Wednesday, December 10, 2008

இன்று கார்த்திகை தீப திருவிழா







tதமிழகம். டிசம்பர் 11



கார்த்திகை தீபத் திருவிழாவில் திருக்கோவில்களிலும், நமது வீடுகளிலும் வரிசையாக அகல்விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபடுகிறோம். களிமண்ணால் செய்யப்பட்டு, வரிசையாக ஏற்றப்படும் விளக்குகள், பார்ப்பதற்கு அழகாகவும், மனதுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கக்கூடியதாக விளங்குகின்றன.



மனிதன் நாகரிகம் அடையாத கற்காலத்தில், நெருப்பின் அவசியத்தையும், உபயோகத்தையும் அறிந்து வைத்திருந்தான். சற்று நாகரிகம் முன்னேற்றம் அடைந்த புதிய கற்காலத்தில், ஓரிடத்தில் தங்க குடியிருப்புகளை அமைத் துக்கொண்டு வாழத் தொடங்கினான். இக்காலத்தில் அவனுக்கு விளக்கின் அவசியம் தேவைப்படலாயிற்று. எனவே, கையால் ஈரமான களிமண்ணை சற்று குழிவாக சிறுவிளக்கு போன்று செய்து பயன்படுத்திக் கொண் டதை, பையம்பள்ளி போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளினால் அறிய முடிகிறது. அடுத்து வந்த இரும்புகாலத்தில், பெரிதும் முன்னேற்றம் அடைந்த நிலையில் சக்கரத்தில் பானைகள், சிறுவிளக்குகள் செய்யத் தொடங்கினான். ஈரமான களிமண்ணில் செய்து, பின்னர் அதை சூளையில் இட்டு செய்து கொள்ளும் திறனைப் பெற்று விளங்கினர், என்பதை தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளின் மூலம் அறிய முடிகிறது. சற்று குழிவான சிறிய மண் பாத்திரம், "அகல்' என்று அழைக்கப்பட்டது. கொடுமணல், அரிக்கமேடு, கரூர் போன்ற இடங்களில், அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த சிறு மண்பாத்திரங்களில், "கூல அந்தைய் சம்பன் அகல், வாருணி இய் அகல், முதிகுயிர அன் அகல், குறஅகல்' என்றெல்லாம் பண்டைய தமிழ்-பிராமி எழுத்துக்களில் பொறிப்புகள் காணப்படுவது சிறப்பாகும். கி.பி., 10-11ம் நூற்றாண்டுகளில் களிமண் அகல்விளக்குகளின் வடிவத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. அகல் விளக்குகளில் 4 திரிகள், 6 திரிகள், 8 திரிகள் போடும் அளவுக்கு செய்யப்பட்ட விளக்குகள் பழையாறை, தாராசுரம், திருவாமாத்தூர், போளுவாம்பட்டி போன்ற இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. இத்தகைய விளக்குகளில் நடுப்பகுதி சற்று மேடாக, நீளமான நூல்திரி வைப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. அகல் விளக்குகள் களிமண்ணால் மட்டும் செய்யப்படவில்லை. திருச்சோற்றுத்துறை கோவிலுக்கு செம்பினால் ஆன 32 அகல் விளக்குகள் அளிக்கப் பட்டதை ஒரு கல்வெட்டினால் அறிய முடிகிறது. திருவண்ணாமலை திருக் கோவிலில் கார்த்திகைத் திருநாளில் அகல் விளக்குகளை ஏற்றவும், தானம் அளித்ததாக முதலாம் இராஜேந்திர சோழன் கால கல்வெட்டால் அறிய முடிகிறது.




களிமண் அகல் விளக்குகளில் ஏற்றப்படும் தீபம் மிகச் சிறந்தது என, ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகின்றனர்; தொன்மைச் சிறப்பு வாய்ந்த அகல்விளக்குகளை கார்த்திகைத் தீபத்திருநாளில் ஏற்றி மகிழ்வோம்!




பின் குறிப்பு: அகல் விளக்குகள் சக்கரத்தில் வைத்து செய்யப்பட்ட, ஒரு திரி போடக்கூடிய ஒரு முக அகல் விளக்குகள் பல அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியங்களான அகநானூறு, நற் றிணை போன்றவை கார்த்திகை நாளில் அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்திருந்ததைப் பற்றி குறிப்பிடுகின்றன. இலவ மலர்கள் அடுக்கடுக்காய் பூத்திருப்பது கார்த்திகை நாளில் மகளிர் ஏற்றி வைத்த விளக்குகள் போன்று உள்ளன என்று, தமிழ்மூதாட்டி அவ்வையார் ஒரு பாடலில் குறிப்பிடுகின்றார். கார்த்திகைத் தீபத் திருவிழா, "சுடர் விழா' என்றே குறிப்பிடப்படுகிறது.

No comments: