Monday, December 29, 2008

வங்கதேச பொதுத்தேர்தல்: ஷேக் ஹசீனா அ‌மோக வெற்றி!.


தாகா:

வங்கதேசத்தில் பொதுத்தேர்தலில் ஷேக் ஹசீனா அமோக வெற்றி பெற்றார்.

வங்கதேசத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, ஏழு ஆண்டு இடைவெளிக்கு பின் நேற்று பொதுத்தேர்தல் நடந்தது. தேர்தலையொட்டி வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் உட்பட ஆறு லட்சம் பாதுகாப்பு படையினர், கண்காணிப்பில் ஈடுபட்டனர்.மொத்தம் 300 இடங்களுக்கான தேர்தலில் 1,552 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முன்னாள் பிரதமர்கள் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கும், கலிதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தலையொட்டி, நாடு முழுவதும் 35 ஆயிரத்து 263 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 8 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியதுமே, ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர். பல ஓட்டுச் சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. குறிப்பாக, இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் ஓட்டளித்தனர்.
பெரிய அளவில் வன்முறை எதுவும் இல்லாமல், தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. சர்வதேச நாடுகளில் இருந்து வந்துள்ள பார்வையாளர்கள், தேர்தல் நடவடிக்கையை கண்காணித்தனர்.

சில இடங்களில், வன்முறையில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர், கைது செய்யப்பட்டனர்.தாகா, ஆதம்ஜி கல்லூரி ஓட்டுச் சாவடியில் ஓட்டுப் போட்ட ஷேக் ஹசீனா, "எதிர்க்கட்சியினர் பெருமளவில் கள்ள ஓட்டுப் போடுகின்றனர். குறிப்பாக, மேற்கு சுவதான்கா, நோயகலி அகிய பகுதிகளில் அதிகளவில் முறைகேடு நடந்துள்ளது. இருந்தாலும் எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும்' என்றார்.தாகா, சிட்டி கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த ஓட்டுச் சாவடியில் கலிதா ஜியா ஓட்டுப் போட்டார்.

ஓட்டுப் பதிவு முடிந்ததும், உடனடியாக ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 221 இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றார். கலிதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சிக்கும் வெறும் 29 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இவைதவிர ஜாத்தியா கட்சிக்கு 27இடங்களும், வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கு 27இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 11 இடங்களும் கிடைத்தது. இதன்மூலம், வங்கதேசத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவ ஆதரவுடன் நடக்கும் இடைக்கால ஆட்சி முடிவடைந்து, ஷேக் ஹசீனா தலைமையில் மீண்டும் ஜனநாயக ஆட்சி மலரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

No comments: