Friday, December 26, 2008

பாகிஸ்தானுடன் போர்?. - முப்படை தளபதிகளுடன் மன்மோகன் அவசர ஆலோசனை!.


புதுடெல்லி, டிச.27:

இந்திய எல்லையில் படைகளை பாகிஸ்தான் வேகமாக குவித்து வருகிறது. இதனால், போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, முப்படை தளபதிகளுடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியதை தொடர்ந்து இந்தியா & பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு மாதமாக பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு, பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை ஒப்படைக்க இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது.
"போதுமான ஆதாரங்களை கொடுத்துவிட்டோம். இனி பேசி பயனில்லை. பாகிஸ்தான்தான் செயல்பட வேண்டும். இல்லாவிடில் எந்த நடவடிக்கையும் எடுக்க இந்தியாவுக்கு உரிமையுள்ளது" என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி எச்சரித்தார்.
இதனால், இந்தியா போர் தொடுத்துவிடுமோ என்ற பயம், பாகிஸ்தானிடம் ஏற்பட்டுள்ளது.

படை குவிப்பு: இதையடுத்து, இந்திய எல்லையில் படைகளை பாகிஸ்தான் குவிக்கத் தொடங்கியுள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ராணுவத்தின் 10, 11வது படைப் பிரிவுகளை நிறுத்தியுள்ளது. 3வது பீரங்கி படைப் பிரிவை ஹெலூம் பகுதிக்கு அனுப்பியுள்ளது.
மேலும் பல படைப் பிரிவுகள் காஷ்மீர் எல்லையை நோக்கி விரைகின்றன.
ஆப்கன் எல்லையில் தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து போராடி வரும் படைகளையும், காஷ்மீர் எல்லைக்கு வரும்படி பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் படைகளை அதிகளவில் குவிக்க திட்டமிட்டு, பாகிஸ்தான் இவ்வாறு செய்கிறது. கைபர் கணவாய் பகுதியில் இருந்த தனது படைகளையும்இந்திய எல்லைக்கு பாகிஸ்தான் அனுப்பியுள்ளது. விமானப் படையையும் உஷார் நிலையில் வைத்துள்ளது. லாகூர், ராவல்பிண்டி, சர்கோதா, மியான்வாலி தளங்களில் உள்ள விமானங்கள், போருக்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. எப்&16, மிராஜ் ரக போர் விமானங்கள், போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.
இரவு நேரங்களில் விமான தாக்குதல் நடந்தால் அபாய சங்கு ஒலித்ததும் வீடுகளில் மக்கள் விளக்குகளை அணைக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. விடுமுறையில் சென்றுள்ள ராணுவ அதிகாரிகள், வீரர்கள் உடனடியாக பணிக்கு திரும்பும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.
மன்மோகன் அவசர ஆலோசனை: எல்லையில் படைகளை பாகிஸ்தான் குவித்து வருவதையடுத்து, முப்படை தளபதிகளுடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் கலந்து கொண்டார்.
எந்த சூழ்நிலையையும் சமாளிக்க முப்படைகளும் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அப்போது, எதையும் சமாளிக்கும் வகையில் முப்படைகளும் தயாராக இருப்பதை ஆதாரத்துடன் பிரதமரிடம் முப்படை தளபதிகளும் எடுத்துக் கூறினர்.
இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள எல்லையில் படைகளை பாகிஸ்தான் குவித்து வருவதால், அந்தப் பகுதியில் வசிக்கும் கிராம மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

No comments: