Saturday, December 27, 2008

"அஜ்மல் கசாப் எழுதிய கடிதத்துக்கு ஓரிரு நாளில் பதில் அனுப்பப்படும்'' - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி தகவல்!.



இஸ்லாமாபாத், டிச.28-

தனக்கு சட்ட உதவி அளிக்க வக்கீலை நியமிக்க வேண்டும் என்று கோரி அஜ்மல் கசாப் எழுதிய கடிதத்துக்கு ஓரிரு நாளில் பதில் அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்தார்.

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் அமீர் இமான் என்கிற அஜ்மல் கசாப் என்கிற ஒரே ஒரு தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிபட்டான். ஆனால் அவன் தங்கள் நாட்டைச் சேர்ந்தவனே அல்ல என்று பாகிஸ்தான் இன்னமும் மறுத்து வருகிறது.

இதற்கிடையில், மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஜ்மல், தனக்கு சட்ட உதவி அளிக்க வேண்டும் என்றும், அதற்காக ஒரு வக்கீலை நியமிக்கும்படியும் கோரி பாகிஸ்தானுக்கு கடிதம் எழுதினான். இந்த வார தொடக்கத்தில் அந்தக் கடிதத்தை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரிடம் இந்திய அதிகாரிகள் கொடுத்தனர்.

இந்தக் கடிதம் குறித்து, இஸ்லாமாபாத் நகரில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அந்தக் கடிதம் கிடைத்தது. தனக்கு சட்ட உதவி வேண்டும், அதற்காக ஒரு வக்கீலை நியமிக்க வேண்டும் என்று அஜ்மல் கேட்டுக் கொண்டதாக ஒரு கடிதத்தை இந்திய அதிகாரிகள் கொடுத்துள்ளனர். அந்தக் கடிதத்தில் அஜ்மல் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன் என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அந்தக் கடிதம் பற்றி தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். அஜ்மல் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவனா? அவனுக்கு சட்ட உதவி அளிக்கப்படுமா? அல்லது மறுக்கப்படுமா? என்று டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு, எங்களது வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்னும் ஓரிரு நாளில் பதில் அனுப்பும்.

இப்போதுள்ள சூழ்நிலையில் வெளியுறவுத்துறவு அமைச்சரோ, வேறு மூத்த அதிகாரிகளோ பதில் சொல்ல முடியாது. தெளிவான அறிக்கை வடிவில் அந்த பதில் அமையும்.

அஜ்மல் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். இப்போதைக்கு அஜ்மல் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரா, இல்லையா என்று யூகத்தின் அடிப்படையில் நான் பதில் அளிக்க முடியாது. இது ஒரு வினோதமான வழக்கு. அஜ்மல் பற்றியும், அவனது கடிதம் பற்றியும் அரசின் பல்வேறு துறைகளும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளன. பல சமயங்களில், இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டு இருப்பவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய அரசாங்கம் கூறியபோதெல்லாம், அல்லது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவனா என்று உறுதி செய்யும்படி இந்தியா கோரியபோதெல்லாம் இல்லை என்றே நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆகவே அஜ்மல் விஷயத்தில் இப்போது எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments: