Wednesday, December 17, 2008

"மலேசியாவில் தவிக்கும் 21 தமிழர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள்" பிரணாப் முகர்ஜிக்கு, கருணாநிதி கடிதம்




புதுடெல்லி,டிச.18-

மலேசியாவில் கடந்த 6 மாதங்களாக தவிக்கும் 21 தமிழர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யும்படி முதல்-அமைச்சர் கருணாநிதி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தை கப்பல், நெடுஞ்சாலை மற்றும் தரைவழிப் போக்குவரத்து மந்திரி டி.ஆர்.பாலு பிரணாப் முகர்ஜியிடம் அளித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த 21 இளைஞர்களை ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக உமர் அலி என்பவர் மலேசியாவுக்கு அழைத்துச் சென்று இருந்தார். இதற்காக இளைஞர்கள் ஒவ்வொருவரும் உமர் அலிக்கு தலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் கொடுத்தனர்.

ஆனால் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் சென்றதும் அவர்களை உமர் அலி ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க வில்லை. உமர் அலியின் பிரதிநிதி 21 பேரின் பாஸ்போர்ட்டுகளையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டார். இதனால் தாய் நாட்டுக்கும் திரும்ப முடியாமல் அவர்கள் 21 பேரும் நிர்கதியாக மலேசியாவில் தவித்தனர்.

பாஸ்போர்ட் இல்லாமல் தங்கி இருந்த அவர்கள் 21 பேரையும் மலேசியா போலீசார் கைது செய்தனர். அவர்கள் கோலாலம்பூரில் உள்ள புகழ் பெற்ற `பத்து கேவ்ஸ்' என்ற கோவிலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே அவர்களை அழைத்துச் சென்ற உமர் அலி கடந்த அக்டோபர் மாதம் மரணம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

21 தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு திரும்பி வரமுடியாமல் மலேசியாவில் தவிக்கும் தகவல் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்யும்படி அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும் முதல்-அமைச்சரிடம் முறையிட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யும்படி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தை முதல்-அமைச்சர் கருணாநிதியின் உத்தரவின்படி, மத்திய கப்பல், நெடுஞ்சாலை மற்றும் தரைவழிப் போக்குவரத்து மந்திரி டி.ஆர்.பாலு, வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜியிடம் நேற்று முன்தினம் இரவு ஒப்படைத்தார். 21 பேரையும் விரைவில் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கவும், அவர்கள் ஏமாற்றப்பட்டது குறித்து விசாரணை நடத்தவும் சம்பந்தப்பட்ட மலேசிய அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யும்படி பிரணாப் முகர்ஜியை டி.ஆர்.பாலு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
21 பேரையும் தமிழகத்துக்கு அழைத்துவர அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதாக பிரணாப் முகர்ஜி, டி.ஆர்.பாலுவிடம் உறுதி அளித்தார்.

No comments: