Thursday, December 18, 2008

திருமங்கலத்தில் மும்முனை போட்டி!.தி.மு.க-அ.தி.மு.க-தே.மு.தி.க. இடையே பலப்பரீட்சை



திருமங்கலம் சட்டசபை தொகுதியில் தி.மு.க - அ.தி.மு.க - தே.மு.தி.க. இடையே மும்முனை போட்டி உருவாகி இருக்கிறது. வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

சென்னை, டிச.19-

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜனவரி) 9-ந் தேதி நடக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. வரும் 22-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.



திருமங்கலம் தொகுதியில் லதாஅதியமான் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுவார் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்து விட்டார்.

தே.மு.தி.க. வேட்பாளராக தனபாண்டியன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அ.தி.மு.க. வேட்பாளராக ம.முத்துராமலிங்கம் போட்டியிடுவதாக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

அ.தி.மு.க. ஆட்சிமன்றக் குழு எடுத்த முடிவின்படி, வருகின்ற 9-1-2009 அன்று நடைபெற உள்ள திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளராக, மதுரை புறநகர் மாவட்ட கழக துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ம.முத்துராமலிங்கம் நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு தலைவராக கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வமும், தேர்தல் பணிக்குழு துணைத் தலைவராக கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ம.முத்துராமலிங்கம் கடந்த 1996-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர் 2000-ம் ஆண்டு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.

ம.முத்துராமலிங்கம் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதற்காக திருமங்கலம் சந்தைபேட்டையில் இருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். அவருடன் அ.தி.மு.க.வினர் முன்னணி தலைவர்கள் பலரும் வந்தனர்.
பகல் 12.50 மணிக்கு துணை தேர்தல் அதிகாரி சேதுராமனிடம் அவர் மனுதாக்கல் செய்தார்.

முன்னதாக காலை 11.30 மணிஅளவில் தே.மு.தி.க. வேட்பாளர் தனபாண்டியன் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருமங்கலம் தொகுதியில் பா.ஜனதா போட்டியிடாது என்று அந்த கட்சி அறிவித்துள்ளது. எனவே தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. இடையே மும்முனை போட்டி உருவாகி இருக்கிறது.

முக்கிய வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுதாக்கலும் மும்முரமாக நடந்து வருவதால் திருமங்கலம் தேர்தல் களம் இப்போதே சூடு பிடித்து விட்டது.

வெளிïர்களில் இருந்து கட்சி தலைவர்களும், பிரமுகர்களும், தொண்டர்களும் திருமங்கலத்தை நோக்கி அணிவகுக்க தொடங்கிவிட்டதால் திருமங்கலம் நகரம் கலகலப்பாக காணப்படுகிறது.

No comments: