Sunday, December 14, 2008

பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் தயாராகிறது: மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் நாளை முதல் ஆலோசனை


புதுடெல்லி, டிச.15-
தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக் காலம் மே மாத நடுவில் முடிவடைகிறது.

எனவே, அதற்குள் பாராளுமன்ற தேர்தல் நடத்தி, புதிய பாராளுமன்றத்தை அமைக்க வேண்டும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கான கால அட்டவணை 2004-ம் ஆண்டு பிப்ரவரி 29-ந் தேதி அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் மார்ச் மாதம் தொடங்கியது. ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடந்தது.

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலும் இதே காலவரிசையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் தயாராகிறது. சமீபத்தில், `மினி பொதுத் தேர்தல்' என கருதப்பட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்தி முடித்த தேர்தல் கமிஷனின் கவனம், தற்போது பாராளுமன்ற தேர்தலின் பக்கம் திரும்பி உள்ளது.

இதற்காக, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணி ஜனவரி 1-ந் தேதிக்குள் முடிக்கப்படும் என்று சமீபத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியது.
வாக்காளர் பட்டியலை எந்த தவறும் இல்லாமல், துல்லியமாக தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக அக்கடிதத்தில் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கையாக, தேர்தல் பணிகள் குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் ïனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் என்.கோபாலசாமி, தேர்தல் கமிஷனர்கள் நவீன் சாவ்லா, எஸ்.ஒய்.குரைஷி ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர்.
நாளை முதல் 18-ந் தேதி வரை இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

முதல் நாளான நாளை தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம், டெல்லி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. இம்மாநிலங்களில் உள்ள மாநகராட்சிகளின் ஆணையர்களுடனும் ஆலோசனை நடத்தப்படும்.
வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட இதர மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் 17 மற்றும் 18-ந் தேதிகளில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டங்களில், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை தயாரித்தல், தேவையான பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் பற்றியும் தேர்தல் கமிஷன் விரிவாக ஆலோசனை நடத்துகிறது.
பாராளுமன்ற தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

No comments: