Sunday, December 28, 2008

"காஷ்மீர் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை" - ஜனநாயகம் வெற்றி !.




ஸ்ரீநகர், டிச.29-

காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால், காங்கிரஸ் கட்சியும், முப்தி முகமது சயீது தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. கடந்த ஆகஸ்டு மாதம், அமர்நாத் நில விவகாரத்தில், காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை மக்கள் ஜனநாயக கட்சி வாபஸ் பெற்றது. இதனால் அரசு கவிழ்ந்தது. சட்டசபை கலைக்கப்பட்டது.

இதையடுத்து, காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம் கருதி, 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 87 தொகுதிகள் உள்ளன. அங்கு ஆட்சி அமைப்பதற்கு குறைந்தபட்சம் 44 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால், எந்த கட்சிக்கும் இந்த மெஜாரிட்டி கிடைக்கவில்லை. உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, 28 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. மக்கள் ஜனநாயக கட்சி 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், பா.ஜனதா 11 தொகுதிகளிலும், ஜம்மு-காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி, சுயேச்சைகள் உள்ளிட்டோர் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அமர்நாத் நில விவகாரம் காரணமாக, ஜம்மு பகுதியில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் முக்கிய தலைவர்கள் அனைவருமே வெற்றி பெற்றுள்ளனர். போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார். அவரது மகன் உமர் அப்துல்லா, முன்னாள் முதல்-மந்திரி முப்தி முகமது சயீது, அவரது மகள் மெகபூபா முப்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி குலாம்நபி ஆசாத், மாநில பா.ஜனதா தலைவர் அசோக் கஜரியா, மார்க்சிஸ்ட் கம்யு னிஸ்டு கட்சி மூத்த தலைவர் முகமது யூஉசுப் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.


தேர்தலில் அதிக இடங்களில் வென்ற தேசிய மாநாட்டு கட்சி, கூட்டணி ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறினார். பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். பா.ஜனதாவுடன் கூட்டு சேருவதை விட, எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தேர்தலில் பரூக் அப்துல்லாவை முதல்-மந்திரி பதவி வேட்பாளராக தேசிய மாநாட்டு கட்சி அறிவித்திருந்தது. ஆனால் தற்போது எம்.பி.யாக உள்ள பரூக் அப்துல்லா, எம்.பி.யாக நீடிப்பதையே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். எனவே, அவரது மகன் உமர் அப்துல்லா, முதல்-மந்திரி ஆவார் என்று தெரிகிறது. இதுபற்றி உமர் அப்துல்லாவிடம் கேட்டபோது, யார் முதல்-மந்திரி? என்று பின்னர் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

தேசிய மாநாட்டு கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் கட்சிகள். ஆகவே, அவை இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. அதை விட்டால், தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும் இணைந்தால்தான் மெஜாரிட்டி பலம் கிடைக்கும். எனவே, காங்கிரஸ் ஆதரவைப் பெற தேசிய மாநாட்டு கட்சி முயன்று வருகிறது.

ஆனால், தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு அளிப்பது பற்றி காங்கிரஸ் கட்சி எதுவும் கூறவில்லை. இதுபற்றி விவாதிப்பதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தில் நேற்று மாலை காங்கிரஸ் மேல்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரிதிவிராஜ் சவான், சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி குலாம்நபி ஆசாத், மத்திய மந்திரி சைபுதின் சோஸ் உள்ளிட்ட அம்மாநில மூத்த தலைவர்களுடன் இன்று சோனியா காந்தி ஆலோசனை நடத்தி, தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு அளிப்பது பற்றி முடிவு எடுப்பது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதே சமயத்தில், காஷ்மீரில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று பா.ஜனதா அறிவித்துள்ளது.

இதற்கிடையே, காஷ்மீர் தேர்தல் குறித்து பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். டெல்லியில் காங்கிரஸ் ஆண்டு விழா கூட்டத்தில் கலந்து கொண்ட மன்மோகன்சிங், இந்த தேர்தல் ஜனநாயகத்துக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் ஆதரவாக நடத்தப்பட்ட தேர்தல் என்று கூறினார்.

சோனியா காந்தி கூறுகையில், `யார் வெற்றி பெற்றார்கள் என்பது பிரச்சினை அல்ல. காஷ்மீர் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது. இதிலிருந்து அண்டை நாடு (பாகிஸ்தான்) பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.

No comments: