Thursday, December 18, 2008

மத்திய மந்திரி அந்துலேயை நீக்கக் கோரி பாராளுமன்றத்தில் அமளி


புதுடெல்லி, டிச.19-

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலின்போது பலியான தீவிரவாத தடுப்பு படை தலைவர் கார்கரே மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய மத்திய மந்திரி அந்துலேயை பதவி நீக்கம் செய்யக்கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

மும்பையில் தீவிரவாதிகள் புகுந்து அட்டகாசம் செய்தபோது, போலீஸ் வேன் ஒன்றையும் கடத்திச் சென்றனர். அப்போது அந்த வேனில் இருந்த தீவிரவாத தடுப்பு படை தலைவர் கார்கரே உட்பட மூன்று போலீஸ் அதிகாரிகளையும், 4 போலீசாரையும் சுட்டுக் கொன்றனர். மாலேகான் குண்டு வெடிப்பில் இந்து பெண் சாமியாருக்கு தொடர்பு இருப்பதை கார்கரே தான் விசாரித்து வந்தார்.

இந்த நிலையில், கார்கரே மரணம் குறித்து மத்திய மந்திரி அந்துலே சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார். நேற்று முன்தினம் அவர் அளித்த பேட்டியில், ``முஸ்லிம் அல்லாத தீவிரவாதிகள் குறித்து கார்கரே விசாரித்து வந்தார். எனவே அவர் தீவிரவாதிகள் மற்றும் வேறு யாராலோ கொல்லப்பட்டு இருக்கலாம். அது பற்றி எனக்கு தெரியாது. தாஜ் ஓட்டல், ஓபராய் ஓட்டல், நரிமன் இல்லம் ஆகிய இடங்களுக்கு செல்லாமல் வேறு இடத்துக்கு அவரை போகச்சொன்னது யார்?'' என்று தெரிவித்து இருந்தார்.

அந்துலேயின் இந்த கருத்துகளால் பா.ஜனதா, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக ஆத்திரம் அடைந்தன. அந்த கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள், பாராளுமன்றத்தில் நேற்று இந்த பிரச்சினையை எழுப்பினர்.
சந்தோஷ் கங்வார் (பா.ஜனதா) பேசும்போது, ``மத்திய மந்திரி அந்துலே தெரிவித்த கருத்துகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்றார்.

பா.ஜனதாவை சேர்ந்த யோகி அதியநாத், `மத்திய மந்திரியாக இருக்கும் ஒருவர் பொறுப்பற்ற முறையில் பேசி இருப்பதாக கூறினார். மேலும் அந்துலே குறித்து சில விமர்சனங்களை தெரிவித்தார். உடனே, சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி குறுக்கிட்டு அவரை கண்டித்ததுடன் அதியநாத் கூறிய வார்த்தைகளையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அனந்த குமார் உள்ளிட்ட பா.ஜனதா எம்.பி.க்களும் ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி.க்களும் அந்துலேக்கு எதிராக கோஷமிட்டனர். பதிலுக்கு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மத்தியில் இருந்தும் எதிர்ப்பு கோஷங்கள் எழுந்தது. இதனால் பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. அமளி நடந்தபோது மந்திரிகள் வரிசையில் புன்சிரிப்புடன் அந்துலே அமர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வயலார் ரவி, ``தன்னுடைய கருத்துக்கு அந்துலே ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டார். தீவிரவாதிகள் தான் கார்கரேயை கொன்றதாக கூறி இருக்கிறார்'' என்றார்.

உடனே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் அவையின் மையப்பகுதிக்கு வந்தனர். இதையடுத்து, ``அந்துலேயிடம் இருந்து அரசு சார்பில் விளக்க அறிக்கை கேட்கப்படும்'' என்று வயலார் ரவி கூறினார்.

டெல்லி மேல்-சபையிலும் இந்த பிரச்சினை எதிரொலித்தது. கேள்வி நேரம் முடிந்ததும் பா.ஜனதா மூத்த தலைவர் அலுவாலியா எழுந்து, ``மூத்த மந்திரி ஒருவர், பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும்'' என்றார்.

அவருக்கு ஆதரவாக பா.ஜனதா, சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் வலியுறுத்தினர். உடனே மேல்-சபை துணைத் தலைவர் ரகுமான்கான் குறுக்கிட்டு, அந்த விஷயம் குறித்து நாளை (இன்று) விவாதம் நடத்தலாம் என்று கூறினார்.

No comments: