Wednesday, December 17, 2008

`ஸ்பெக்ட்ரம்' விவகாரம் பற்றி பாராளுமன்ற குழு விசாரணைக்கு சபாநாயகர் மறுப்பு!பாராளுமன்றத்தில் இடதுசாரிகள், ம.தி.மு.க. வெளிநடப்பு!



புதுடெல்லி, டிச.18-

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு குறித்து விவாதம் நடத்தவும், அது குறித்து பாராளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்தவும் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அனுமதி மறுத்தார். இதனால், இடதுசாரிகள் மற்றும் ம.தி.மு.க.வை சேர்ந்த எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர்.

பாராளுமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று பிரச்சினை எழுப்பினர்.

இது தொடர்பாக ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்த மார்க்சிஸ்டை சேர்ந்த பாசுதேப் ஆச்சார்யா பேசும்போது, ``சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய ஊழலால் நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொலை தொடர்பு அமைச்சகத்தால் 2-ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்தது குறித்து பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும்'' என்றார்.

ஆனால், அதற்கு சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அனுமதி மறுத்தார். `சபையில் ஒரு பிரச்சினை குறித்து விவாதம் நடத்துவதற்கு என்று சில நடைமுறைகள் உள்ளன. உறுப்பினர் ஆச்சார்யாவின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்கிறேன். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு அனுமதிக்க முடியாது'' என்றார்.

இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். சிறிது நேரம் கோஷம் எழுப்பிய பிறகு, இடதுசாரி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும், ம.தி.மு.க. எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக `ஸ்பெக்ட்ரம்' முறைகேடு குறித்து விவாதம் நடத்த அனுமதி கோரி ஒத்திவைப்பு நோட்டீசை பாசுதேப் ஆச்சார்யா கொடுத்து இருந்தார். சபாநாயகர் அனுமதி மறுத்ததும், `பாராளுமன்றத்துக்கு வெளியே காரசாரமாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம் குறித்து விவாதிக்க பாராளுமன்றத்துக்குள் அனுமதி மறுக்கப்படுகிறது'' என்றார்.

மேலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் இடதுசாரி, பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதனால், கோபமடைந்த சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, ``பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று கேட்கிறீர்கள். ஆனால், அந்த குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தால் அதை விமர்சித்து பேசுகிறீர்கள். பாராளுமன்ற கூட்டுக் குழு அளித்த அறிக்கையை விமர்சித்தால் நடவடிக்கை எடுப்பேன். அதுபோன்ற செயலை என்னால் அனுமதிக்க முடியாது'' என்றார்.

பாராளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக ஓட்டுப்போட எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் குறித்து விசாரித்த பாராளுமன்ற கூட்டுக் குழுவினர், `அமர்சிங் மற்றும் சோனியாவின் ஆலோசகர் அகமதுபடேல் ஆகியோரை விடுவித்து நேற்று முன்தினம் அறிக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கையை பா.ஜனதாவை சேர்ந்த மல்கோத்ரா, மார்க்சிஸ்டை சேர்ந்த முகமது சலிம் ஆகியோர் நிராகரித்து விட்டனர். இதைத்தான் சபாநாயகர் சுட்டிக் காட்டினார்.

உடனே பா.ஜனதாவை சேர்ந்த அனந்த குமார் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து, `பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அறிக்கையை விமர்சிக்க எங்களுக்கு உரிமை உண்டு' என்றனர். இந்திய கம்ïனிஸ்டு தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, ``பாராளுமன்ற கூட்டுக் குழு அறிக்கையில் சில முக்கியமான தவறுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன'' என்றார்.

இதற்கிடையே, அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி பாராளுமன்றத்துக்குள் பணத்தை கொண்டு வந்த மூன்று பா.ஜனதா எம்.பி.க்கள் உள்ளிட்டோர் மீது தகுந்த புலனாய்வு விசாரணை நடத்துமாறு உள்துறை அமைச்சகத்துக்கு சபாநாயகர் பரிந்துரை செய்தார்.

No comments: