Thursday, December 25, 2008

இந்தியாவை களங்கப்படுத்த திட்டமிட்ட நாடகம்!. - லாகூரில் காரில் குண்டு வெடிப்பு: இந்தியரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் தகவல்!.





இஸ்லாமாபாத், டிச.26-

லாகூர் கார் குண்டு வெடிப்பு தொடர்பாக ஒரு இந்தியரை கைது செய்து இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இது இந்தியாவை களங்கப்படுத்துவதற்காக பாகிஸ்தான் நடத்தும் திட்டமிட்ட நாடகம் என்று கருதப்படுகிறது.

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளானது, பாகிஸ்தான். தாக்குதல் நடத்திய அஜ்மல் என்ற பாகிஸ்தான் தீவிரவாதி கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ளான். ஆனால் அவன் தங்கள் நாட்டைச் சேர்ந்தவன் அல்ல என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.

தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா விதித்த ஒரு மாத `கெடு' இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இந்தியா எந்த நேரமும் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பீதியில் பாகிஸ்தான் உள்ளது. இதற்காக ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான், படைகளை குவித்துள்ளது. பாகிஸ்தான் விமானங்கள் ரோந்து சுற்றி வருகின்றன.


இந்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதியை இந்தியா கைது செய்ததற்கு பழிக்குப்பழியாக, ஒரு குண்டு வெடிப்பு வழக்கில் இந்தியர் என கூறப்படுபவரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. லாகூரில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளின் குடியிருப்பு உள்ளது. இது அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதி ஆகும். இங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில், நேற்றுமுன்தினம் காலை 9.20 மணிக்கு குண்டு வெடித்தது. இதில் ஒரு பெண் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, நேற்றுமுன்தினம் இரவு, முனிர் என்ற சதீஷ் ஆனந்த் சுக்லா என்ற இந்தியரை கைது செய்து இருப்பதாக பாகிஸ்தான் போலீசாரும், உளவு அமைப்பினரும் தெரிவித்துள்ளனர். இந்த நபர், கொல்கத்தாவில் வசித்து வருபவர் என்று பாகிஸ்தான் போலீசார் கூறியதாக அந்நாட்டு டெலிவிஷன்கள் தெரிவித்தன. சுக்லா, கடந்த காலத்தில் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றியவர் என்றும் போலீசார் கூறினர்.

சுக்லாவின் டெலிபோனை ஒட்டுக் கேட்டதன் மூலம், அவருக்கு குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து கைது செய்ததாகவும் அவர்கள் கூறினர். சுக்லாவிடம் இருந்து 3 போலி பாகிஸ்தான் அடையாள அட்டைகள், 3 கடிதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட இதர பொருட்களை கைப்பற்றியதாகவும் போலீசார் கூறினர்.

சுக்லா தனியாக கைது செய்யப்பட்டாரா? அல்லது அவருடன் வேறு யாராவது கைது செய்யப்பட்டார்களா? என்று தெரியவில்லை. ஆனால் சுக்லாவுடன் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தானைச் சேர்ந்த `ஜியோ நியூஸ்' தொலைக்காட்சி தெரிவித்தது.

தனது கூட்டாளிகள் 3 பேர் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் பஞ்சாப் மாகாணத்தில் கிறிஸ்துமஸையொட்டி, கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் விசாரணையின்போது போலீசாரிடம் சுக்லா கூறியதாக `ஜியோ நிïஸ்' தொலைக்காட்சி தெரிவித்தது.

இதற்கிடையே, லாகூரில் இந்தியரை கைது செய்து இருப்பதாக தங்களுக்கு பாகிஸ்தான் அரசு எந்த வகையிலும் தகவல் தெரிவிக்கவில்லை என்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பத்திரிகைகளை பார்த்துத்தான் தாங்கள் தகவல் தெரிந்து கொண்டதாக இந்திய தூதரக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில், ஒரு குற்றச்செயல் நடந்த அதே நாளில் கைது மேற்கொள்ளப்படுவது, இதுவே முதல்முறை ஆகும். பாகிஸ்தானில் கடந்த ஆண்டு 70 மனித வெடிகுண்டு தாக்குதல்களும், இந்த ஆண்டு 50 மனித வெடிகுண்டு தாக்குதல்களும் நடந்துள்ளன. ஆனால் எந்த தாக்குதலுக்கும் சம்பவ நாளிலேயே யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இது இந்தியாவை களங்கப்படுத்துவதற்காக, பாகிஸ்தான் நடத்தும் திட்டமிட்ட நாடகம் என்று கருதப்படுகிறது.

No comments: