Saturday, December 13, 2008

ரஷியாவை சேர்ந்த செனியாவுக்கு உலக அழகி பட்டம் இந்திய அழகி பார்வதி 2-வது இடம் பிடித்தார்




ஜோகன்ஸ்பர்க், டிச.14-
உலக அழகி போட்டியில், ரஷியாவை சேர்ந்த செனியா, முதல் இடம் பிடித்து பட்டம் வென்றார். இந்திய அழகி பார்வதி ஓமன குட்டன், 2-வது இடம் பிடித்தார்.

தென் ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்ஸ்பர்க் நகரில் 58-வது உலக அழகி போட்டி நடைபெற்றது. இந்திய அழகி பார்வதி ஓமனகுட்டன் உள்ளிட்ட 100-க்கு மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் பங்கேற்ற 5 அழகிகளில், இந்திய அழகி பார்வதியும் இடம் பெற்று இருந்தார். உலக அழகி போட்டியின் தேர்வுக்குழு தலைவரான ஜுலியா மொர்லே, போட்டியின் முடிவை அறிவித்தார்.

ரஷியாவின் செனியா சுகினோவா, போட்டியில் முதல் இடம் பிடித்து உலக அழகி பட்டத்தை தட்டிச்சென்றார்.
இந்திய அழகி பார்வதி ஓமனகுட்டனுக்கு 2-வது இடமும், டிரினிடாட்-தொபாகா நாட்டு அழகி கேப்ரியேல் வால்காட்டுக்கு 3-வது இடமும் கிடைத்தது.

ஏற்கனவே நடைபெற்ற உலக அழகி போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த ரீட்டா பாரியா (1966), ஐஸ்வர்யாராய் (1994), டயானா ஹைடன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000) ஆகிய 5 அழகிகள், உலக அழகி பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்கள் வரிசையில், உலக அழகி பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட பார்வதி, நூலிழையில் அந்த வாய்ப்பை தவறவிட்டு, 2-வது இடம் பிடித்தார்.
உலக அழகி போட்டியில் 2-வது இடம் பிடித்த பார்வதி ஓமன குட்டனுக்கு வயது, 21. கேரள மாநிலம், சங்கணாச்சேரியை சேர்ந்த அவர், தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டு உலக அழகி போட்டியில் பங்கேற்ற பார்வதி, ஏற்கனவே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, `மிஸ் மலையாளி 2005', `மலையாளி மங்கா 2005', `கடற்படை ராணி' - கொச்சி (2006), கடற்படை ராணி - விசாகப்பட்டினம் (2007) போன்ற பல்வேறு அழகி பட்டங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்வதி ஓமன குட்டன், ஏற்கனவே அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் நடிக்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் ஹிரித்திக் ரோஷனில் இருந்து சல்மான்கான் வரை அனைத்து நடிகர்களுடனும் நடிக்க விரும்புவதாகவும் கூறி இருந்தார்.

No comments: