Sunday, December 14, 2008

"தீவிரவாதி அஜ்மல் திடுக் வாக்குமூலம்"- செப்டம்பரிலேயே தாக்குதலுக்கு திட்டம்.


மும்பை, டிச. 15:

மும்பை யில் நடந்த தொடர் தாக்குதலின்போது, அஜ்மல் அமீர் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளதாவது:
கொள்ளைக்காரனாக ஆசை:

4வது வரை படித்துள்ளேன். வீட்டில் என் செலவுக்கு பணம் கிடைக்கவில்லை. கொள்ளையடித்தால் நிறைய பணம் கிடைக்கும் என்பதால், துப்பாக்கியை வாங்க அலைந்து கொண்டிருந்தேன்.
அப்போதுதான் ராவல்பிண்டியில் உள்ள ராஜா பஜாரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பினரின் ஸ்டாலை பார்த்து, அந்த அமைப்பில் சேர்ந்தேன். பல்வேறு முகாம்களில் கடுமையான பயிற்சி அளித்தனர். எங்கள் குழுவில் இருந்த 32 பேரில் 16 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து கடும் பயிற்சி அளித்தனர்.
இறுதியாக ஒரு குழுவுக்கு 2 பேர் வீதம் 5 குழுக்களை உருவாக்கினர். என் குழுவில் நானும், இஸ்மாயிலும் இருந்தோம். மும்பையில் தாக்குதல் நடத்திவிட்டு பலரை பிணைக்கைதிகளாக பிடித்து கொள்ள வேண்டும் என்றும், அவர் களை அருகில் உள்ள கட்டிடத்துக்கு அழைத்து சென்று அடைத்து, பாதுகாப்பு படையினரு டன் பேரம் பேச வேண்டும் என்று ஜாகிர் ரெஹ்மான் கூறினார். இவர்தான் லஷ்கர் அமைப்பின் கமாண்டர்.
மும்பையில் காலை அல்லது இரவு நேரத்தில், 7 முதல் 11 மணிக்குள் தாக்குதல் நடத்த வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிடப் பட்டது. செப்டம்பர் 27ம் தேதியே மும்பையில் தாக்குதல் நடத்த திட்ட மிட்டிருந்தோம். ஆனால், கடைசி நேரத்தில் வந்த உத்தரவால் அத்திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின் நவம்பர் 26ல் தாக்குதலுக்கு திட்டம் வகுக்கப்பட்டது.
எங்கள் 5 குழுவையும் நவம்பர் 23ல் கராச்சியில் இருந்து படகில் ஏற்றி விட்டனர். நடுக்கடலில் கப்பலில் ஏறி மும்பைக்கு புறப்பட்டோம்.
3 நாள் பயணத்துக்கு பின் மும்பை அருகே வந்தோம். அங்கு இந்திய மீன் பிடி படகு ஒன்றை பிடித்தோம். அதில் இருந்த மீனவர்களை சுட்டுக்கொன்றோம். மும்பை கடற்கரைக்கு வந்தவுடன், தாக்குதல் நடத்த வேண்டிய இடங் களுக்கு டாக்சியில் கிளம்பினோம்.
துப்பாக்கிச்சூடு:

ரயில் நிலையத்தின் முன் உள்ள கழிவறைக்கு சென்று, அங்கு பேக்குகளில் வைத்திருந்த ஏ.கே.47 துப்பாக்கியை தயார் செய்துக் கொண்டு வெளியே வந்து சரமாரியாக சுட்டோம்.
பின்னர் பிணைக் கைதிகளை அடைத்து வைக்க தகுதி யான கட்டிடம் இருக்கிறதா என்பதை பார்க்க வெளியே வந்தோம். ஆனால், தகுதியான கட்டிடம் எதுவும் தெரியவில்லை.
கார் பஞ்சரானது:

இதனால் ஒரு சந்தில் ஓடினோம். அப்போது, போலீஸ் ரோந்து வாகனம் ஒன்று எங்களை நோக்கி வந்தது. அதை நோக்கி சரமாரியாக சுட்டோம். போலீசாரும் எங்களை நோக்கி சுட்டனர். இதில் 2 முறை என் தோளில் குண்டு பாய்ந்தது.
போலீசாரை சுட்டுக்கொன்றவுடன் அவர்களின் வாக னத்திலேயே நாங்கள் புறப் பட்டோம். இஸ்மாயில் ஓட்டினார். வழியில் கார் பஞ்சரானது. அதனால் கீழே இறங்கி அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்தோம்.
அதில் இருந்த 3 பெண் களையும் விரட்டிவிட்டு அதில் நாங்கள் கிளம்பினோம். நான் பின்சீட்டில் அமர்ந்து கொள்ள இஸ்மாயில் காரை ஓட்டினார்.
கடற்கரை அருகே போலீசார் எங்கள் கார் மீது சரமாரியாக சுட்டனர். இஸ்மாயிலும் குண்டடிப்பட்டு விழுந்தார். எங்கள் இருவரையும் மருத்துவமனைக்கு போலீசார் தூக்கிச் சென்றனர். அங்குதான் இஸ்மாயில் இறந்துவிட்டார் என்று எனக்கு தெரிந்தது.
இவ்வாறு அஜ்மல் அமீர் கூறியுள்ளார்.

No comments: