Friday, December 19, 2008

மும்பை தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகள் பலி பற்றி சர்ச்சைக்குரிய கருத்து! - மத்திய மந்திரி அந்துலே ராஜினாமா!.


மும்பை தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகள் பலியானதுபற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட மத்திய மந்திரி அந்துலே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

புதுடெல்லி, டிச.20-

நவம்பர் 26-ந்தேதி, மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில், தீவிரவாதிகள் தடுப்பு போலீஸ் பிரிவின் தலைவர் ஹேமந்த் கார்கரே உள்பட 3 உயர் போலீஸ் அதிகாரிகளும் பலியானார்கள்.


மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக, பிரக்யாசிங் தாகூர் என்ற பெண் சாமியார் உள்ளிட்ட இந்து மத அமைப்புகளை சேர்ந்த சிலரும் கைது செய்யப்பட்டு இருந்தனர். இதற்கிடையில், தீவிரவாதிகளின் தாக்குதலின்போது கார்கரே கொல்லப்பட்டது குறித்து, மத்திய சிறுபான்மையோர் நலத்துறை மந்திரி ஏ.ஆர்.அந்துலே சமீபத்தில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அந்துலே தனது பேட்டியின்போது. "முஸ்லிம் அல்லாத தீவிரவாதிகள் குறித்தும் கார்கரே விசாரித்து வந்தார். எனவே அவருடைய படுகொலைக்கு தீவிரவாதிகள் மட்டுமின்றி வேறு சிலரும் காரணமாக இருக்கலாம்'' என்று கூறியதே இந்த சர்ச்சைக்கு காரணம்.

அந்துலேயின் இந்த கருத்துக்கு பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மந்திரி அந்துலேவை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் அமளி ஏற்பட்டது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலை திசை திருப்பும் வகையில் அந்துலேயின் கருத்து இருப்பதாக காங்கிரஸ் கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், மத்திய மந்திரி பதவியை அந்துலே ராஜினாமா செய்த தகவல் நேற்று வெளியானது. கடந்த புதன்கிழமை அன்றே, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துவிட்டார். ஆனால், அதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. ராஜினாமா கடிதம் அனுப்பிய தகவலை அந்துலே உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ இல்லை.

அதே நேரத்தில் தனது கருத்தில் உறுதியாக உள்ள அந்துலே, "நான் உண்மையைத்தான் சொன்னேன். அதற்காக மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் பெருமைப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.


நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, "கார்கரே தீவிரவாதத்துக்கு பலியானாரா? அல்லது தீவிரவாதத்துடன் வேறு எதுவும் நடந்ததா? என்று எனக்கு தெரியாது... கார்கரே போன்ற நேர்மையான மனிதர்கள் லட்சத்தில் ஒருவர்தான் பிறப்பார்கள். அவரை மரணப்பிடியில் தள்ளியது யார்? தாஜ், ஓபராய் ஓட்டல்கள் தாக்குதலில் பற்றி எரிந்தபோது, அவரை காமா ஓட்டலுக்கு (கார்கரே சுட்டுக் கொல்லபட்ட இடம்) போகச்சொல்லி திசை திருப்பியது யார்?'' என்றுதான் கேள்வி எழுப்பியதாக அந்துலே கூறினார்.

"ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தப்பட்டீர்களா?'' என்று கேட்டதற்கு, "அந்துலே போன்ற ஒருவரை ராஜினாமா செய்யும்படி யாராவது கட்டளையிட முடியுமா?'' என்று அவர் எதிர்கேள்வி எழுப்பினார். பிரதமர் உங்கள் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டாரா? என்ற மற்றொரு கேள்விக்கு, அதை பிரதமரிடமே கேளுங்கள் என்று அந்துலே பதில் அளித்தார்.


இதற்கிடையில், அந்துலேவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி நேற்று 2-வது நாளாக பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் அமளி ஏற்பட்டது. மேல் சபையில் கேள்வி நேரம் முடிந்ததும் இந்த பிரச்சினையை பா.ஜனதா உறுப்பினர் எஸ்.எஸ்.அலுவாலியா எழுப்பினார்.

"இந்த பிரச்சினையில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்காமல் பிரதமர் மவுனம் சாதிப்பது வியப்பை அளிப்பதாக'' கூறிய அவர், "தாவூத் இப்ராகிம் அல்லது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் கைப்பாவையாக அந்துலே செயல்படுகிறாரா?'' என்று கேள்வி எழுப்பினார்.

பாகிஸ்தானின் `நிïஸ் ஒன்' தனியார் டி.வி. நிறுவனத்தின் கருத்தை அந்துலே பிரதிபலிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மனோகர் ஜோஷி (சிவசேனா) உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் அந்துலேவை `டிஸ்மிஸ்' செய்யும்படி வற்புறுத்தினார்கள்.

சிவசேனா உறுப்பினர் பரத்குமார் ரவுத் பேசும்போது, நாட்டின் சமூக-மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் அந்துலேயின் கருத்து இருப்பதாகவும், அதற்காக பிரதமர் மன்மோகன்சிங் அவரை மன்னிப்பு கேட்க வைத்து, `டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் என்றார்.


டிசம்பர் 23-ந்தேதி பாராளுமன்ற கூட்டம் முடிவடைவதற்கு முன்பு, மந்திரி பிரணாப்முகர்ஜி சபையில் விளக்கம் அளிப்பார் என்று மந்திரி நாராயணசாமி அளித்த உறுதிமொழியை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மக்களவையில் கேள்வி நேரம் முடிந்ததும் பா.ஜனதா உறுப்பினர் சுமித்ரா மகாஜன், இந்த பிரச்சினை தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு நோட்டீசு கொடுத்து பேசினார்.

அப்போது அவர், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை பலவீனப்படுத்தும் விதத்தில், மத்திய மந்திரி ஒருவர் பொறுப்பற்ற முறையில் கருத்து வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அரசியல் தலைவர் ஒருவர் உடந்தையாக இருந்ததாக மராட்டிய மாநிலத்தில் கூறப்படுவது பற்றி முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

No comments: