Wednesday, December 24, 2008

ஜன., 10 முதல் சென்னை சங்கமம் கோலாகல துவக்கம்!. - கால கொடுமையடா. !.




சென்னை:
தமிழ் மையம், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை நடத்தும் மூன்றாம் ஆண்டு, "சென்னை சங்கமம்' கலை, திருவிழாவை, வரும் 10ம் தேதி முதல்வர் கருணாநிதி வைக்கிறார்.
இது குறித்து, சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன், கனிமொழி
எம்.பி., தமிழ் மையத் தலைவர் ஜெகத் கஸ்பர் கூறியதாவது:
தமிழ் மையம், தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை இணைந்து நடத்தும், "சென்னை சங்கமம்' கலை, பண்பாட்டுத் திருவிழாவின் மூன்றாமாண்டு நிகழ்ச்சிகள், ஜனவரி 10ம் தேதி துவாங்கி 16ம் தேதி வரை நடக்கிறது. பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், "சென்னை சங்கமம்' திருவிழா நடத்தப்படுகிறது.
ஜனவரி 10ம் தேதி, சென்னை பல்கலை நூற்றாண்டு விழா அரங்கில்
நடக்கும் விழாவில் முதல்வர் கருணாநிதி, விழாவை துவக்கி
வைக்கிறார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை
நிலங்களின் தமிழ் வாழ்வினை வெளிப்படுத்தும் வகையில், கனிமொழி
எம்.பி.,யின் கருத்தாக்கத்தில் உருவான, "நடந்தாய் வாழி காவேரி'
என்ற இசை, நடன நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு விழா, ஜனவரி 16ம்
தேதி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடக்கிறது. "சென்னை
சங்கமம்' நிகழ்ச்சியில் 2,000க்கும் மேற்பட்ட கலைஞர்கள்
பங்கேற்கின்றனர். 1,250 பேர் நாட்டுப்புற கலைஞர்கள். ஜனவரி 11ம்
தேதி முதல் 15ம் தேதி வரை, நகரின் பல்வேறு பகுதிகளில் 4,500
நிகழ்ச்சிகளை கலைஞர்கள் நடத்துகின்றனர்.
கர்நாடகா, கேரளா, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். சென்னை நகரில் உள்ள முக்கிய பூங்காக்கள் உள்ளிட்ட 17 திறந்தவெளி அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பறையாட்டம், பாவைக் கூத்து, தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை உள்ளிட்ட 60 வகையான நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த ஆண்டு, "சென்னை சங்கமம்' நிகழ்ச்சியில் கிராமிய விளையாட்டுகளான களரி, வடம் இழுத்தல், சிலம்பாட்டம், மல்யுத்தம் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. சென்னை நகரின் முக்கிய பூங்காக்களில் சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, அருண், சஞ்சய் சுப்பிரமணியன், உமையாள்புரம் சிவராமன், நித்யஸ்ரீ, சவுமியா உள்ளிட்ட பிரபல கலைஞர்கள் பங்கேற்கும் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சென்னையில் உள்ள 15 ஐந்து நட்சத்திர உணவகங்கள், வீதிகளில் கடைகளை அமைத்து உணவு பரிமாறவுள்ளன. நட்சத்திர ஓட்டல் உணவு வகைகளை 70 ரூபாய்க்கு பொதுமக்கள் ருசிக்க முடியும். இருட்டுக் கடை அல்வா, மணப்பாறை முறுக்கு, மதுரை ஜிகர்தண்டா உள்ளிட்ட சிறப்பு உணவு வகைகள், "சென்னை சங்கமம்' அரங்குகளில் கிடைக்கும். கிராமிய ஓவியக் கலைஞர்களின் கண்காட்சி, மலர்க் கண்காட்சியும் இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னையைப் போல் தஞ்சாவூர், கோவை, திருச்சி ஆகிய நகரங்களிலும் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். "சென்னை சங்கமம்' நிகழ்ச்சியில் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், "டிரம்ஸ்' சிவமணி, சமையல் கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் மகாதேவன், சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தமிழ் மையத்தில் "தமிழ்' இல்லை:
தமிழக கிராமப்புறங்களில் உள்ள
கலை, கலாசாரத்தை சென்னை நகர மக்கள் அறியச் செய்ய வேண்டும் என்ற
நோக்கோடு, "சென்னை சங்கமம்' நடத்தப்படுகிறது. மூன்றாமாண்டு
நிகழ்ச்சிகள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்குவதற்காக,
"தமிழ் மையம்' சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அந்த
அழைப்பில், "தமிழ் மையம்' என்ற ஒரு பெயரைத் தவிர மீதமுள்ள
அனைத்து விவரங்களும், நிர்வாகிகள் பெயரும் ஆங்கிலத்திலேயே
அச்சிடப்பட்டு இருந்தன. அதேபோல், சந்திப்பு நிகழ்ச்சியிலும்
ஆங்கிலம் அதிகளவு பயன்படுத்தப்பட்டது. மேற்கத்திய பாணியில்
அமைந்த உணவு விடுதி ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடந்தது. என்றைக்கு
எந்த நிகழ்ச்சி நடக்கிறது என்ற பட்டியலும் ஆங்கிலத்திலேயே இருந்தது.
இது வல்லவோ "தமிழ் மையம்'? கால கொடுமையடா.

No comments: