Thursday, December 25, 2008

வாஜ்பாய்க்கு (85-வது பிறந்தநாள்) ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!.


புதுடெல்லி, டிச.26-

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 85-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல்நலக்குறைவு காரணமாக, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். கடந்த சில மாதங்களாக நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவருக்கு நேற்று 85-வது பிறந்தநாள்.

மும்பை தாக்குதல் காரணமாக, தனது பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என்று வாஜ்பாய் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி, அவர் நேற்று பிறந்தநாள் கொண்டாடவில்லை. இருப்பினும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.

ஜனாதிபதி பிரதீபாபட்டீல், அதிகாரிகள் மூலமாக பூங்கொத்து மற்றும் வாழ்த்துச்செய்தியை வாஜ்பாய்க்கு அனுப்பி வைத்தார். துணை ஜனாதிபதி அமீது அன்சாரியும் வாஜ்பாய்க்கு பூங்கொத்து மற்றும் வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்தார்.

பிரதமர் மன்மோகன்சிங், டெல்லியில் கிருஷ்ணமேனன் மார்க்கில் உள்ள வாஜ்பாய் இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவர் வாஜ்பாயுடன் 15 நிமிட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.


பா.ஜனதா மூத்த தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எல்.கே.அத்வானி, வாஜ்பாயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன், ஜஸ்வந்த்சிங், உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி பி.சி.கந்தூரி, வி.கே.மல்கோத்ரா, இந்திய தேசிய லோக்தள தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலா, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா, ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் உள்பட ஏராளமான பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் வாஜ்பாயை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

பா.ஜனதா தேசிய செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான திருநாவுக்கரசர் எம்.பி., நேற்று காலை 11 மணியளவில் வாஜ்பாயை அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


டெல்லி மாநில முன்னாள் முதல்-மந்திரி மதன்லால் குரானா, வாஜ்பாயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் லக்னோ தொகுதியில் போட்டியிடுமாறு வாஜ்பாயிடம் கூறியதாக தெரிவித்தார். தனது யோசனைக்கு வாஜ்பாய் தலையசைத்ததாகவும், ஒன்றும் சொல்லவில்லை என்றும் அவர் கூறினார்.

No comments: