Sunday, December 21, 2008

"மும்பை தாக்குதல் தீவிரவாதிகளை ஒப்படைக்க மறுப்பதா?" - பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!.





கொல்கத்தா, டிச.22-

மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை ஒப்படைக்க மறுக்கும் பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

சமீபத்தில், மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 186 பேர் பலி ஆனார்கள். மேலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் காயம் அடைந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் காரணம் என்று தெரிய வந்தது. மேலும் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மலிடம் நடத்திய விசாரணையிலும் இது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீதும், பாகிஸ்தான் மண்ணில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் தீவிரவாதிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறு அந்த நாட்டு அரசை இந்தியா கேட்டுக் கொண்டது. மேலும் தீவிரவாதிகளின் பட்டியலை கொடுத்து அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொண்டது.

ஆனால் பாகிஸ்தான் இதை பொருட்படுத்தாததோடு, தீவிரவாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கொல்கத்தா வர்த்தக சபையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி; தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தான் அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

மும்பையில் நடந்த தாக்குதல், திட்டமிட்ட கொலை வெறி தாக்குதல் ஆகும். அது தற்செயலாக நடந்த ஒன்று அல்ல. இந்த தாக்குதலில் ஏற்பட்ட அப்பாவி மக்களின் உயிர் இழப்பு, பொருள் இழப்பு அனைத்தும் தற்செயலாக நடந்தவை என்று கூற முடியாது.

மும்பை தாக்குதலை காரணம் காட்டி பாகிஸ்தான் மீது ராணுவ தாக்குதல் நடத்த வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றன. இதுபற்றி முடிவு எடுக்கப்பட வில்லை.

மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் என்று அந்த நாட்டிடம் தெளிவாக தெரிவித்து இருக்கிறோம். அதற்கான ஆதாரங்களையும் கொடுத்து இருக்கிறோம். ஆனால் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்காமல் வெறும் பேச்சு பேசி வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்று அந்த நாடு கூறுகிறது. இதன் மூலம் இந்தியாவை சமாதானப்படுத்த முடியாது. மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கூறுகிறார். அப்படி என்றால் அவர்கள் வேறு கிரகத்தில் இருந்து வந்தார்களா?

அன்னிய மண்ணில் இருக்கும் தீவிரவாதிகளை இந்தியா விரட்டிச் சென்று பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்த நாட்டின் அரசுதான் இதை செய்ய வேண்டும்.

தீவிரவாதிகள் மீது உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொள்ள வேண்டும். அதுதான் இன்றைய நிலைக்கு, பாகிஸ்தான் அரசு செய்ய வேண்டியது. இந்தியாவில் நடந்த தாக்குதல்களுக்கு காரணமானவர்களை, இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும். தீவிரவாதிகளை ஒழிப்பதில் சர்தாரியின் அரசு ஒத்துழைக்க வேண்டும்.

தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்திவிட்டு பாகிஸ்தானில் சென்று பதுங்கிக் கொள்கிறார்கள். அவர்களை பிடித்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி; அல்லது இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி.

பாகிஸ்தானின் ராணுவ மந்திரி சவுத்ரி அகமது முக்தார் சமீபத்தில் பேசும் போது, "ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசார், வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்'' என்று கூறி இருந்தார். ஆனால் 3 நாட்களுக்கு முன் அவர், "அசார் எங்கள் நாட்டில் இல்லை'' என்கிறார். இதுபோன்று மாறுபட்ட பேச்சு பேசுகிறார்கள்.

இதற்கு பதிலாக பாகிஸ்தான் அரசு, தீவிரவாதிகள் மீது நேரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதில் கிடைக்கும் முடிவை உலக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். மனித உரிமைக்கு எதிரானது தீவிரவாதம். இதை உலக அளவில் ஒடுக்க வேண்டியது ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்தின் கடமை.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

No comments: