Monday, December 29, 2008

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதலாக 1,700 போலீஸ் குவிப்பு!.


திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக கூடுதலாக 1,700 போலீசார் குவிக்கப்படுகிறார்கள். 7-ந்தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளியூர் ஆட்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை, டிச.30-

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் ஜனவரி மாதம் 9-ந் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க. சார்பில் லதா அதியமான், அ.தி.மு.க. சார்பில் முத்துராமலிங்கம், தே.மு.தி.க. சார்பில் தனபாண்டியன் உள்பட 26 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

அனைத்து கட்சியினரும் திருமங்கலம் தொகுதியில் முகாமிட்டு தீவிரமாக தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதாக கூறி அ.தி.மு.க-தி.மு.க.வினர் இடையே நேற்று முன்தினம் கடும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 230 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். இரு தரப்பினரும் தேர்தல் பார்வையாளர்களிடம் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டி.ராஜேந்திரன் நேற்று மதுரை வந்தார். திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு குறித்து கோர்ட்டு அருகே உள்ள போலீஸ் விடுதியில் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதில் தென்மண்டல ஐ.ஜி. சஞ்சீவ்குமார், மதுரை சரக டி.ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருமங்கலம் இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக 400 பேர் கொண்ட 3 யூனிட் போலீசார், பட்டாலியனை சேர்ந்த 6 கம்பெனி போலீசார் என 1,700 போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தொகுதியில் 11 போலீஸ் நிலையங்களிலும் தலா ஒரு போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2 போலீஸ் நிலையங்களுக்கு ஒரு கூடுதல் துணை சூப்பிரண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் கூடுதலாக 3 வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தொகுதி முழுவதும் பரவலாக அதிரடிப்படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பிரசாரத்தில் ஈடுபடும் முக்கிய பிரமுகர்களுக்கு தனி பாதுகாப்பு கொடுக்கப்படும். தொகுதியில் உள்ள அனைத்து திருமண மண்டபங்கள், விடுதிகளில் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த இடங்களில் வெளியூர் ஆட்கள் தங்கி இருந்தால் அவர்கள் வெளியேற்றப்படுவர். மெயின் ரோடுகளில் முக்கிய சந்திப்புகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளி மாவட்டத்தை சேர்ந்த வாகனங்கள் குறித்து கண்காணிக்கப்படும். கடந்த 2 நாட்களில் மட்டும் தேர்தல் மோதல் தொடர்பாக 17 வழக்குகளில் தி.மு.க.வினர் மீது 9 வழக்குகளும், அ.தி.மு.கவினர் மீது 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருமங்கலம் தொகுதியில் உள்ள 240 கிராமங்களில் 33 கிராமங்கள் பதற்றமான கிராமங்களாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 190 பூத்துகளில் 65 பூத்துகள் பதற்றம் நிறைந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அன்று அந்த பூத்துகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். யாரும் தவறான பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தொகுதியில் இன்று (நேற்று) முதல் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால் மேலும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்படுவர். மத்திய போலீஸ் படை தேவையில்லை என்று கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், திருமங்கலம் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை ஜனவரி மாதம் 7-ந் தேதி மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும் என்றும், இந்த காலக்கெடுவுக்கு பிறகு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வெளியூர் நபர்கள் அனைவரும் திருமங்கலம் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பிரசாரத்தை முடிக்க வேண்டும். அதன்படி, ஜனவரி மாதம் 9-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ள திருமங்கலம் தொகுதியில் 7-ந் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட வேண்டும். அப்போதுதான் தொகுதி வாக்காளர்கள் சாதாரணமாக வாக்களிக்க முடியும்.

தற்போது இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியூர்களில் இருந்து வந்துள்ளனர். அவர்களால் நியாயமான, நேர்மையான வாக்குப்பதிவு நடப்பதற்கான சூழல் பாதிக்கப்படலாம். இதைத்தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வெளியூர் நபர்கள் ஜனவரி மாதம் 7-ந் தேதி மாலை 5 மணிக்கு பிறகு தொகுதியை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, வெளியூர் நபர்கள் நுழையாதவாறு தொகுதி சீல் வைக்கப்படும்.

வெளியூர் நபர்களுக்கு விதிக்கப்படும் தடை, மாநில அரசு பாதுகாப்பு வசதியை அனுபவிக்கும் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும் பொருந்தும். மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட போலீஸ் அதிகாரி ஆகியோர் தேர்தல் பிரசார காலக்கெடுவுக்கு பின்னர் வாக்காளராக இல்லாத முக்கிய பிரமுகர்கள் யாரையும் தொகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது. முக்கிய பிரமுகர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது இந்த அதிகாரிகளின் கடைமை ஆகும்.

இவ்வாறு நரேஷ் குப்தா கூறியுள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா, திருமங்கலம் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று (30-ந் தேதி) மதுரை வருகிறார். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதே போன்று மத்திய தேர்தல் ஆணையத்தின் துணை கமிஷனர் ஜெயப்பிரகாஷ் வருகிற 2-ந் தேதி மதுரை வருகிறார். பின்னர் அவர் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.

No comments: