Monday, December 29, 2008

மதுரையில் குடிபோதையில் ரகளை: 15 பஸ்கள் உடைப்பு: 45 பேர் கைது!.


மதுரை:

தீரன் சின்னமலைக்கு சிலை வைக்க இடம் ஒதுக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் சிலர், குடி போதையில் ரகளை செய்து, 15 பஸ்களின் கண்ணாடியை உடைத்தனர். போலீசார் தடியடி நடத்தி 45 பேரை கைது செய்தனர்.

மாசி வீதி, மேற்கு மாசி வீதி சந்திப்பில், தமிழ்நாடு அனைத்து கவுண்டர்கள் நலச்சங்கம் சார்பில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு சிலை வைக்க இடம் ஒதுக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். தூத்துக்குடியை சேர்ந்த அனைத்து கவுண்டர் நலச்சங்க பொதுச் செயலர் கருணாகரன் தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் கரூர் ராமசாமி, மாநில பொருளாளர் பிரமியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.பகல் 11.45 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கி 12.45 மணிக்கு ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கலைந்து சென்றனர்.அப்போது குடிபோதையில் இருந்த சிலர், வடக்கு வெளி வீதி சிக்னல் அருகே பஸ்களை மறித்தனர்.

ஆர்ப்பாட்ட இடத்தில் இருந்த போலீசார் ஓடி வந்தனர். அதற்குள் கும்பலாக திரண்டவர்கள் அவ்வழியே வந்த பஸ்கள் மீது கல்வீசினர்.கிருஷ்ணராயர் தெப்பம் தெரு, சிம்மக்கல் வரை தொடர்ந்து 15 பஸ்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை புதிய தாழ்தள சொகுசு பஸ்கள். இதை தவிர ரோட்டோரம் நின்றிருந்த ஆட்டோ, கார், பைக்குகளை சேதப்படுத்தினர். போலீசார் அக் கும்பல் மீது தடியடி நடத்தினர். ஆத்திரமடைந்த கும்பல் கடைகள் மீது கல்வீசினர். போலீசார் கும்பலை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதனால், ஆத்திரமடைந்த கும்பல் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்தனர்.

கல்வீச்சில், ஈடுபட்டவர்களில் போதையில் இருந்த ஒருவரை அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் காயமடைந்த அவரை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு கமிஷனர் நந்தபாலன், துணை கமிஷனர்கள் தொண்டிராஜ், ராஜேந்திரன் அதிரடிப்படையுடன் வந்து ரகளையை கட்டுப்படுத்தினர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கல்வீச்சு சம்பவத்தால் பதற்றம் அடைந்து அப்பகுதி கடைகள் அடைக்கப்பட்டன. மதியம் 1 மணிக்குள் இந்த சம்பவங்கள் நடந்து முடிந்தன. ரகளை அடங்கிய பின் கடைகள் திறக்கப்பட்டு சகஜநிலை திரும்பியது. ரகளையில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.போலீஸ் கமிஷனர் நந்தபாலன் கூறுகையில்,"சம்பவம் நடந்த 10 நிமிடத்தில், போலீசார் திறமையாக செயல்பட்டு கலவரக்காரர்களை கைது செய்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்' என்றார்.

No comments: