Saturday, December 27, 2008

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மறைவிடம் மீது விமானங்கள் குண்டு வீச்சு!.





கொழும்பு, டிச.28-

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மறைவிடங்கள் மீது நேற்று இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. முல்லைத்தீவை நோக்கி ராணுவம் முன்னேறுகிறது.


விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகரமான கிளிநொச்சியை கைப்பற்றும் நோக்கில் சிங்கள ராணுவம் கடந்த 2 மாதங்களாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சில முக்கிய ஊர்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியதாக கூறினாலும் இன்னும் கிளிநொச்சியை நெருங்க முடியவில்லை. இருதரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று மதியம் 12 மணி அளவிலும், பிற்பகல் ஒரு மணி அளவிலும் இலங்கை போர் விமானங்கள் முல்லைத் தீவின் புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வசிப்பதாக கருதப்படும் மறைவிடங்களை குறி வைத்து 5 தடவை குண்டுகளை வீசி தாக்கின.

`இந்த தாக்குதலின்போது, இலக்கின் மீது துல்லியமாக குண்டுகள் வீசி தகர்க்கப்பட்டதாக' இலங்கை விமானப்படை செய்தி தொடர்பாளர் ஜனக நாணயக்காரா தெரிவித்தார்.

இலங்கை போர் விமானங்கள் வீசிய குண்டுகள் முல்லைத் தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் மக்கள் வசிக்கும் வீடுகள் மீது விழுந்தன. இத்தாக்குதலில் சத்திய சீலன் சத்தியராஜ்(17), விதுசாயினி(10), செல்வராஜா செல்வரஞ்சன்(4) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில் பொதுமக்களின் ஏராளமான வீடுகளும் சேதமடைந்தன.


இதனிடையே, சிங்கள ராணுவத்தின் 59-வது படைப்பிரிவினர் முல்லைத்தீவு அருகேயுள்ள கோடாலிகல்லு என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது தீவிர தாக்குதல் நடத்தினர்.

நீண்ட நேர சண்டைக்குப்பின் விடுதலைப்புலிகளின் தற்காப்பு அரணை முறியடித்து சிங்கள சிப்பாய்கள் மாங்குலம்-முல்லைத்தீவு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முல்லியவளை என்னும் நகருக்குள் புகுந்தனர். மேலும், வடக்கு முல்லியவளை பகுதியில் செயல்பாட்டில் இல்லாத விடுதலைப்புலிகளின் 40 அடி உயர தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு கோபுரம் ஒன்றையும் ராணுவம் கைப்பற்றினர்.

இதேபோல் முல்லியவளை பகுதியில் நடந்த உக்கிரமான சண்டையில் விடுதலைப்புலிகளுக்கு பலத்த சேதத்தை உண்டாக்கிய சிங்கள ராணுவத்தினர் 34-வது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தானிïற்று என்னும் கிராமத்தை கைப்பற்றினர்.


இந்த இரண்டு தாக்குதல்களின் காரணமாக விடுதலைப்புலிகள் மேலும் வடக்கு நோக்கி விரட்டியடிக்கப்பட்டதாகவும், இது விடுதலைப்புலிகளுக்கு பேரிழப்பாகும் எனவும் சிங்கள ராணுவம் கூறுகிறது.

இதன் மூலம் முல்லைத்தீவை நோக்கி ராணுவம் முன்னேறி செல்லுவதற்கு இருந்த அனைத்து தடைகளும் அகற்றப்பட்டுள்ளதாக சிங்கள ராணுவம் அறிவித்துள்ளது.

எனவே, இனி வரும் நாட்களில் இப்பகுதிகளில் தங்களது நிலைகளை வலுப்படுத்திக் கொண்டு விடுதலைப்புலிகள் மீது ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தலாம் என்றும் கருதப்படுகிறது.

No comments: