Saturday, December 20, 2008

காங்கிரஸ் ஆபீஸ் மீதான தாக்குதலை கண்டித்து மறியல்!. - தங்கபாலு எம்.பி. உள்பட 325 பேர் கைதாகி விடுதலை!.



தேனி, டிச.21-

சென்னையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு எம்.பி. உள்பட 325 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

சென்னையில் சத்திய மூர்த்தி பவன் தாக்கப்பட்டதை கண்டித்து தேனியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் காங்கிரசார் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் தேனி - பெரியகுளம் சாலைக்கு ஊர்வலமாக வந்தனர்.

அப்போது சாலையோரத்தில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ்போர்டை காங்கிரசார், அடித்து நொறுக்கினார்கள். அதிலிருந்த திருமாவளவனின் உருவப்படத்தை தனியாக எடுத்து தீ வைத்து கொளுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து தேனி-பெரியகுளம் சாலையில் பெத்தாச்சி விநாயகர் கோவில் அருகே, தங்கபாலு, ஆரூண் எம்.பி. ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 3/4 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் மறியலை கைவிடாததைத்தொடர்ந்து, தங்கபாலு உள்ளிட்ட 325 காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் முதலில் தேனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதன்பின்னர் தேனி அம்பி வெங்கடசாமி திருமண மண்டபத்துக்கு மினி பஸ்சில் கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் கைதான அனைவரும் மாலை 4.45 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர்.

தங்கபாலு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்றும் இது தொடர்பான அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்'' என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, தேனி மாவட்ட இ.காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் தேனி என்.ஆர்.டி. மக்கள் மன்றத்தில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-


தமிழகத்தில் மாறி, மாறி திராவிட இயக்கங்களை ஆதரித்து வருகிறோம். இதனால் நாம் ஆட்சிக்கு வருவதற்கு தவறி விட்டோம். இன்றைய தினம் தமிழகத்தில் காங்கிரஸ் தயவு இல்லாமல் தி.மு.க. ஆட்சி இல்லை. கூட்டணியில் இருப்பதால், தி.மு.க.வை தூக்கி பிடித்து கொண்டிருக்கிறோம்.

ஏனென்றால், கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது சோனியா காந்தி தலைமையில் ஆட்சி அமைய தி.மு.க. தலைவர் கருணாநிதி பாடுபட்டார். இந்த மத்திய கூட்டணி ஆட்சியில் தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இதற்காக தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. ஆட்சியில் பங்கு வேண்டுமென்றாலும் தவறு இல்லை. ஆட்சி நடத்த உரிமையும், தகுதியும் நமக்கு இருக்கிறது.

மத்தியில் நல்லாட்சி வழங்கும் நம்மால் தமிழ்நாட்டில் நல்லாட்சி வழங்க முடியாதா? நம்முடைய தலைவர்கள் வாசன், சிதம்பரம் போன்றோர் ஓரணியில் நிற்கிறோம். எங்களை பிரித்து பார்க்கவும், பிரித்தாளவும் முடியாது. ஆட்சிக்கு வரும்வரை ஓய மாட்டோம்.

சத்தியமூர்த்தி பவனில் கட்சி அலுவலகத்தையும், காங்கிரஸ் கட்சிக்காரர்களையும் விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தினர் தாக்கியதாக கேள்விப்பட்டேன். சோனியாவின் உருவப்பொம்மையை எரிப்பதை ஏற்க முடியாது.

சோனியா உருவப்பொம்மையை எரித்தவர்களை என் உயிரே போனாலும் தமிழகத்தில் நடமாட விடமாட்டேன். இந்தியா முழுவதும் சோனியா காந்தியின் அலை வீசுகிறது. அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் சோனியா தலைமையில் ஆட்சி அமையும். காங்கிரஸ் எந்த அணியில் சேருகிறதோ? அந்த அணிதான் வெற்றி பெறும். காங்கிரஸ் தோழர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும்.

இவ்வாறு கே.வி.தங்கபாலு பேசினார்.

No comments: