Saturday, December 20, 2008

"இலங்கை தமிழர் பிரச்சினை நமக்குள் சண்டையிட்டுக் கொள்வது தவிர்க்கப்படவேண்டும்" - டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்!.



சென்னை, டிச.21-

இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழ் நாட்டில் நமக்குள் சண்டையிட்டுக் கொள்வது தவிர்க்கப்படவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் போர்ப்படையினர் நடத்தி வரும் ``தமிழினப் படுகொலை'' போரில் நாள்தோறும் தமிழர்கள் கொல்லப்பட்டு வருவதைத் தடுத்து நிறுத்தி, அவர்களின் நலனைக் காக்க வேண்டும் என்றும், அவர்களது நியாயமான உரிமைகளுக்குப் பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும், தமிழகத்தின் சார்பில் இதுவரையில் ஒன்றுபட்டு குரல் கொடுத்து வந்திருக்கிறோம்.

நமது ஒன்றுபட்ட இந்தக் கோரிக்கைக்கு இந்திய அரசு செவிமடுத்து சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


பா.ம.க. நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக டெல்லியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான பாரதீய ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் சிவசேனை, ராஷ்ட்ரிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி, சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதாதளம் முதலான கட்சிகளின் தலைவர்களை சந்தித்து இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்களை எடுத்துக் கூறி அவர்களது இன்னல்களைத் தீர்க்க ஆதரவு கோரியிருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், இந்தியா தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழகத்தின் ஒட்டுமொத்தமான கோரிக்கைக்கு இந்தத் தலைவர்கள் எல்லோரும் ஆதரவுக் குரல் கொடுக்க உறுதியளித்திருக்கிறார்கள்.

ஈழத் தமிழர்களின் நலனை காக்க அனைத்து இந்திய அளவிலான கட்சிகளின் ஆதரவு இப்படி திரண்டு வரும் நேரத்தில், இங்கே இப்பிரச்சினையில் தமிழகம் ஒன்றுபட்டு நிற்கிறது என்பதைக் கட்டிக்காப்பது நமது தலையாய கடமையாகும். துரதிர்ஷ்டவசமாக கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் நடந்து வரும் சில நிகழ்வுகள் இந்த ஒற்றுமையைக் குலைப்பதாக இருக்கிறது என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களும், இந்தியா உள்ளிட்ட வேறு பல நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள ஈழத் தமிழர்களும், விரைவில் சொந்த ஊர்களுக்குத் திரும்பி, பெரும்பான்மை சிங்களவர்களைப் போன்று அனைத்து உரிமைகளையும் பெற்று அமைதியாக வாழ வேண்டும் என்பதும் தான். இது ஒன்றே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். இதில் நாம் வெற்றி காண வேண்டும். இதற்கு இங்கே நமக்குள் சண்டையிட்டுக் கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். நமக்குள் மோதிக் கொள்ளும் விரும்பத்தகாத நிகழ்வுகளிலும் அதற்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளிலும், எந்தத் தரப்பினரும் ஈடுபடக் கூடாது.


மொழி, இனம் ஆகியவற்றின் வழியே உறவுள்ள நம் மக்களின் இன்னல்களை தீர்ப்பதில் தமிழகம் ஒன்றுபட்டு நிற்கிறது என்பதை உறுதியுடன் உணர்த்துவோம். ஈழத் தமிழர்களின் நலன் கருதி அனைத்துத் தரப்பினரும் இனி விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தவிர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக அரசும், கடந்த சில நாட்களாக நடந்துள்ள நிகழ்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மறுபரிசீலனை செய்து நல்லெண்ண அடிப்படையில் அவற்றை கைவிட முன்வரவேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments: