Monday, December 15, 2008

இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி











சென்னை, டிச.16-
சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் கடினமான இலக்கை எட்டிப்பிடித்து இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது.
இதன் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 316 ரன்களும், இந்தியா 241 ரன்களும் எடுத்தன. 75 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 311 ரன்கள் குவித்து `டிக்ளேர்' செய்தது.

பின்னர் 387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. கம்பீர் 41 ரன்களுடனும், டிராவிட் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அதிரடியாக ஆடிய ஷேவாக் 68 பந்துகளில் 83 ரன்கள் விளாசி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்து ஆட்டம் இழந்தார்.
நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 256 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. கம்பீர், டிராவிட் தொடர்ந்து விளையாடினார்கள். நேற்றைய ஆட்டத்தின் 3-வது ஓவரிலேயே டிராவிட் (4 ரன்), பிளின்டாப் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பிரையரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மோசமான பார்மில் இருக்கும் அவர் முதல் இன்னிங்சில் 3 ரன் தான் எடுத்து இருந்தார்.

இதை தொடர்ந்து தெண்டுல்கர், கம்பீருடன் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடியது. சிறப்பாக ஆடிய கம்பீர் அரை சதம் அடித்தார். அவர் 105 பந்துகளில் 5 பவுண்டரியுடன் அரை சதத்தை கடந்தார். அவர் அடித்த 8-வது அரை சதம் இதுவாகும்.
அணியின் ஸ்கோர் 183 ரன்னாக இருந்த போது தொடக்க ஆட்டக்காரர் கம்பீர், ஆண்டர்சன் பந்து வீச்சில் காலிங்வுட்டிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். கம்பீர் 139 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 66 ரன் எடுத்தார்.
அடுத்து வி.வி.எஸ்.லட்சுமண், தெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்தார்.48.1 ஓவர்களில் இந்தியா 200 ரன்னை எட்டியது. மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்து இருந்தது. 42 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 26 ரன் எடுத்த நிலையில் லட்சுமண், ஸ்வான் பந்து வீச்சில் இயான்பெல்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 224 ரன்னாக இருந்தது.

5-வது விக்கெட்டுக்கு யுவராஜ்சிங், தெண்டுல்கருடன் இணைந்தார். இந்த ஜோடி நங்கூரம் பாய்த்தது போல் நிலைத்து நின்று ஆடியது. தவறான பந்துகளை தண்டித்தும், சரியான பந்துகளை தடுத்தும் ஆடிய இந்த இணை அணியை வெற்றி பாதையில் அடிபிசகாமல் பயணிக்க வைத்தது. தெண்டுல்கர் 107 பந்துகளில் 5 பவுண்டரியுடன் அரை சதத்தை கடந்தார். 78 ஓவர்களில் இந்தியா 300 ரன்னை தாண்டியது. தேனீர் இடைவேளையின் போது இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 304 ரன் எடுத்து இருந்தது.

தெண்டுல்கர், யுவராஜ்சிங் ஜோடி தொடர்ந்து சிறப்பாக ஆடியது. அபாரமாக ஆடிய யுவராஜ்சிங் 76 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் தனது 4-வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இங்கிலாந்து அணி கேப்டன் பீட்டர்சன் பந்து வீச்சாளர்களை மாற்றி, மாற்றி பந்து வீச வைத்தும் இந்த ஜோடியை கடைசி வரை பிரிக்கவில்லை.

நிலைத்து நின்று ஆடிய தெண்டுல்கர் ஸ்வான் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அதோடு அவர் அந்த பவுண்டரியுடன் அவர் சதமும் அடித்தார். அவர் அடித்த 41-வது சதம் இதுவாகும்.
98.3 ஓவர்களில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 387 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது. தெண்டுல்கர் 196 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 103 ரன்னும், யுவராஜ்சிங் 131 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 85 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 68 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 83 ரன் எடுத்த அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து 316
இந்தியா 241
2-வது இன்னிங்ஸ்
இங்கிலாந்து 311/9 டிக்ளேர்
இந்தியா:
கம்பீர் (சி) காலிங்வுட் (பி) ஆண்டர்சன் 66
ஷேவாக் எல்.பி.டபிள்ï (பி) ஸ்வான் 83
டிராவிட் (சி) பிரையர் (பி) பிளின்டாப் 4
தெண்டுல்கர் (நாட்-அவுட்) 103
லட்சுமண் (சி) இயான்பெல் (பி) ஸ்வான் 26
யுவராஜ்சிங் (நாட்-அவுட்) 85
எக்ஸ்டிரா 20
மொத்தம் (98.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 387
விக்கெட் வீழ்ச்சி: 1-117, 2-141, 3-183, 4-224
பந்து வீச்சு விவரம்:
ஹார்மிசன் 10-0-48-0
ஆண்டர்சன் 11-1-51-1
பனேசர் 27-4-105-0
பிளின்டாப் 22-1-64-1
ஸ்வான் 28.3-2-103-2

No comments: