Saturday, December 20, 2008

சென்னையில் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் காங்கிரசார் சாலை மறியல்-கைது!.


சேலம், டிச.21-

சென்னையில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நேற்று காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பெரியார் தி.க.வினர் நேற்று போராட்டம் நடத்தினார்கள். அப்போது காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் கல்வீசி தாக்கப்பட்டது. அங்கு நின்றிருந்த காங்கிரசாருக்கு அடி-உதை விழுந்தது.

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரசார் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

சேலத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பன்னீர் செல்வம் தலைமையில் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு காங்கிரசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பஸ் மீது கல் வீசப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 69 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஈரோட்டில் விடியல் சேகர் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 70 காங்கிரசார் கைதானார்கள். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

கோவையில் சுங்கம் ரவுண்டானாவிலும், உப்பிலிபாளையம் சிக்னல் பகுதியிலும் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

பழனியில் சில இடங்களில் காங்கிரஸ் கட்சி கொடிகள் எரிக்கப்பட்டன. இதை கண்டித்து பழனி தொகுதி எம்.பி. கார்வேந்தன் தலைமையில் பழனி பஸ் நிலையம் முன்பு காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாளையங்கோட்டையில் மறியலில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார் 12 பேரை போலீசார் கைது செய்தனர். களக்காடு, பணக்குடி ஆகிய இடங்களிலும் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments: