Thursday, December 25, 2008

காங்கிரஸ் கட்சி 124-வது ஆண்டு தொடக்க நாளை கொண்டாடுங்கள்!.- தொண்டர்களுக்கு கே.வி.தங்கபாலு அழைப்பு!.


சென்னை, டிச.26-

காங்கிரஸ் கட்சியின் 124-வது ஆண்டு தொடக்க நாளை 28-ந் தேதி கொண்டாட வேண்டும் என்று கே.வி.தங்கபாலு கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம் தொடங்கி 124-ம் வயதை எட்டுகிற நாள் டிசம்பர் 28-ந் தேதி. உலக அரசியல் அரங்கில் நீண்ட நெடிய தியாக வரலாற்றையும், இந்தியாவில் மட்டுமல்லாது வேறு எந்நாட்டு அரசியல் கட்சியிலும் இல்லாத வகையில் அதிக உறுப்பினர் எண்ணிக்கையையும் கொண்டு நிலைத்த புகழ்பெற்ற மூத்த பேரியக்கம் இது.

மகாத்மா காந்தியின் அகிம்சா நெறி, நேருவின் 5 ஆண்டுத் திட்டம், அணிசேரா சர்வதேச கொள்கை, இந்திரா காந்தியின் வறுமையை ஒழிப்போம், பசுமைப்புரட்சி, ராஜீவ்காந்தி தொடங்கி வைத்த விஞ்ஞான தொலைத் தொடர்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, நரசிம்மராவ் காலத்தின் புதிய பொருளாதாரக் கொள்கை ஆகியவை இந்தியாவின் அனைத்துத் துறைகளின் கட்டமைப்பையும் பிரமாண்டமாய் உருவாக்கிய அற்புத சாதனைகள்.

இம்மாபெரும் சாதனைகளை எல்லாம் ஒருங்கிணைத்து இன்றைக்கு வெற்றியுடன் நடைமுறைப்படுத்தி நவீன விஞ்ஞான இந்தியாவின் மகத்தான வளர்ச்சிக்கு மூலாதாரமாய் விளங்குவதோடு, நாட்டின் அணுசக்தி மற்றும் மின்சார உற்பத்திக்கு புரட்சிகரமான திருப்புமுனையாய் அமைந்த அமெரிக்க நாட்டுடனான ஒப்பந்தம், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம், தகவல் அறியும் சட்டம், 71 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் ரத்து, சுலபமான கல்விக்கடன் போன்ற சமுதாய மறுமலர்ச்சிக்கான சிறப்பான செயல்பாடுகளால் சோனியா காந்தியின் வழிகாட்டுதலில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உலகப்புகழின் உச்சியில் நின்று பெருமை பெற்று திகழ்கிறது.

இப்பெருமைகளோடு இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் இளைஞர்களின் நிகரற்ற தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் பேரியக்க வரலாற்றின் தொடர்ச்சி என்பதையும் மக்களுக்கு குறிப்பாக, இளைஞர்களுக்கு நினைவுறுத்துவது அனைத்து காங்கிரஸ் சகோதர, சகோதரர்களின் பெரும் பொறுப்பாகும்.

எனவே தமிழகத்தின் அனைத்து மாவட்ட, நகர, வட்டார கிராம காங்கிரஸ் அமைப்புகளின் சார்பில் ஆங்காங்கே உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளும் காங்கிரஸ் 124-ம் ஆண்டு தொடக்க நாள் விழாவை 28-ந் தேதி சிறப்பாக ஏற்பாடு செய்து மத்திய அரசுக்கு வலிமை சேர்த்திட பெரிதும் வேண்டுகிறேன்.
இவ்வாறு கே.வி.தங்கபாலு கூறியிருக்கிறார்.

No comments: