Tuesday, December 16, 2008

விடுதலைப்புலிகள் தாக்குதலில் இலங்கை ராணுவத்தினர் 40 பேர் பலி


கொழும்பு, டிச.17-

இலங்கையில் கிளாலி பகுதியில் நேற்று காலை நடந்த கடும் சண்டையில் ராணுவத்தை சேர்ந்த 40 பேரை விடுதலைப்புலிகள் கொன்றனர். மேலும் 120 ராணுவத்தினர் காயமடைந்தனர்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் வசம் இருக்கும் பகுதிகளை கைப்பற்றுவதில் ராணுவம் தீவிரமாக உள்ளது. குறிப்பாக விடுதலைப்புலிகளின் நிர்வாக தலைநகரான கிளிநொச்சியை நோக்கி முன்னேறி வருகிறது. இது தவிர, முல்லைத்தீவு பகுதியிலும் ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது.

அதே நேரத்தில் ராணுவத்தை மேலும் முன்னேற விடாமல் விடுதலைப்புலிகள் தடுத்து வருகின்றனர். இரு தரப்புக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில், கிளிநொச்சியின் புறநகர் பகுதியான கிளாலி என்ற இடத்தில் நேற்று அதிகாலையில் ராணுவம் முற்றுகையிட்டது. ராணுவ கட்டுப்பாட்டு எல்லையில் இருந்து விடுதலைப்புலிகளின் எல்லைக்குள் ராணுவ வீரர்கள் முன்னேறி சென்றனர்.

இதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் கடுமையான பதிலடி கொடுத்தனர். நேற்று அதிகாலை 1.30 மணி முதல் காலை 10.30 மணி வரை மிக தீவிரமாக சண்டை நடந்தது. 9 மணி நேர போருக்கு பிறகு ராணுவத்தை விடுதலைப்புலிகள் விரட்டி அடித்தனர். இதனால், ராணுவம் பின்வாங்கிச் சென்று பழைய இடத்துக்கே திரும்பியது. இந்த சண்டையில் 40 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

மேலும் 120 பேர் படுகாயம் அடைந்தனர். பலியான ராணுவ வீரர்களின் உடல்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றினர். இது தவிர இலங்கை ராணுவத்திடம் இருந்து ஏராளமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த தகவலை விடுதலைப்புலிகள் ஆதரவு இணையத்தளம் வெளியிட்டுள்ளது. இந்த சண்டை குறித்து முழுமையான விபரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.

No comments: