Tuesday, December 9, 2008

பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது 10 நாட்கள் கூட்டம் நடைபெறும்


புதுடெல்லி, டிச.10-
பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இத்தொடர் 10 நாட்கள் நடைபெறும்.

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், நம்பிக்கை ஓட்டெடுப்புக்காக கடந்த ஜூலை 21-ந் தேதி தொடங்கியது. அதன்பிறகு ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்தொடர், கடந்த அக்டோபர் மாதம் 2-ம் கட்டமாக சில நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில், இத்தொடர் 3-ம் கட்டமாக இன்று தொடங்குகிறது.
த்தொடர் 10 நாட்கள் நடைபெறும். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இரு அவைகளும் முதல் நாளான இன்று ஒத்தி வைக்கப்படும்.

மும்பை தாக்குதல், சர்வதேச பொருளாதார சீர்குலைவு, விலைவாசி உயர்வு, இலங்கை பிரச்சினை, பாகிஸ்தானுடன் போர் மூளும் சூழல், 5 மாநில தேர்தல் முடிவு வெளியீடு போன்ற பரபரப்பான சூழ்நிலையில் இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. மும்பை தீவிரவாத தாக்குதல் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் பிரதான அம்சமாக எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரில், தீவிரவாத வழக்குகளை கையாள `பெடரல் புலனாய்வு ஏஜென்சி' என்ற விசேஷ புலனாய்வு அமைப்பை அமைப்பதற்கு ஒருமித்த கருத்தை உருவாக்குவதுதான் முக்கிய பணியாக இருக்கும். தீவிரவாதத்தை ஒடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி விரிவான அறிக்கை கேட்போம் என்று பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
விசேஷ புலனாய்வு அமைப்பை உருவாக்க எதிர்க்கட்சிகளின் ஆதரவு அவசியம் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது. இதற்காக சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் அத்வானியை மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் சந்தித்து பேசினார்.

மேலும், இத்தொடரில் பொருளாதார சரிவை சமாளிக்க எடுத்துள்ள நடவடிக்கைகளை மத்திய அரசு விளக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு சமீபத்தில் சில பொருட்களுக்கு வரிச்சலுகை அறிவித்தது. இந்த கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்காக, துணை மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிகிறது.
சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி, 3 மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி உற்சாகமாக இருக்கும் நிலையில், இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. எனவே, இத்தொடரில் பா.ஜனதாவை தர்மசங்கடப்படுத்தும் வகையில், காங்கிரஸ் தரப்பில் கருத்துகள் வீசப்படும் என்றும் தெரிகிறது.

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. எனவே, இந்தத்தொடர்தான், தற்போதைய பாராளுமன்றத்தின் கடைசி தொடராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அதே சமயத்தில், தேர்தலுக்கு முன்பாக இன்னொரு கூட்டத்தொடர் நடக்கும் என்றும் சிலர் கூறுகிறார்கள். இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக, அந்த தொடர் நடக்கும் என்றும், தேர்தலுக்கு பிறகு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அந்த தரப்பினர் கூறுகிறார்கள்.

No comments: