Saturday, December 20, 2008

கருணாநிதி கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது!.- `கமாண்டோ' படை முகாம் சென்னையில் அமைக்கப்படுகிறது!.






சென்னை, டிச.21-

சென்னையில் தேசிய பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி. கமாண்டோ படை) மையம் அமைக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இதற்கான இடத்தை தேர்வு செய்ய மத்திய அரசு அதிகாரிகள் விரைவில் சென்னைக்கு வருகின்றனர்.

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல், இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களின் பாதுகாப்புக்கு எச்சரிக்கையாக அமைந்து விட்டது. மும்பை போல் பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ள பல முக்கிய நகரங்களையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் முக்கிய மையங்களின் இருப்பிடமாகத் திகழ்கிறது. மேலும் நீண்ட கடற்கரை பகுதியை தமிழகம் கொண்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் முக்கிய மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.


குறிப்பாக, கல்பாக்கம், கூடங்குளம் போன்ற இடங்களில் அணு மின் நிலையங்கள் கடற்கரையை ஒட்டி வருகின்றன. தற்போது பாதுகாப்பு கருதி, கல்பாக்கம் அணு மின்நிலையத்தின் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர விமான நிலையங்கள், விஞ்ஞானிகளின் இருப்பிடங்கள்- மையங்கள் போன்ற முக்கிய இடங்கள் உள்ளன.

எனவே, தமிழகத்தின் பாதுகாப்புக்காக சென்னையில் தேசிய பாதுகாப்புப் படைக்கான மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதுபோல் பல மாநிலங்களில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.


அந்த வகையில் உடனடியாக மிகுந்த பாதுகாப்புக்கு உட்படுத்த உகந்ததாக சில நகரங்களை மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. மும்பை, சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொல்கத்தா, போபால் ஆகிய 6 நகரங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. இங்கு கமாண்டோக்களைக் கொண்ட தேசிய பாதுகாப்புப் படை மையம் அமைக்கப்படும்.

இந்த நிலையில் இதுதொடர்பான மத்திய அரசு அதிகாரிகள் விரைவில் சென்னைக்கு வர உள்ளனர். தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை அவர்கள் சந்தித்துப் பேசுவார்கள். சென்னையில் என்.எஸ்.ஜி. மையத்தை எங்கு அமைப்பது? என்பது பற்றியும், அவர்களுக்கான பயிற்சி மையத்தை அமைப்பது பற்றியும் ஆலோசனை நடத்துவார்கள். அதன் பின்னர் சென்னையில் இந்த மையம் அமையும் இடம் பற்றி முடிவு செய்து, அங்கு விரைவில் தொடங்கப்படும்.


பாதுகாப்புப் பணிக்கு மட்டுமே பயிற்சி மையம் உருவாக்கப்படவில்லை. பல்நோக்கு மையமாகவும், சர்வதேச தரம் வாய்ந்ததாகவும் இது திகழும்.
இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் கமாண்டோக்களுக்கு, ரகசிய தகவல் திரட்டுவது, வெடிகுண்டை கண்டுபிடிப்பது, அதை செயலிழக்கச் செய்வது, விமான கடத்தலை ரகசியமாக செயல்பட்டு முறியடிப்பது, கடத்தப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்பது, முக்கியஸ்தர்கள் வரும்போது செய்யப்படும் நாசவேலைகளை முறியடிப்பது உட்பட பல `ரிஸ்க்'கான பணிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதுபோன்ற பயிற்சி, சென்னை உள்ளிட்ட 6 நகரங்களில் அமையும் மையங்களைச் சேர்ந்த கமாண்டோக்களுக்கும் அளிக்கப்படும்.

No comments: