Tuesday, December 23, 2008

"காஷ்மீரை தகர்க்க மனித வெடிகுண்டாக வந்த பாகிஸ்தான் ராணுவ சிப்பாய்" - காஷ்மீர் போலீசார் மடக்கி பிடித்தனர்.!.



ஜம்மு, டிச.24-

காஷ்மீரை தகர்ப்பதற்காக மனித வெடிகுண்டாக வந்த பாகிஸ்தான் ராணுவ சிப்பாய் உள்பட 3 தீவிரவாதிகளை காஷ்மீர் மாநில போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாகிஸ்தான் ராணுவமும், உளவுப்பிரிவும் (ஐ.எஸ்.ஐ.) இணைந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்பி வருவது தெரிய வந்துள்ளது.

ஜம்மு நகர பஸ் நிலையம் அருகில் இருக்கும் சாம்ராட் என்ற ஓட்டலில் பதுங்கி இருந்த 3 தீவிரவாதிகளை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த சம்பவம் நடந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அந்த தகவல்களை காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. குல்தீப் கோடா நேற்று வெளியிட்டார்.

அது பற்றிய விபரம் வருமாறு:-

கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதிகளில் ஒருவனுடைய பெயர் குலாம் பரீத் (வயது 25). பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பிம்பர் என்ற இடத்தைச் சேர்ந்தவன். கடந்த 2001-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த குலாம் பரீத், 10 ஏ.கே. ரெஜிமெண்டில் பணியாற்றி வருகிறான். அவனது ராணுவ பணி எண்.4318148 ஆகும்.

ஜெய்ஸ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 2005-ம் ஆண்டில் குலாம் பரீத் அனுப்பி வைக்கப்பட்டான். இதையடுத்து, தீவிரவாதியாகவே மாறிவிட்ட அவன், தற்போது இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறான்.


குலாம் பரீத் உடன் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவனுடைய பெயர் முகமது அப்துல்லா (22). பாகிஸ்தானில் உள்ள சாரத் என்ற இடத்தை சேர்ந்தவன். மற்றொருவனுடைய பெயர் முகமது இம்ரான் (22). பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் பவல்பூர் என்ற இடத்தை சேர்ந்தவன்.
இந்த மூன்று தீவிரவாதிகளும் கராச்சியில் இருந்து விமானம் மூலமாக வங்காள தேசத்தில் உள்ள டாக்கா நகருக்கு சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். மேற்கு வங்காளம் வழியாக ரெயிலில் காஷ்மீருக்கு வந்தனர். கராச்சியில் இருந்து டாக்கா செல்ல 4 நாட்களில் பாஸ்போர்ட் மற்றும் விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை கராச்சியில் உள்ள ஹம்ஜாலா, ஓசாமா ஆகிய இரண்டு ஐ.எஸ்.ஐ. (பாகிஸ்தான் உளவு அமைப்பு) ஏஜெண்டுகள் செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் டாக்காவுக்கு வந்தபோது, நதீம் என்ற மற்றொரு ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டு அவர்களை வரவேற்றுள்ளார்.

பின்னர், தகுந்த சமயம் பார்த்து கடந்த 16-ந் தேதி நள்ளிரவில் மேற்கு வங்காள மாநிலத்துக்குள் அவர்களை சட்டவிரோதமாக அனுப்பி வைத்து இருக்கிறார். அங்கிருந்து கொல்கத்தா வழியாக ரெயிலில் ஜம்மு நகருக்கு வந்தனர்.

காஷ்மீர் தேர்தலை சீர்குலைத்து, காஷ்மீரை தகர்க்கும் எண்ணத்திலேயே மனித வெடிகுண்டுகளாக நுழைத்துள்ளனர். மூன்று பேரில் ஒருவன், கார் போன்ற வாகனத்தில் வெடிகுண்டுகளை ஏற்றிச் சென்று வெடிக்கச் செய்வதில் திறமையானவன்.

தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வரும் கருத்துகள் பொய்யானவை என இதன் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

பிடிபட்ட 3 தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி, ஏ.கே.56 ரக துப்பாக்கி, இரண்டு பிஸ்டல், சீனாவில் தயாரிக்கப்பட்ட 4 கையெறி குண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

No comments: