Sunday, December 21, 2008

மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மலிடம், அமெரிக்க அதிகாரிகள் 9 மணி நேரம் தொடர் விசாரணை!.



மும்பை, டிச.22-

மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மலிடம் அமெரிக்க உளவுத்துறை (எப்.பி.ஐ.) அதிகாரிகள் 9 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து, அவனுக்கு பயிற்சி அளித்தவர்கள், மும்பை தாக்குதலுக்காக மூளைச் சலவை செய்தவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்தனர்.

கடந்த 26-ந் தேதி பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசவ் என்னும் ஒரே ஒரு தீவிரவாதி மட்டும் காயங்களுடன் பிடிபட்டான்.

அவனை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மும்பை தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். அமெரிக்க குடிமகன், அமெரிக்காவுக்கு வெளியே வேறு ஒரு நாட்டில் இறந்தால் அது குறித்து எப்.பி.ஐ. வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பது அந்த நாட்டின் சட்டவிதி.

எனவே மும்பை தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் பலியாகியது குறித்து விசாரிக்கவும், தீவிரவாத தாக்குதல் குறித்த விசாரணையில் இந்திய புலனாய்வு அமைப்புகளுக்கு உதவவும் அமெரிக்க உளவுத்துறை (எப்.பி.ஐ) அதிகாரிகள் குழு மும்பைக்கு வந்து கடந்த 3 வாரங்களாக முகாமிட்டு உள்ளது.


இந்த நிலையில் அமெரிக்க உளவுத்துறை (எப்.பி.ஐ.) அதிகாரிகள், அஜ்மலிடம் 9 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தினர். அவனது சொந்த ஊர் பற்றி அதிகாரிகள் விலாவாரியாக விசாரித்தனர். அஜ்மல் பாகிஸ்தானில் எங்கு பயிற்சி பெற்றான், அவனுக்கு பயிற்சி அளித்தவர்கள் யார், யார், அவனுக்கு மூளைச்சலவை செய்தது யார் என்பது பற்றி உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்து அறிந்தார்கள்.

அவர்களிடம் விசாரணையின்போது அஜ்மல் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் பாகிஸ்தானில் உள்ள பரித்கோட் மாவட்டத்தில் உக்காட் பகுதியை சேர்ந்தவன். 2000-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை இடையிலே விட்டுவிட்டேன். அதை அடுத்து நான் லாகூரில் என் சகோதரருடன் தங்கி இருந்தேன். அங்கு சின்னச்சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வந்தேன். அடுத்து சகோதரர்களுடனும், குடும்பத்துடனும் சண்டை ஏற்பட்டது.


வீட்டை விட்டு வந்து ஒரு கிரிமினல் கூட்டத்தில் சேர்ந்தேன். அப்போது ராவல்பிண்டியில் உள்ள சந்தையில் ஆயுதங்கள் வாங்கிக் கொண்டிருந்த ஜமாத்-உத்-தாவா இயக்கத்தினரை நானும், எனது நண்பனும் சந்திக்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து எங்களுக்குள் அறிமுகம் ஆனது. அந்த இயக்கத்தில் சேர்ந்தோம். புனிதப்போருக்கான பயிற்சி பெற்றோம்.

அந்தப் பயிற்சியின் போது காஷ்மீரில் நடக்கும் வன்கொடுமைகள் பற்றிய படங்களை எங்களுக்கு போட்டுக் காட்டினார்கள். லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் முகமது சயீத்தின் வீராவேசப் பேச்சை கேட்க நேர்ந்தது. இவற்றுக்குப்பின்னர் தான் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துக்காக உயிரைக்கொடுப்பது மேலானது என்பதை நம்பினேன். எனது தியாகத்துக்காக குடும்பத்துக்கு 11/2 லட்சம் ரூபாய் தருவதாக லஷ்கர்-இ-தொய்பா தளபதி ஜாகி-உர்-ரகுமான் லக்வி உறுதி அளித்தார்.

இவ்வாறு அவன் கூறினான்.
இந்த விசாரணையின் போது, அஜ்மல் கூறியதில் இருந்து அவனுக்கு மூளைச்சலவை செய்தவர்கள், பயிற்சி அளித்தவர்கள் படங்களை அமெரிக்க உளவுத்துறையினர் வரைந்திருப்பதாகவும், பாகிஸ்தான் வரைபடத்தை காட்டி அஜ்மலிடம் சில குறிப்பிட்ட இடங்களை அறிந்து, குறித்துக்கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

No comments: