Wednesday, December 31, 2008

"இன்று 2009 பிறக்கிறது" - தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து!.





சென்னை, ஜன.1-

புத்தாண்டையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2008-ம் ஆண்டு முடிந்து இன்று 2009-ம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி

சமத்துவம், சமுதாய நல்லிணக்கம், மதச்சார்பின்மை, அரசியல் சமூக அறிவியல் பொருளாதார நிலைகளில் தமிழகம் நிலையான-வலுவான முன்னேற்றம் காண அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என புத்தாண்டு நாளில் உறுதி ஏற்போமாக என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
2008-ம் ஆண்டு முடிந்து இன்று (வியாழக்கிழமை) 2009-ம் ஆண்டு பிறக்கிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் கருணாநிதி மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டு உள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-



புத்தாண்டு 2009 பிறக்கிறது! "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்'' என்பதைக் கொள்கை நெறியாக நமக்கு வகுத்துத் தந்த மாமேதை பேரறிஞர் அண்ணா பிறந்த நூற்றாண்டில் மலர்கிறது, இந்தப் புத்தாண்டு!

2006-ம் ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை புதிய வரிவிதிப்பு எதுவுமின்றி - ஏராளமான வரிச்சலுகைகளுடன்:- விவசாயிகளின் துயர்தீர 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி; நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு இலவச நிலம்; சத்துணவுடன் வாரம் மூன்றுமுறை முட்டைகள் - வாழைப்பழங்கள்; கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய்; ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 20 ஆயிரம் ரூபாய்; இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள்;



எரிவாயு இணைப்புடன் இலவச அடுப்புகள், ஏழைத் தொழிலாளர் நலம் பெற அமைப்புசாரா நல வாரியங்கள் முதலான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி - 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கும் திட்டம்;- கிராமப்புற மக்களின் அவசர மருத்துவ உதவிக்கு நடமாடும் மருத்துவக்குழு ஊர்திகள் திட்டம்; - பள்ளிச்சிறார் இருதயநோய் அறுவை சிகிச்சைத் திட்டம்; அரசுப் பணியாளர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்;

385 ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்களுக்கும் வாகனங்கள்; மானிய விலையில் 10 மளிகைப் பொருள்கள்;


தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம்; தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம்; தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம்; தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்; அருந்ததியர்க்கு தனி உள் இட ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை!

-எனும் புதிய திட்டங்களையும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர் அனைவரும் பலன் பெற்றிடும் வகையில் நடைமுறைப்படுத்திய 2008-ம் ஆண்டு "தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள்'' எனச் சட்டம் இயற்றித் தந்த வரலாற்றுப் பெருமையோடு விடை பெற; தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் விழாவைச் சீரோடும் சிறப்போடும் கொண்டாடுவதற்கு, சர்க்கரைப் பொங்கல் தயாரிக்கத் தேவையான பச்சரிசி, வெல்லம் முதலிய பொருள்களை எல்லோர்க்கும் வழங்கும் புதிய திட்டத்தைத் தொடங்கி வைப்பதுடன், ஏழை எளியோர்க்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி 2009 புத்தாண்டு மலர்கிறது!



இந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டுத் திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் உரித்தாகுக!
சாதி மதங்களின் பெயரால் தீவிரவாதச் செயல்கள் எந்தவொரு பகுதியிலும் தலையெடுப்பதை முற்றிலும் தடுத்திடுவோம் எனும் உணர்வோடு 2009-ம் ஆண்டினை வரவேற்போம்! சமத்துவம், சமுதாய நல்லிணக்கம், மதச் சார்பின்மை, அரசியல் சமூக அறிவியல் பொருளாதார நிலைகளில் தமிழகம் நிலையான - வலுவான முன்னேற்றம் காண அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என இந்தத் திருநாளில் உறுதியேற்போமாக!

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.

ஜெயலலிதா
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

மலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனதருமை தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வறுமை நீங்கி வளம் பெறவும், இருள் நீங்கி ஒளி பிறக்கவும், குடும்ப ஆட்சி ஒழிந்து மக்களாட்சி மலரவும், தீவிரவாதம் வேரறுக்கப்பட்டு அமைதி தழைக்கவும், அனைவரின் வாழ்விலும் மந்தம் அகன்று மந்தகாசம் பொங்கவும், இந்த புத்தாண்டு திருநாளில் நாம் அனைவரும் சபதம் ஏற்போம்.

இந்த புத்தாண்டு மக்கள் அனைவருக்கும் எல்லா நலன்களையும், வளங்களையும் வழங்குகிற ஆண்டாக விளங்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து, அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களின் துயரங்கள் நீங்கி, இலங்கையில் துன்பக்கடலில் தவிக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு உரிமை வாழ்வும், விடியலும் பூக்கும் என்ற நம்பிக்கையோடு, தமிழக மக்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
தங்கபாலு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நலன் எனும் மாபெரும் சக்தி நாடெங்கும் ஓங்கி உயர்ந்திட அமைதி, சமாதானம், மத நல்லிணக்கம் மிளிர்ந்திட அனைவருக்கும் ஒன்றுப்பட்டு உழைப்போம். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உலகெங்கும் வாழும் அனைத்து மக்களுக்கும், குறிப்பாக தமிழ் இன சகோதர, சகோதரிகளுக்கும் வழங்கி மகிழ்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தா.பாண்டியன்

இநதிய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியிருப்பதாவது:-

வளமும், மனித நேயமும், தமிழ்ச் சமுதாயம் படைத்திட புத்தாண்டு நமக்கு சக்தியாகவும் வெற்றியையும் தந்திட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தா.பாண்டியன் கூறியுள்ளார்.

விஜயகாந்த்

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் கூறியிருப்பதாவது:-

2009-ம் ஆண்டு அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமான ஆண்டாகும். பாராளுமன்ற தேர்தல் இந்த ஆண்டில் தான் வர உள்ளது. தீவிரவாதம் இந்தியாவின் ஒற்றுமைக்கே சவாலாக உள்ளது. இலவச கணினி பயிற்சி, 1 லட்சம் பேருக்கு வேலை போன்றவற்றை செயலாக்கி வருகிறோம். தே.மு.தி.க. நேர்மையானவர்களை கொண்டு நல்ல அரசியல் நடத்த பாடுபட்டு வருகிறது. இந்த புத்தாண்டு தமிழ்நாட்டு வரலாற்றில் புதிய திருப்புமுனையாக அமைய வேண்டுமென்ற அடிப்படையில் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர்.கழகம்

எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறியிருப்பதாவது:-

2008-ம் ஆண்டு இலங்கை தமிழ் மக்களுக்கு நேர்ந்துவரும் கொடுமைகள் தமிழ் மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த குறைகளைஎல்லாம் 2009-ம் ஆண்டில் தீர்த்து முழு மகிழ்வுடன் தமிழ் மக்கள் வாழ எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.

திருநாவுக்கரசர் எம்.பி.

பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய செயலாளர் திருநாவுக்கரசர் எம்.பி. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "புத்தாண்டில் தீவிரவாதம், வன்முறை, வறுமை, அறியாமை போன்ற தீமைகள் அகன்று அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வாழ்த்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.

மத்தியமந்திரி ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இனம், மதம், மொழி என்ற எல்லைகளை கடந்து தேசத்தின் வளர்ச்சிக்காக உழைப்போம். அனைவருக்கும் என் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பிறக்கும் 2009-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை (தை முதல் நாளை) தமிழர்கள் முதன்முதல் கொண்டாடிட உரிமை பெற்று தந்த ஆண்டு. தன்மானம், தன்னிறைவு, தன்னம்பிக்கையுடன் வாழ வழி வகுக்கும் ஆண்டாகவும் அமையும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

புதியநீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "இன்றைய நாள், நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய நாள். நமது நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் ஆண்டாகவும் அமைய வேண்டும். இந்த இனிய நாளில் நம் நாட்டு மக்கள் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று வாழ இறைவனை வேண்டி, அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

ஜெகத்ரட்சகன்

ஜனநாயக முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

புத்தாண்டு பிறக்கின்ற இந்த வேளையில் புத்தர், இயேசு, காந்தி போன்ற மானுட வர்க்கத்தின் உயர்ந்த மானுடர்கள் போதித்த அன்பு, அறம், அமைதி என்ற மூன்றையும் நினைவில் கொண்டு மானுட வர்க்கம் உய்யும் வழியை எண்ணிப்பார்க்க வேண்டும். அன்பும், அமைதியும், அறவழியில் தான் மனிதநேயத்தை வளர்க்க முடியும். அந்த மனிதநேயத்தை வளர்க்கும் இந்த புத்தாண்டு. இந்த புத்தாண்டை எதிர்நோக்குவோர் மனிதநேயமும், அன்பும் மலரட்டும் என்பதுமே இந்த புத்தாண்டில் நாம் எதிர்நோக்கும் இனிய செய்தி.

இந்த இனிய புத்தாண்டில் தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி உறுதியான, பொறுப்புமிக்க, ஆற்றல் மிகுந்த அரவணைப்பும், தலைமையும் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையும், வளமான எதிர்காலமும் அமையும் என்ற நம்பிக்கையோடு எனது வாழ்த்து செய்தினை ஜனநாயக முன்னேற்றக்கழகம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமாதானப்பிரபு திருச்சபைகளின் சீனியர் பிஷப் பி.ஏ. ஜேம்ஸ் சந்தோஷம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தேசத்திற்காக பாடுபடுகிற அத்தனை தலைவர்களையும் இறைவன் ஆசீர்வதிக்கும் படியாகவும், உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து, நாடும் நாட்டு மக்களும் இன்பற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்'' என்று கூறியுள்ளார்.

கார்த்தி ப.சிதம்பரம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சையதுசத்தார், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், தேசிய லீக் கட்சி தலைவர் எம்.பஷீர் அகமது, பாரதீய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் கனிபாய், தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரி அருண், அம்பேத்கார் மக்கள் கட்சி நிறுவன தலைவர் மத்தியாஸ்.

ராமசாமி படையாச்சியார் வாழப்பாடியார் பேரவை தலைவர் வி.தேவதாஸ், தமிழ்நாடு மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் பி.முகமது இஸ்மாயில், பொதுச்செயலாளர் வி.பி.இதயவண்ணன், இஸ்லாமிய இலக்கிய கழக துணை தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், பொதுச்செயலாளர் எம்.எம்.இதயத்துல்லா.

தமிழக கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் பொது நல சங்க மாநில தலைவர் சகிலன், பாட்டாளி மக்கள் முன்னேற்ற கட்சி நிறுவன தலைவர் சி.என்.ராமமூர்த்தி, வி.ஜி.பி. உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசம், அம்பேத்கார் முன்னணி கழக மாநில பொதுச்செயலாளர் திண்டிவனம் ஸ்ரீராமுலு, தென் இந்திய பொதுநலச் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.வி.ராஜேந்திரன், ஜனதா தளம் (ஐக்கியம்) கட்சியின் தலைமை பொதுச்செயலாளர் டி.ராஜகோபால்.

பேரவை-கட்சிகள்

தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சிசுந்தரம், சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை பொதுச்செயலாளர் மேலை நாசர், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சி தலைவர் சேக் தாவூத், அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மு.பன்னீர் செல்வம், அனைத்து செட்டியார்கள் முன்னேற்ற பேரவையின் தலைவர் கே.சி.அருணாசலம்.
புரட்சிபாரதம் கட்சியின் மாநில தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி, தமிழர் தந்தை ஆதித்தனார் தமிழ்பேரவை நிறுவன தலைவர் ஏ.காமாட்சி பாண்டியன், சென்னை செடியூல்டு கேஸ்ட் நலசங்கத்தின் தலைவர் ராஜசேகர், தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் தலைவர் பொன்குமார்.

ராஜீவ்மக்கள் காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி.நரசிம்மன், ராஷ்டீரிய லோக் தள் கட்சி தலைவர் இளஞ்சூரியன், தமிழ்நாடு ஜனதா தளத்தின் பொதுசெயலாளர் ஜான்மோசஸ், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல்அலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.காதர்மொகைதீன், ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக மாநில தலைவர் மாமல்லன் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ப.சிதம்பரம்

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

இன்றுடன் 2008-ம் ஆண்டு நிறைவுபெற்று, 2009-ம் ஆண்டு தொடங்க இருக்கிறது. 2008-ம் ஆண்டின் தொடக்கம் முதல் பொருளாதாரச் சூழ்நிலை உலகத்திற்கே ஒரு சவாலாக இருந்ததை நாம் மறக்க முடியாது.

பொருளாதார சவாலை நாம் எதிர்கொண்ட வேளையில் சில தீய அந்நிய சக்திகள் இந்தியாவில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டன. இந்த சவாலையும் எதிர்கொண்டு இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. பொது மக்களின் முழு ஒத்துழைப்புடன் மட்டுமே அரசின் முயற்சிகள் வெற்றி பெற முடியும்.

அமைதியான, வலிமை பாரதம் உருவாக 2009-ம் ஆண்டும், தொடர்ந்து வரும் ஆண்டுகளுக்கும் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு வாழ்த்து செய்தியில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில செயலாளர் என்.வரதராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பல முக்கியமான நிகழ்வுகளை சந்தித்த 2008 ஆண்டு விடைபெறுகிறது. தமிழகத்தில் பேய் மழை-வெள்ளத்தின் பாதிப்புகள் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை அவலம் நிறைந்ததாக ஆக்கியுள்ளன. இந்த பின்னணியில் எதிர் வரும் 2009-ம் ஆண்டு மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவதாக அமையட்டும்''என்று கூறியுள்ளார்.

சரத்குமார்

அகில இந்திய சமத்துவமக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "கடுமையான பொருளாதார சரிவுகளால் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் உலக நாடுகள் அத்தகைய சரிவுகளிலிருந்து மீண்டு நல்வாழ்வதற்கான தொடக்கம் இன்று புதியதாக பிறக்கும் புத்தாண்டில் இருந்து மலரட்டும். ஏழை எளிய மக்களின் வாழ்வுநிலை உயர்ந்து மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதை புத்தாண்டு தின வாழ்த்தாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "உழைக்கும் மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி உருவாக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்வரும் 2009-ம் ஆண்டையும் மகிழ்ச்சியுடன் வரவேற்போம். தமிழீழம், தமிழீழத்துக்கு எதிரான அரசியல் கட்சிகளை ஒதுக்கித் தள்ளி விட்டு, ஆதரவான சக்திகள் ஒன்று சேர்ந்து ஆளும் தி.மு.க. தலைமையில் அணி திரள இந்த புத்தாண்டு ஏதுவாக அமைந்திட வேண்டுமென எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமார், ஜெ.எம்.ஆரூன் எம்.பி. ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

No comments: