Thursday, December 11, 2008

"தடை விதித்தது பற்றி கவலை இல்லை." - ஐமாத் உத் தவா தீவிரவாத இயக்கம்


ஐ.நா. சபை விதித்த தடையை நினைத்து கவலைப்படவில்லை என்று ஐமாத் உத் தவா தீவிரவாத இயக்கம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த இயக்கத்தின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி தலைவர் மவுலானா அப்துல் அஜீஸ் ஆல்வி கூறியதாவது:-
நாங்கள் ஐ.நா.விடமோ அல்லது பாதுகாப்பு கவுன்சிலிடமோ அனுமதி கேட்டு செயல்படுபவர்கள் அல்ல. எனவே, இந்த தடையை நினைத்து நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் செயல்பாடுகளை வழக்கம்போல் மேற்கொள்வோம். இந்த தடையே ஆதாரம் இல்லாமல் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதல் எங்களுக்கு கவலை அளிக்கிறது. அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு காரணமான இதுபோன்ற தாக்குதல்களில் நாங்கள் ஈடுபடுவது இல்லை.

எங்கள் நாடான பாகிஸ்தானும், ஐ.நா. சபையில் உறுப்பினராக உள்ளது. எனவே, பாகிஸ்தான் எங்களுக்கு தடை விதித்து, எங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் எடுத்துக் கொள்ளட்டும். மும்பை தாக்குதலில் எந்த விதத்திலாவது நாங்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக நிரூபித்தால், எங்கள் தவறை ஒப்புக்கொள்கிறோம்.
லஸ்கர்-இ-தொய்பா தடை செய்யப்படுவதற்கு முன்பிருந்தே ஜமாத் உத் தவா செயல்பட்டு வருகிறது. எங்களுக்கு லஸ்கர் இயக்கத்துடன் தொடர்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.நா. சபையால் `தீவிரவாதி' என அறிவிக்கப்பட்ட ஜமாத் உத் தவாவின் தலைவர் ஹபீஸ் முகமது சயீத், ஐ.நா. சபையின் தடை அறிவிப்புக்கு முன்பாக அளித்த பேட்டியில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அவர் கூறியதாவது:-
ஐ.நா. சபையில் எங்கள் மீது இந்தியா கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை. எங்களுக்கு தீவிரவாதத்துடன் தொடர்பு இல்லை. நாங்கள் நிவாரண பணியிலும், கல்வி பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜமாத் உத் தவா அலுவலகத்தில் சோதனை நடத்தப்படவில்லை. கைது செய்யப்பட்ட சகியுர் ரகுமான் லக்விக்கு எங்கள் இயக்கத்துடன் தொடர்பு இல்லை.
மும்பை தாக்குதலில் ஈடுபட்டு பிடிபட்ட தீவிரவாதி அஜ்மலை நான் பார்த்ததே இல்லை. லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தினர் யாரும் எனது இயக்கத்தில் சேரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments: