Monday, December 22, 2008

"கல்பாக்கம் அணுமின் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்" - உளவுத்துறை எச்சரிக்கை!.!..!...





புதுடெல்லி, டிச.23-
கல்பாக்கம் அணுமின் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றி 10 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மும்பை தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளின் அடுத்த கட்ட இலக்கு, அவர்களது திட்டம், நடமாட்டம், சதிச் செயல்கள் பற்றி உலக நாடுகளின் உளவு அமைப்புகள் தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றன.

அதன் அடிப்படையில், தீவிரவாதிகள், இந்தியாவில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் கோவா, மற்றும் சென்னையை அடுத்து கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையம் உள்பட நாட்டின் 5 முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவு அமைப்புகள் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யுனியன் உளவுத்துறைகள் இந்த எச்சரிக்கையை தெரிவித்து உள்ளன. அவர்கள் சென்னை-மும்பை இடையே கடல் மார்க்கமாக ஊடுருவ திட்டமிட்டுள்ளதாகவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



குறிப்பாக கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் ஹெலிகாப்டர்களை மோத விட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஹெலிகாப்டர்களை கடத்தி அவற்றின் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கல்பாக்கத்தைச் சுற்றி உள்ள 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது.

கோவா கடற்கரைப் பகுதிகளில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி, தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை வந்துள்ளதால் கோவா கடற்கரைப் பகுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கோவா அரசு தடை விதித்து உள்ளது.

இந்தியாவின் முக்கிய பகுதிகளை தீவிரவாதிகள் தாக்கக் கூடும் என்ற எச்சரிக்கை காரணமாக சென்னை, கோவா, திருவனந்தபுரம் ஆகிய தென்மாநில கடலோரப் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஈடுபடும்படி மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. மாநில அரசுகள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வாரம் தோறும் அறிக்கை அளிக்கும்படியும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


இந்தியா முழுவதும் ஹெலிகாப்டர்களை கடத்தி, எங்கு வேண்டுமானாலும் மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருப்பதால் விமானப்படை உஷார் படுத்தப்பட்டு உள்ளது.

கடல் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க இந்திய கப்பல் படையின் போர்க் கப்பல் `ஐ.என்.எஸ். விராட்' அரபிக் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

No comments: