Thursday, December 11, 2008

மும்பை தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்துக்கு ஐ.நா.சபை தடை


நியார்க், டிச.12-
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாத இயக்கமான `ஜமாத் உத் தவா'வுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. அந்த இயக்கத்தின் 4 முக்கிய தலைவர்களை `தீவிரவாதிகள்' என அறிவித்துள்ளது.

மும்பை தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஈடுபட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன. லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்துக்கு ஏற்கனவே ஐ.நா. சபை தடை விதித்துள்ளது. அதனால் அந்த இயக்கத்தின் தீவிரவாதிகள், `ஜமாத் உத் தவா' என்ற இயக்கத்தின் பெயரில் செயல்பட்டு வருகிறார்கள்.
எனவே, `ஜமாத் உத் தவா'வையும் தடை செய்வதற்கான நடவடிக்கையில் இந்தியா இறங்கியது. அந்த இயக்கத்தை தடை செய்ய வேண்டியதன் அவசியங்களை விளக்கி, ஐ.நா. சபையில், அல் கொய்தா மற்றும் தலிபான் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கமிட்டிக்கு கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா கடிதம் அனுப்பியது.
பொதுவாக, இத்தகைய கோரிக்கைகளுக்கு 5 நாட்களுக்குள் ஏதாவது ஆட்சேபணை வருகிறதா? என்று ஐ.நா. சபை கமிட்டி எதிர்பார்த்து காத்திருக்கும். ஆனால் எந்த ஆட்சேபணையும் வராததால், இந்த தடை பற்றி விவாதிப்பதற்காக ஒரு விவாதத்துக்கு ஏற்பாடு செய்தது.
அதன்படி, நேற்று முன்தினம் நியார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட மத்திய வெளி உறவுத்துறை ராஜாங்க மந்திரி இ.அகமது, ஜமாத் உத் தவா இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் தலைவர் ஹபீஸ் முகமது சயீத்-ஐ `தீவிரவாதி' என அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதுபோல், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா-ன் தளபதி சகியுர் ரகுமான் லக்வி, அந்த இயக்கத்துக்கு நிதி திரட்டி அளித்து வரும் ஹாஜி முகமது அஷ்ரப், சகியுர் பகசிக் ஆகியோரை `தீவிரவாதிகள்' என அறிவிக்குமாறு அமெரிக்கா சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்தியா, அமெரிக்காவின் கடுமையான வாதத்தை கேட்ட பாகிஸ்தான் தூதர் அப்துல்லா உசைன் ஹரூன், ஐ.நா. முடிவு செய்தால், தாங்களும் ஜமாத் உத் தவாவை தடை செய்வோம் என்று உறுதி அளித்தார்.

இதையடுத்து, அல் கொய்தா மற்றும் தலிபான் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கமிட்டியின் கூட்டம் நடைபெற்றது. ஒரு இயக்கத்தின் மீது தடை விதிக்க வேண்டுமானால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 15 நாடுகளும் ஒருமனதாக சம்மதிக்க வேண்டும். ஜமாத் உத் தவா மீதான நடவடிக்கையை இதற்கு முன்பு 3 தடவை முறியடித்த சீனா, மும்பை தாக்குதலின் கோரத்தை உணர்ந்து, தனது எதிர்ப்பை கைவிட்டது. இதனால் ஜமாத் உத் தவா மீது தடை விதிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், ஜமாத் உத் தவா மூத்த தலைவர்கள் ஹபீஸ் முகமது சயீத், சகியுர் ரகுமான் லக்வி, ஹாஜி முகமது அஷ்ரப், சகியுர் பகாசிக் ஆகியோரை `தீவிரவாதிகள்' என்றும் அறிவித்தது. ஜமாத் உத் தவாவையும், அவர்களையும் `அல் கொய்தா மற்றும் தலிபானுடன் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் தனிநபர்கள்' பட்டியலில் சேர்த்தது.
ஜமாத் உத் தவா மற்றும் அதன் தலைவர்களின் சொத்துகளை முடக்குமாறும், அவர்கள் பயணம் செய்ய தடை விதிக்குமாறும், அவர்கள் ஆயுதங்கள் வாங்க தடை விதிக்குமாறும் அனைத்து உறுப்பு நாடுகளையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக்கொண்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இதுகுறித்து அமெரிக்கா கூறியதாவது:-
இந்த முன்னுரிமை பணியில் ஐ.நா. சபை முனைந்து செயல்பட்டது திருப்தி அளிக்கிறது. இதனால், நன்கு பிரபலமான தீவிரவாதிகள் பயணம் செய்வதையும், ஆயுதங்கள் வாங்குவதையும், புதிதாக தீவிரவாத தாக்குதல்களை திட்டமிட்டு நடத்துவதையும், நிதி திரட்டுவதையும் கட்டுப்படுத்த முடியும். தீவிரவாதத்தை கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு ஐ.நா.சபை உதவும் என்று இதன்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமெரிக்கா கூறியுள்ளது.

No comments: