Saturday, December 27, 2008

ஜெயலலிதாவுடன் முன்னாள் பிரதமர் தேவேகவுடா சந்திப்பு !.



சென்னை, டிச.28-

மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவேகவுடா நேற்று சென்னையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து, 3-வது அணி பற்றி ஆலோசனை நடத்தினார்.

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.வுடன் கம்ïனிஸ்டு கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. ஏற்கனவே கம்ïனிஸ்டு கூட்டணியில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவேகவுடா நேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

பின்னர் தேவேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் நிலவரங்கள் குறித்து நாங்கள் விரிவாக விவாதித்தோம். எங்கள் கட்சி காங்கிரசையும், பாரதீய ஜனதா கட்சியையும் சம தூரத்தில் வைத்திருக்கிறது.

ஒரு மாத காலத்திற்குள் 3-வது அணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறும். கர்நாடக மாநிலத்தில் இப்போது தான் இடைத்தேர்தல் முடிந்துள்ளது. தமிழகத்திலும் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே இந்த இடைத்தேர்தலுக்கு பின்னர் டெல்லியில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

பகுஜன் சமாஜ் தலைவரும், உத்தரபிரதேச முதல்-மந்திரியுமான மாயாவதி 3-வது அணியின் தலைவராக முன்நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறதே? என்று கேட்டதற்கு; "இந்த சந்திப்பின் போது அதுபற்றி நாங்கள் விவாதிக்கவில்லை'' என்றார்.

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற ஜனதாதளம், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமா? என்று தேவேகவுடாவிடம் கேட்டதற்கு; "கடந்த தேர்தலில் எனது கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தது. எனவே இந்த தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே நீடிக்கும்'' என்று பதில் அளித்தார்.

ஜெயலலிதா கூறுகையில்; தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் பற்றியும் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் பற்றியும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.

கேள்வி ஒன்றுக்கு ஜெயலலிதா பதில் அளிக்கையில்; தற்போது மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீவிரவாதத்தை ஒடுக்கவும், நாட்டையும், மக்களையும் பாதுகாக்க தவறிவிட்டது என்றும், எனவே 3-வது அணி அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாடு எதிர்நோக்கியுள்ள தீவிரவாதம் போன்ற ஆபத்துகளை சமாளிக்க மத்தியில் வலிமையான அரசு தேவை என்றும், பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தங்கள் அணி அமைக்கும் புதிய அரசு தீவிரவாதத்தை ஒடுக்கும் என்றும் அவர் கூறினார்.

3-வது அணியின் கூட்டம் டெல்லியில் நடைபெறும் போது அதில் கலந்து கொள்வீர்களா? என்று கேட்டதற்கு; "இப்போதைய எங்களின் கவனம் எல்லாம் திருமங்கலம் இடைத்தேர்தலில் தான் இருக்கிறது. இந்த தேர்தலுக்கு பின்னரே பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியில் தீவிர கவனம் செலுத்துவேன். திருமங்கலத்தில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எனவே மக்கள் ஆதரவுடன் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்'' என்று ஜெயலலிதா கூறினார்.

திருமங்கலத்தில் 10 அமைச்சர்கள் முகாமிட்டுள்ளார்களே? என்று கேட்டதற்கு, ``தேவையான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்'' என்றார்.

சீதாராம் யெச்சூரி சேது சமுத்திர பிரச்சினையில் அ.தி.மு.க.வுக்கும், மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டுக்கும் மாறுபட்ட கருத்துகள் இருப்பதாக கூறியுள்ளாரே? என்று கேட்டதற்கு, ``எனக்கும் பிரகாஷ் கரத்துக்கும் கருத்து வேறுபாடு இல்லை'' என்று பதில் அளித்தார்.

No comments: