Friday, December 12, 2008

மும்பையில் பிடிபட்டது என் மகன்தான் தீவிரவாதி தந்தை ஒப்புதல்


பரித்கோட், டிச.13:

மும்பை தாக்குதலின்போது பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் தனது மகன்தான் என்று பாகிஸ்தானில் வசிக்கும் அவனது தந்தை ஒப்புக் கொண்டுள்ளார்.இதன் மூலம், மும்பை தாக்குதலில் தங்கள் நாட்டுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறிவந்த பாகிஸ்தான் அரசின் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த மாதம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் அஜ்மல் அமிர் இமான் என்கிற அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.


அவனிடம் மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவனுடைய புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானதும் பிரிட்டனில் வெளியாகும் Ôஅப்சர்வர்Õ ஆங்கில பத்திரிகையும் பி.பி.சி. தொலைக்காட்சியும், Ôஅஜ்மல், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பரித்கோட் கிராமத்தை சேர்ந்தவன்Õ என திட்டவட்டமாக செய்தி வெளியிட்டன.
அஜ்மலின் வீட்டை கண்டுபிடித்த அப்சர்வர் பத்திரிகை நிருபர், அஜ்மல் மற்றும் அவனுடைய பெற்றோர் பெயர்கள் அடங்கிய வாக்காளர் பட்டியலை திரட்டினார்.
அஜ்மலின் தந்தை அமிர் கசாப், தாய் நூர். இவர்களுக்கு 3 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒகாரா மாவட்டத்தில் பரித்கோட் கிராமம் உள்ளது. இங்கு, 2,500 பேர் வசிக்கின்றனர்.
அஜ்மல் சிக்கியதும் பத்திரிகையாளர்கள் அவனுடைய பரித்கோட் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது, ‘பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் எனது மகன் இல்லை’ என்று அமிர் கசாப் மறுத்தார். இப்போது, முதல் முறையாக, அஜ்மல் தனது மகன்தான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து நேற்று அமிர் கசாப் கூறுகையில், ÔÔபத்திரிகைகளில் முதலில் எனது மகனின் புகைப்படத்தை பார்த்தேன். ஆனாலும் அது என் மகனாக இருக்க மாட்டான் என்றுதான் நினைத்தேன். அதனால்தான் முதல் 2 நாட்கள் மறுத்தேன். அவன் என் மகன்தான் என்பது, எனக்கே உறுதியாக தெரிவதால் இப்போது ஒப்புக் கொள்கிறேன்
. 4 ஆண்டுகளுக்கு முன்பு பக்ரீத் பண்டிகைக்கு அஜ்மல் புது துணி கேட்டான். என்னிடம் பணமில்லாததால் வாங்கித் தரவில்லை. கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி விட்டான். அதன் பிறகு என்ன ஆனான் என்பதே தெரியவில்லை. அவன் தீவிரவாதியாகி விட்டான் என்பது இப்போதுதான் தெரிந்தது "என்றார்.
மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளே காரணம் என்று இந்தியா கூறியபோது, பாகிஸ்தான் அரசு அதை மறுத்தது. இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறிவந்தது. பிடிபட்ட தீவிரவாதியின் தந்தையே ஒப்புக்கொண்டுள்ளதன் மூலம், பாகிஸ்தானின் முகமூடி கிழிந்துவிட்டது.

No comments: