Tuesday, December 16, 2008

திருமங்கலம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் லதா அதியமான் கருணாநிதி அறிவிப்பு


சென்னை, டிச.17-

திருமங்கலம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக லதா அதியமான் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார்.

கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் வீர.இளவரசன் வெற்றி பெற்றார்.இவர் கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

வீர.இளவரசன் மரணத்தை தொடர்ந்து காலியாக இருக்கும் திருமங்கலம் தொகுதிக்கு அடுத்த மாதம் (ஜனவரி) 9-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த இடைத்தேர்தலில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ம.தி.மு.க. போட்டியிடாமல் இந்த தொகுதியை அ.தி.மு.க.வுக்கு விட்டுக்கொடுத்துள்ளது. எனவே அ.தி.மு.க. இந்த தொகுதியில் போட்டியிடுகிறது.



இந்த நிலையில் தி.மு.க. உயர் நிலை செயல் திட்ட குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான கருணாநிதி தலைமை தாங்கினார். காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் 11.30 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.

கூட்டத்தில் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டது.கூட்டம் முடிந்ததும், முதல்-அமைச்சர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் தோழமை கட்சிகளின் ஆதரவோடு தி.மு.க.வின் வேட்பாளராக அ.லதா அதியமானை நிறுத்துவதென்று இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்.

தேர்தல் பணிகளைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தேர்தல் பணிக்குழு மு.க.அழகிரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறிய முதல்-அமைச்சர் கருணாநிதி திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளரின் புகைப்படத்தை நிருபர்களிடம் காண்பித்தார்.

இதன் பின்பு முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-


கேள்வி:- யசோதர காவியம் பற்றி முதலில் எழுதினீர்கள். பிறகு திருமங்கலத்தில் இடைத்தேர்தலுக்கு இப்போது என்ன அவசரம் என்று கேட்டிருக்கிறீர்கள். ஏன்?

பதில்:- இப்போது என்ன அவசரம் என்று நான் கேட்கவே இல்லை. அந்த நோக்கத்தோடு அது எழுதப்படவில்லை. மாநில அரசைக்கூட கலந்து கொள்ளாமல் - புயல், வெள்ளம் இவை எல்லாம் வந்து பெரிய பாதிப்பு மாநிலத்தில் ஏற்பட்டிருக்கிறது - இந்த சூழ்நிலையிலே தேர்தலை வைத்துக் கொள்ளலாமா என்ற யோசனைகூட கேட்கப்படவில்லை. அதைப்பற்றி அபிப்பிராயம் சொல்லக்கூட எங்களுக்கு வாய்ப்பளிக்காமல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கேள்வி:- இடைத்தேர்தலை சந்திக்கத் தயங்குகிறீர்களா?

பதில்:- (சிரித்து விட்டு) இதுதான் பதில்.

கேள்வி:- தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக திருமங்கலத்திற்கான இடைத்தேர்தலை அறிவித்திருக்கும் சூழ்நிலையில்; மங்களூருக்கான இடைத்தேர்தலை தடுத்து நிறுத்திவிட்டு திருமங்கலத்திற்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவது ஏன் என்று வைகோ உங்களைக் கேட்டிருக்கிறாரே?

பதில்:- இதைப்பற்றி நான் விரிவாக விளக்கம் கொடுத்து, அது ஏடுகளில் வெளிவந்திருக்கிறது. அதைக்கூட அறிந்து கொள்ளாத அரசியல் அப்பாவிகளுக்கு நான் எப்படி புதிதாக விளக்க முடியும்?

அதாவது ஒரு ராஜினாமா கடிதம் கொடுத்தால் அதை எப்படி கொடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கை பிரச்சினைக்காக நானும், பேராசிரியரும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தோம். அப்படி செய்தபோது, அன்றைய எம்.ஜி.ஆர். ஆட்சியில் பேரவைத் தலைவராக இருந்த ராஜாராமுக்கு நாங்கள் அனுப்பிய ராஜினாமா கடிதங்களை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் - நானும், பேராசிரியரும் எங்களது கடிதங்களில் ராஜினாமாவுக்கான காரணத்தைச் சுட்டிக் காட்டியிருந்ததால், அதை ஏற்கத்தக்கதல்ல என்றும்; பதவி விலகல் கடிதம் என்பது ஒன்றிரண்டு வரிகளில் நான் இந்த பொறுப்பிலிருந்து இந்த தேதியில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்றுதான் இருக்க வேண்டுமேயல்லாமல், அதற்கு காரணங்களை எழுதக்கூடாது - நீங்கள் காரணங்களை எழுதியிருக்கிறீர்கள். எனவே உங்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொள்வதற்கு இல்லை என்று அன்றைய பேரவைத் தலைவர் மறுத்துவிட்டார். அதனால் நானும், பேராசிரியரும் - பேரவைத் தலைவர் சுட்டிக்காட்டி அறிவுறுத்திய அதே முறையில், அதே வடிவத்தில் ராஜினாமா கடிதங்களை எழுதி அனுப்பி, அதன்பிறகுதான் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன; நாங்கள் பதவி விலகினோம்.



இப்போது செல்வ பெருந்தகை விதிகளின்படி அந்த முறையைப் பின்பற்றாமல், அவரது ராஜினாமா கடிதத்திலே வேறு விஷயங்களை எழுதிய காரணத்தால் அதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று செல்வபெருந்தகைக்கு சட்டப்பேரவை அலுவலகத்திலிருந்து தாக்கீது அனுப்பப்பட்டுவிட்டது. பதவி விலகி விட்டார் என்பது இன்னமும் உறுதி செய்யப்படாத நிலையில், எப்படி ஓர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்க முடியுமென்று கோபால்சாமியையே கேளுங்கள். நான் சொல்வது தேர்தல் ஆணையத்தின் கமிஷனர்.

கேள்வி:- திருமங்கலம் இடைத்தேர்தல் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோடித் தேர்தலா?

பதில்:- பத்திரிகைகள் அவரவர்களுடைய நோக்கத்திற்கு தகுந்தவாறு, விருப்பத்திற்கு தக்கவாறு எதையும் எழுதலாம்.

முன்னோட்டமாகக் கருதித்தான் தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளின் செயல்வீரர்கள் பாடுபட வேண்டுமென்று உங்கள் மூலமாக அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.



கேள்வி:- இரண்டு கம்ïனிஸ்டு கட்சிகளும் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, பா.ம.க.வும் உறுதியாக இல்லாத நிலையில் உங்களது வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

பதில்:- தேர்தல் முடிவுகள் வந்ததற்குப்பிறகு தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி:- பா.ம.க. நிலைப்பாடு எப்படி உள்ளது?

பதில்:- நான் ஆதரவு கேட்டு அவர்களிடத்திலே பேசியிருக்கிறேன்.

கேள்வி:- திருமங்கலம் இடைத்தேர்தல் திருப்புமுனையை ஏற்படுத்துமென்று விஜயகாந்த் சொல்லியிருக்கின்றாரே?

பதில்:- ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் அவர்களது கட்சியைப் பற்றி நம்பிக்கையோடு பேசுவதை நான் மறுக்கவும் இல்லை; குறுக்கிடவும் விரும்பவில்லை.

கேள்வி:- அமைச்சரவையில் எப்போது மாற்றம் வரும்?

பதில்:- வரும்போது வரும்.


கேள்வி:- திருமங்கலம் தொகுதியை ம.தி.மு.க.விடம் இருந்து அ.தி.மு.க. பறித்துக் கொண்டதே. அதைப்பற்றி மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு தலைவர் பெருந்துறை இடைத்தேர்தல் உதாரணத்தைக் காட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே...?

பதில்:- தி.மு.க. இடைத்தேர்தலில் மட்டுமல்ல; பொதுத் தேர்தலிலேயே எவ்வளவு பெருந்தன்மையோடு நடந்து கொண்டு வருகிறது என்பது வரலாறு.

உ.ரா.வரதராஜன் "ஜனசக்தி''யிலும், "தீக்கதிரிலும்'' அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நான் வரலாற்றை மாற்றுவதாக சொல்லிவிட்டு அவரே வரலாற்றை மாற்ற முயற்சி செய்திருக்கிறார். உண்மை என்னவென்றால், பெருந்துறையில் இடைத்தேர்தல் வந்ததற்கு காரணம் சோஷலிஸ்ட் கட்சியினுடைய உறுப்பினர் அங்கு போட்டியிட்டார். தி.மு.க. ஆதரவோடு அவர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவர் சில மாதங்களுக்கு பிறகு இறந்துவிட்டார். அதற்கு ஓர் இடைத்தேர்தல் வந்தது. அந்த இடைத்தேர்தலில் தி.மு.க. அதே கட்சியைத்தான் ஆதரித்தது. இப்பொழுது திருமங்கலத்தில் அவர்கள் மாற்றிக் கொண்டதைப் போல அப்போது நாங்கள் மாற்றிக் கொள்ளவில்லை. அது மாத்திரமல்ல; இறந்து போனவருடைய இடத்தில் அதே கட்சியைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிற்பதற்கும் தி.மு.க. ஆதரவு அளித்து அவர் வெற்றியும் பெற்றார். அவரும் காலமாகி விட்டார். அதற்கு பிறகு ஓர் இடைத்தேர்தல் வந்தபோது - அதற்கிடையே கூட்டணி ஒப்பந்தத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டு விட்டது. எனவே தி.மு.க. அங்கே தானே போட்டியிட்டு வெற்றி பெற்றது. இவ்வளவும் நாடறிந்த செய்திகள்.

கேள்வி:- இரண்டு கம்ïனிஸ்டு கட்சிகளும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மூன்றாவது அணியை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டிருப்பதாக சொல்லி வருகிறார்கள். அந்த உறுதிக்கு மாறாக - இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுக்கிறார்களே?

பதில்:- நீங்கள் சொன்ன செய்தியை நான் கேட்டுக் கொள்கிறேன். அவ்வளவுதான்.

கேள்வி:- அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் பொங்கல் அன்று திட்டமிட்டபடி தொடங்கப்படுமா?

பதில்:- அதுதொடர்பான வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன் தொடங்கப்படும்.

கேள்வி:- உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்கில் உயர்த்தப்பட்ட வருமான உச்சவரம்பின் காரணமாக இடஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்காது என்று சொல்லப்படுகிறதே?

பதில்:- இடஒதுக்கீட்டில் வருமான வரம்பைப் புகுத்துவதை நாங்கள் என்றைக்குமே ஏற்றுக் கொண்டதில்லை.

கேள்வி:- நான்கரை லட்சம் என வருமான வரம்பை உயர்த்தியது அதிகம் என்று உச்சநீதிமன்ற வழக்கில் நாயர் சர்வீஸ் சொசைட்டி தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. அதிகப்படுத்தப்பட்ட வருமான வரம்பின் காரணமாக பணக்காரர்களே பயன் அடைவார்கள். ஏழைகளுக்கு இடஒதுக்கீட்டுப் பயன் கிடைக்காது என்று சொல்லப்படுகிறதே? தி.மு.க. அந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமா?

பதில்:- நான் பொதுவாகச் சொல்ல விரும்புவது - எந்த நீதிமன்றத்திலே, யார் வந்து எத்தகைய சட்ட நுணுக்கங்களையோ அல்லது பொருளாதார தத்துவங்களையோ காட்டி வாதிட்டாலும், தி.மு.க.வைப் பொறுத்தவரையில் - இன்னும் சொல்லப்போனால் திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரையில் - நான் திராவிட இயக்கம் என்று சொல்வது பெரியார், அண்ணா ஆகிய இரண்டு தலைவர்களுடைய கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ள இயக்கங்களைப் பொறுத்தவரையில் - வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், சமூகநீதி இவைகளெல்லாம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அல்லாமல் உயர்ந்த மக்கள் என்பவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான ஆதாயங்கள் எல்லாம் போய்ச் சேராமல், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே முழுமையாக போய்ச் சேர வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் பாடுபடுவோம்; இப்போதும் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம்; தொடர்ந்து நாங்கள் பாடுபடுவோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

பேட்டியின் போது தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான அன்பழகன், துணை பொதுச் செயலாளரும், அமைச்சருமான மு.க.ஸ்டாலின், பொருளாளரும், அமைச்சருமான ஆற்காடு வீராசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments: