Monday, December 22, 2008

"விடுதலைப்புலிகளை அடியோடு ஒழிப்போம்" - "போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை" - ராஜபக்சே திட்டவட்ட அறிவிப்பு!.



கொழும்பு, டிச.23-

"விடுதலைப்புலிகளை அடியோடு அழித்து ஒழிப்போம் என்ற ராஜபக்சே, மீண்டும் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை'' என்று திட்டவட்டமாக அறிவித்தார்.


விடுதலைப்புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்றும் முயற்சியில் இலங்கை ராணுவத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் ஆவேச பதிலடியால், பல இடங்களில் இருந்து ராணுவம் பின்வாங்கி வருகிறது. ஏராளமான சிங்கள சிப்பாய்கள் இந்த போரில் பலியாகி வருகிறார்கள்.

இந்த நிலையில், இலங்கை அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு விவாதம் ஒன்றில் பங்கேற்ற ராஜபக்சே, விடுதலைப்புலிகளுடன் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-


"போர் நிறுத்தம், நாட்டை பிளவுபடுத்துவதுடன், பிரிவினைவாதிகள் தங்கள் நிலையை வலுப்படுத்திக்கொள்ள வகை செய்துவிடும். வன்னி பகுதியில் அப்பாவி பொது மக்களை கேடயமாக பயன்படுத்தி வரும் விடுதலைப்புலிகள் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

இல்லையென்றால், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டு, அவர்களை வரலாற்று புத்தகத்தில் இருந்தே அடியோடு அழித்து ஒழித்துவிடுவோம். ராணுவத்தின் வெற்றியை திசை திருப்பி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சக்திகளை முறியடித்து, இலங்கையில் 2009-ம் ஆண்டுக்குள் தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் என்று சபதம் ஏற்கிறேன்''.

இவ்வாறு ராஜபக்சே கூறினார்.


இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு, இலங்கையில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த 1983-ம் ஆண்டில் முதலில் தடை விதிக்கப்பட்டது. அடுத்து 1998-ல் 2-வது முறையாக தடை விதிக்கப்பட்டது.

நெருக்கடி நிலை நீக்கப்பட்டதை தொடர்ந்து முதல் தடை, 1987-ம் ஆண்டிலும், நார்வே நாட்டின் தலையீட்டின் பேரில் 2002-ல் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து 2-வது தடையும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்படும் என்று ராஜபக்சே அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments: