Wednesday, December 24, 2008

புதுவையில் போலீஸ் அதிருப்தி எதிரொலி!. - அதிரடிப்படை தீவிர ரோந்து!.



புதிய டி.ஜி.பி. இன்று பதவி ஏற்கிறார் !.
போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் !.

புதுச்சேரி, டிச.25:


புதுச்சேரி நீதிமன்றத்தில் போலீசார் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, 13 இன்ஸ்பெக்டர்களும், 12 சப்இன்ஸ்பெக்டர்களும் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

போலீசாரின் போராட்டம் மீண்டும் வெடிக்கும் அபாயம் உள்ளதால் புதுவையில் அதிரடிப்படை போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். புதிய டிஜிபி வர்மா இன்று பதவியேற்கிறார்.

புதுச்சேரி உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், வக்கீல் அம்பலவாணன் ஆகியோரை லஞ்சம் வாங்கியதாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். புதுவை நீதிமன்றத்தில் வக்கீலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எஸ்.ஐ.க்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த போலீசார், நீதிமன்ற வளாகத்தில் கடந்த 19ம் தேதி தர்ணா நடத்தினர். இதனால், நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, எஸ்.ஐ.க்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

போலீசாரின் போராட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பற்றி விசாரிக்க தனி நபர்கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே பதிவு செய்தது. இவ்வழக்கில் விளக்கம் கேட்டு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

. இதன் தொடர்ச்சியாக, இரண்டு எஸ்.ஐ., 8 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.டிஜிபி கான் டெல்லிக்கு மாற்றப்பட்டார்.

13 இன்ஸ்பெக்டர்களையும், 12 சப்&இன்ஸ்பெக்டர்களையும் அதிரடியாகமாற்றி, ஐ.ஜி.வாசுதேவராவ் நேற்று உத்தரவிட்டார்.

புதிய டிஜிபியாக ஏ.கே.வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்றிரவு புதுவை வந்தார். இன்று அவர் பதவியேற்கிறார்.

சஸ்பெண்ட், இட மாற்றம் போன்ற அதிரடி நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்துள்ள போலீசார் திடீர் போராட்டம் நடத்தலாம் என உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சென்னை, கோவையில் இருந்து மத்திய ரிசர்வ் போலீசாரும், நெய்வேலியில் இருந்து மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை போலீசாரும் புதுச்சேரியில் குவிக்கப் பட்டுள்ளனர்.

இவர்களும் புதுச்சேரி அதிரடிப் படையினரும் நேற்று காலை முதல், புதுவை முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். புதுவைக்கு டிஐஜி தேவையில்லை என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புதுவை அரசு தந்தி அனுப்பியுள்ளது.

No comments: