்றுவதற்கு ராணுவத்தினர் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்ற இலங்கை ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, ராணுவத்தினரால் கிளிநொச்சியை நெருங்க முடியவில்லை.
கிளிநொச்சியை கைப்பற்றுவதை கவுரவ பிரச்சினையாக கருதுவதால், ராணுவத்தினர் பலமுனை தாக்குதலை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக விமானப்படையின் போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் சரமாரியாக குண்டுவீசி வருகின்றன. விடுதலைப்புலிகளும் ஆவேசமாக பதிலடி கொடுத்து வருவதால், கிளிநொச்சி போர் தீவிரம் அடைந்து வருகிறது.

குஞ்சுப்பரந்தன், புலிக்குளம், மலையாளபுரம் ஆகிய இடங்களில் இருந்து கிளிநொச்சி நோக்கியும், முறிகண்டியில் இருந்து இரணைமடு நோக்கியும் 4 முனை தாக்குதலை ராணுவத்தினர் மேற்கொண்டனர். நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியில் இருந்து தாக்குதல் தொடங்கியது. இயந்திர துப்பாக்கிகள், பீரங்கி ஏவுகணை, கனரக டாங்கிகளுடன் ராணுவத்தினர் முன்னேறிச்சென்று தாக்கினார்கள்.
விடுதலைப்புலிகள் தக்க பதிலடி கொடுத்து ராணுவத்தினரின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தினார்கள். உக்கிரமான இந்த போரில், சிங்கள சிப்பாய்கள் 130 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

விடுதலைப்புலிகளின் ஆவேச தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய சிங்கள ராணுவத்தினர் பின்வாங்கி ஓட்டம் பிடித்தனர். அவர்கள் விட்டுச்சென்ற பல குழல் இயந்திர துப்பாக்கிகள், பீரங்கிகள், கனரக டாங்கிகள், ஏவுகணைகள் ஆகியவற்றை விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள். பலியான வீரர்களில் 18 பேர் உடல்களும் கைப்பற்றப்பட்டன.

இதன்மூலம் கிளிநொச்சியை கைப்பற்றும் ராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டது.
முன்னதாக, கிளாலி பகுதியில் இருந்து முன்னேறி வந்த சிங்களப் தரைப் படையின் 53-வது டிவிஷனின் கமாண்டோக்களின் தாக்குதலையும் விடுதலைப்புலிகள் முறியடித்தனர். இதில் 40 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 120 பேர் படுகாயம் அடைந்தனர். ஏராளமான ஆயுதங்களுடன் 8 வீரர்களின் உடல்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த இரு தாக்குதல்களிலும் 170 சிங்கள சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். 370 பேர் படுகாயம் அடைந்தனர். விடுதலைப்புலிகளின் சமாதான செயலக இயக்குனர் எஸ்.புலித்தேவன் இந்த தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.

விடுதலைப்புலிகள், தங்கள் படையில் சிறுவர்களை ஈடுபடுத்தி வந்ததாக, இலங்கை ராணுவம் குற்றம் சாட்டி வந்தது. இந்த நிலையில் கிளிநொச்சி போரில் பலியான வீரர்களில் பலர் சிறுவர்கள் என்பது தற்போது அம்பலமாகி உள்ளது. பலியான சிறுவர்களின் படங்களும் வெளியிடப்பட்டு உள்ளன.

இதற்கிடையில், விடுதலைப் புலிகளின் இந்த தகவலை, ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கரா மறுத்து உள்ளார். கிளாலி சண்டையில் 35 வீரர்கள் மட்டுமே பலியானதாகவும், 18 பேரைக் காணவில்லை என்றும், 160 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-

``கிளிநொச்சியை நோக்கி 5 வழிகளில் தாக்குதல் நடத்தி வருகிறோம். மேற்கு பகுதியில் இன்னும் 5 கிலோ மீட்டர் தூரம்தான் இருக்கிறது. தெற்குப் பகுதியில் கிட்டத்தட்ட கிளிநொச்சி நகர எல்லையை நெருங்கி விட்டோம். தெற்குமுனையில் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. எங்களது படைகளுக்கு உதவியாக விமானப் படையின் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கிளிநொச்சியிலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். அம்பகாமம் கிராமம் எங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.''
இவ்வாறு அவர் கூறினார்.

No comments: