Monday, December 22, 2008

மீண்டு (ம்) வந்து விட்டார் - தயாநிதி மாறன்!. (அப்படிப் போடு!.) - மேத்தா நகர் மேம்பாலத்துக்கு தயாநிதி மாறன் அடிக்கல்!.



சென்னை, டிச. 23:
மேத்தாநகர் ஆபீசர்ஸ் காலனி முதல் தெருவையும் வெங்கடாசலபதி தெருவையும் இணைக்கும் மேம்பாலப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது.

மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி வரவேற்றார். மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி முன்னிலை வகித்தார். 149.54 மீட்டர் நீளம், 8.50 மீட்டர் அகலமும் கொண்ட மேம்பாலம் கட்ட மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அங்குள்ள மக்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். ஆனால், இந்தியாவை அந்த அளவுக்கு பொருளாதார வீழ்ச்சி தாக்கவில்லை. அதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன்சிங்கும்தான் காரணம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, இந்தப் பகுதியில் பிரசாரம் செய்ய வந்தேன். அப்போது, ஹாரிங்டன் பாலம் அருகே உள்ள ரயில்வே பாலத்தை திறக்க வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தனர். செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்தேன்.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற ஒரே வாரத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் வேலுவை இங்கு அழைத்து வந்து காட்டினேன். பின்னர், அந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது.

அதன்பிறகு, "மேத்தா நகரில் நடை மேம்பாலம் வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர். ஏற்றுக் கொண்டேன். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி ஒதுக்கிக் கொடுத்தேன். பின்னர், "போக்குவரத்துக்கு வசதியாக வாகனம் செல்லும் வகையில் மேம்பாலம் கட்ட வேண்டும்" என்று கேட்டனர். அதற்காக ரூ.50 லட்சம் ஒதுக்கி கொடுத்தேன்.

இப்போது இந்த மேம்பாலம் கட்ட ரூ.3 கோடியே 60 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒதுக்கியுள்ள தொகை போக, தேவைப்படும் மீதிப் பணத்தையும் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்க தயாராக இருக்கிறேன்.

மேலும் நிதி தேவை என்றால் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அவரது எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தருவார். சென்னை மாநகராட்சி கொசுறு அளவில் நிதி ஒதுக்கித் தந்தால் போதும்.

தமிழக மக்களுக்காக ஓய்வே இல்லாமல் முதல்வர் உழைத்துக் கொண்டிருக்கிறார். அதை பார்க்கும்போது மாவீரன் அலெக்சாண்டர் பற்றிய சம்பவம் நினைவுக்கு வருகிறது.

போரின்போது அலெக்சாண்டர் 11 நாட்கள் தனது படை வீரர்களுடன் பாலைவனத்தில் பயணம் செய்தார். எங்குமே தண்ணீர் கிடையாது. அலெக்சாண்டருக்கு தாகம் எடுத்தது. வீரர்கள் நாலாபுறமும் ஓடி, மிகுந்த சிரமப்பட்டு குவளையில் தண்ணீர் கொண்டு வந்தார்கள்.

அதை அவர் குடிக்க நிமிர்ந்தபோது, தன்னைச் சுற்றி நின்ற வீரர்களைப் பார்த்தார். அவர்கள் முகத்தில் சோர்வு தெரிந்தது. தாகத்தை மென்று விழுங்கி நிற்கும் தனது வீரர்களை பார்த்து சிலிர்த்தார். தனக்கென கொண்டுவந்த குவளையை வீசி எறிந்தார். அலெக்சாண்டரின் செயலைக் கண்டு வீரர்கள் உற்சாகம் பெற்றனர். போரில் வெற்றிக் கொடி நாட்டினர்.

அதுபோலத்தான்.. நாம் சோர்ந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்காக தனது ௮௫- வது வயதிலும் முதல்வர் ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் மட்டுமல்ல.. உலகில் வேறு எங்குமே இல்லாத வகையில் கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கிக் கொண்டிருக்கிறார். உங்கள் கஷ்டம் அவருக்கு தெரியும். எனவே, உங்களுக்கு தேவையானவற்றை செய்து வருகிறார். வருங்காலத்திலும் இதுபோல பல நல்ல திட்டங்களை அவர் செய்வார்.

இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.

விழாவில், மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம் மூலம் 74 பெண்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.11 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்பட்டது. தாயாநிதி மாறனுக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவிக்கப்பட்டு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

தென்சென்னை மாவட்ட செயலாளர் அன்பழகன், துணை மேயர் சத்யபாமா, ஆளும் கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்கட்சி தலைவர் சைதை ரவி, நிலைக்குழு தலைவர் சுரேஷ்குமார், மண்டலக்குழு தலைவர் சுரேஷ்பாபு, கவுன்சிலர்கள் டி.ஆர்.கோவிந்தன், விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி பாலங்கள் துறை தலைமை பொறியாளர் கே.பாலசுந்தரம் நன்றி கூறினார்.

No comments: