Saturday, December 27, 2008

"தமிழர்களின் உயிரை காப்பாற்ற மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியை தாமதமில்லாமல் இலங்கைக்கு அனுப்ப வேண்டும்" - கருணாநிதி வேண்டுகோள்!.



சென்னை, டிச.28-

தமிழர்களின் உயிரை காப்பாற்ற மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியை தாமதமில்லாமல் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை-அண்ணா அறிவாலயம்- கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற தி.மு.க.வின் 13-வது பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வீராசாமி பேசும்போது சொன்னார்; தானே முன்வந்து பொருளாளர் பொறுப்பை ஸ்டாலினிடத்திலே ஒப்படைத்திருப்பதாகச் சொன்னார். அதை விளக்கமாகச் சொல்ல வேண்டுமேயானால், என்னிடத்திலே இருந்த பொருளாளர் பொறுப்பை, அவர் இடையிலே பெற்று, அதை என்னுடைய மகனிடத்திலே ஒப்படைத்திருக்கிறார் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

நாட்டு தேவைக்காக, மக்கள் தேவைக்காக, நலிந்தோரைக் காப்பாற்றுவதற்காக, பாதிக்கப்பட்டோரைப் பாதுகாப்பதற்காக நாம் பல நேரங்களில் நிதியினைத் தேடி வசூலித்துத் தந்திருக்கின்றோம். அதேபோல கட்சிக்கும் நிதி சேர்த்திருக்கின்றோம்.

காலணா, அரையணா என்றெல்லாம் சொல்வார்களே அப்போது, அதைப்போல ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று உண்டியல் ஏந்தி, அந்த ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று வசூலித்து, வசூலித்து, அதை உருவாக்கி, அப்படி உருவாக்கியதிலே உதயமானதுதான் இந்த அண்ணா அறிவாலயக் கட்டிடம் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

இப்படி நம்முடைய நிதி, நாம் வசூலிக்கிற நிதி, திரட்டுகிற நிதி நல்ல காரியங்களுக்கு பயன்பட, நான் ஒரு கருவியாக இருந்து பயன்பட்டிருக்கிறேன். அதனுடைய பயனை இன்றைக்கு எல்லோரும் அனுபவிக்கிறோம். ஸ்டாலின், நீயும் இதைப் பின்பற்றவேண்டும் என்று நான் உனக்கு ஆணையிடுகிறேன். இந்த ஆணையை நிறைவேற்றினால், அண்ணா அறிவாலயம் போல இன்னும் பல அண்ணா அறிவாலயங்களைத் தமிழ்நாட்டிலே பல இடங்களிலே நாம் உருவாக்க முடியும் என்று நான் ஸ்டாலினுக்கு சொல்லிக்கொள்கின்றேன்.

எத்தனையோ கழகக் கிளைகள் இன்றைக்குக் கட்டிடம் இல்லாமல் இருக்கின்றன. ஒருமுறை அண்ணா சொன்னார். மயிலாடுதுறை எனப்படும் மாயவரத்தில் நடைபெற்ற மாநாட்டில் அண்ணா சொன்னார். ``தம்பிகளே எனக்கொரு ஆசை; என் கையில் ஒரு ஆயிரம் கிளைக் கழகங்களுடைய சாவிக் கொத்து இருக்கவேண்டும். ஏன் தெரியுமா? அந்த சாவிக் கொத்தை என்னுடைய காரிலேயே, ஒரு மூலையிலே வைத்துக்கொண்டு பயணம் செய்வேன். சென்னையிலே இருந்து நான் வேதாரண்யம் வரை செல்வதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்படி செல்லும்போது, நான் வழியிலே எங்காவது ஓய்வெடுக்க, உண்ண, உறங்க, ஒரு இடம் தேவையென்றால், நான் ஓட்டலைத் தேடிக் கொண்டிருக்கமுடியாது. நம்முடைய கிளைக் கழகக் கட்டிடங்கள் இருக்கவேண்டும். அந்த சாவிக் கொத்து என்னிடத்திலே இருந்தால், நான் அந்த கட்டிடத்தைப் பூட்டிவிட்டு, யார் இருப்பார்களோ, இருக்கமாட்டார்களோ, எனக்கு அந்த கவலையில்லை. நானே அந்த சாவியைக் கொண்டு, ஆங்காங்கே உள்ள கிளைக் கழகக் கட்டிடங்களைத் திறந்து, நானே அங்கே உண்டு, உறங்கி, செல்வேன். அப்படியொரு ஒரு ஆயிரம் சாவிகள் அடங்கிய சாவிக் கொத்தை எனக்கு தாருங்கள்'' என்று அண்ணா கேட்டார்.

அப்படி ஆயிரம் சாவிகள் அடங்கிய ஒரு சாவிக் கொத்தைக் காணவேண்டும் என்ற ஆசையால் அல்ல; ஆயிரம் கிளைக் கழகக் கட்டிடங்கள் அமையவேண்டும் இந்த பாசறைக்கு என்று அண்ணா அன்றைக்கு விரும்பினார். அந்த விருப்பத்தை நான் நினைவுபடுத்துகின்றேன். அந்த விருப்பத்தை நிறைவேற்றுகின்ற முயற்சியிலே நம்முடைய புதிய பொருளாளர் வெற்றி காணவேண்டும் என்று நான் வாழ்த்துகின்றேன். அந்த வெற்றிக்கு நீங்களெல்லாம் உறுதுணையாக இருக்கவேண்டுமென்று உங்களையெல்லாம் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

தி.மு.க.வை பொறுத்தவரையில், இன்றையதினம் அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள் எவையெவை என்பதையெல்லாம் இங்கே தீர்மானத்திலே படித்ததை நீங்கள் கேட்டீர்கள். மிக முக்கியமாக இன்றைக்கு நாம் எதிர்நோக்கவேண்டிய பிரச்சினை, இலங்கையிலே செத்துக் கொண்டிருக்கின்ற தமிழனைக் காப்பாற்ற வேண்டிய பிரச்சினை. பாதிக்கப்பட்ட நிலையிலே அவன் பரிதாபமாக பச்சைக் குழந்தைகளோடு, நடுத்தெருவில் நிற்கிறானே, அந்த இலங்கைத் தமிழனை எப்படி காப்பாற்றுவது என்ற பிரச்சினை.
அதற்காக நாம் குறுக்கு வழியில், கோணல் வழியில், வன்முறை வழியில், பலாத்கார வழியில், இந்த நாட்டுக்கு விரோதமான வழியில், தேசத்திற்கு பகையான வழியில் செல்ல விரும்பவில்லை. அதனால்தான், மத்திய அரசு என்ன முடிவெடுக்கிறதோ, அந்த முடிவு நாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய முடிவாக இருக்கவேண்டுமென்று நாம் பலமுறை சொல்லியிருக்கிறோம். ஆனால், மத்திய அரசு நாம் விரும்புகின்ற அவசரத்திற்கு, நாம் படுகின்ற வேதனையைத் துடைக்கின்ற அளவிற்கு, வேகமான முடிவெடுக்காமல், இன்னும், இன்னும், இன்னும் தாமதிக்கின்ற காரணத்தால், தாமதிக்கின்ற ஒவ்வொரு வினாடியும் ஒரு தமிழனுடைய பிணம் இலங்கை வீதியிலே விழுந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது என்பதை மாத்திரம் நான் இந்த பொதுக்குழுவிலே, என்னை நீங்கள் தலைவராக ஆக்கி மகிழ்கின்ற இந்த நேரத்திலே கண் கலங்க, வேண்டுகோளாக டெல்லி பட்டணத்திற்கு விடுக்க விரும்புகின்றேன்.

நானும், நம்முடைய தமிழகத்தினுடைய அனைத்து கட்சி தலைவர்களும் சென்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் முறையிட்டபோது, அவர் எங்களுக்கு தந்த வாக்குறுதி விரைவில் வெளியுறவு துறை மந்திரி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி, ஒரு வழி காண முயற்சிக்கிறோம் என்றார். இன்னமும் காத்திருக்கிறோம்; நம்பியிருக்கிறோம்; செய்வார் என்று கருதியிருக்கின்றோம்; செய்யவேண்டுமென்று இந்த பொதுக்குழுவிலும் தீர்மானம் போட்டிருக்கின்றோம்.

எனவே, இந்த பொதுக்குழுவினுடைய தீர்மானத்தை மதித்து, அதற்கு மதிப்பளித்து, நம்முடைய மத்திய அரசு எவ்வளவோ நாம் கேட்டு, இங்கே தீர்மானத்தில் ஸ்டாலின் பட்டியல் படித்தாரே, அவ்வளவு காரியங்களைத் தமிழகத்திற்கு செய்து கொடுத்திருக்கின்ற- தொழிற்சாலையா, செம்மொழியா, கல்லூரிகளா, பல்கலைக்கழகங்களா, விஞ்ஞான வளர்ச்சிக்கான சாதனங்களா, நெடுஞ்சாலைகளா, துறைமுகங்களா, ரெயில் பாதைகளாக, மருத்துவ கூடங்களா- இவைகளையெல்லாம் செய்து கொடுத்திருக்கின்ற மத்திய அரசு, இதையும் செய்து கொடுக்கவேண்டும்.

ஏனென்றால், தமிழன் அங்கே உயிர்விட்டுக் கொண்டிருக்கின்றான். அந்த தமிழனுக்காக இங்கே இருக்கின்ற தமிழர்கள் கதறி அழுது கொண்டிருக்கின்றார்கள். அதை நாங்கள் குறுக்கு வழியிலே, யாரையும் மிரட்ட விரும்பவில்லை. எங்களுக்கு தெரியும்; நான் என்னுடைய நிலையை, தி.மு.க.வினுடைய நிலையை, தமிழ்நாட்டு மக்களுடைய நிலையை, சட்டமன்றத்திலே ஒரு மணி நேரம் பேசும்போது விளக்கியிருக்கின்றேன்.

இந்தியாவினுடைய பிரதமராக இருந்த இளந்தலைவர் ராஜீவ் காந்தி உயிரோடு இருந்தபோது ஒரு பகுதி; அவர் மறைவிற்கு பிறகு ஒரு பகுதி என்று இரண்டு பகுதிகளாக இலங்கைப் பிரச்சினையை நான் பார்க்கிறேன் என்று சொன்னேன். இரண்டாவது பகுதி, நாம் இன்று வருந்துவதற்கு காரணமான பகுதி. அதனால்தான் இன்னமும் அந்த துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே, கோடிக்கணக்கான தமிழ் மக்கள், இந்தியாவிலே உள்ள தமிழ் மக்கள் மாத்திரமல்ல; தமிழகத்திலே உள்ள தமிழ் மக்கள் மாத்திரமல்ல; அமெரிக்காவிலே வாழ்கின்ற தமிழ் மக்கள், கலிபோர்னியாவிலே வாழ்கின்ற தமிழ் மக்கள், அரேபியாவிலே வாழ்கின்ற தமிழ் மக்கள், சிங்கப்பூரிலே வாழ்கின்ற தமிழ் மக்கள், மலேசியாவிலே வாழ்கின்ற தமிழ் மக்கள், அங்கிங்கெனாதபடி, எங்கெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்கள் உள்ளத்திலே இருக்கின்ற அந்த ரணத்தை ஆற்ற, அந்த புண்ணை ஆற்ற, அதற்கு மருந்து போட மத்திய அரசு முன்வர வேண்டுமென்று இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் சார்பாக நான் உருக்கமான வேண்டுகோளை மத்தியிலே உள்ளவர்களுக்கு விடுக்க விரும்புகின்றேன்.

அதற்காக இங்கே இதை எதிர்த்து, நம்முடைய குரலை திசை திருப்ப ஒருசில சக்திகள், இவர்களெல்லாம் வாதாடுவதும், போராடுவதும் அங்குள்ள தமிழ் மக்களுக்காக அல்ல; விடுதலைப்புலிகளுக்காக என்று வக்கிரமான அறிக்கைகளை விட்டு, தேவையற்ற, திசை திருப்புகின்ற வேலைகளைச் செய்து, சாகக் கிடக்கின்ற தமிழனுடைய குரல் வளையை அழுத்துகின்ற வகையிலே இங்கே தங்களுடைய திறமைகளைக் காட்டுகிறார்கள்.

அவர்களை ஏற்றுக் கொள்ளாமல், அவர்களைப் புறந்தள்ளி, உண்மையான உள்ளத்திலே இருந்து தமிழ் உணர்வோடு பேசுகின்ற இந்த பேச்சுகளுக்கு, இந்த கோரிக்கைகளுக்கு இடம் தந்து, இலங்கையிலே வாழ்கின்ற தமிழர்களைக் காப்பாற்றுங்கள். அங்கே அமைதியை உருவாக்க என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யுங்கள். அதற்கு என்ன ஒத்துழைப்பை நாங்கள் தரவேண்டுமோ, அந்த ஒத்துழைப்பைத் தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மத்தியிலே உள்ள அரசுக்கு- அதுவும் நம்முடைய அரசுதான் என்ற காரணத்தால், அந்த அரசுக்கு மிக மிகப் பணிவன்போடு, மிக மிக உரிமையோடு, மிக மிக உறவு உணர்ச்சியோடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.


இந்த பொதுக் குழுவிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலே எங்களைக் கண் கலங்க வைத்த தீர்மானம் அது. ஆகவே, அந்த தீர்மானத்திற்கு மதிப்பளியுங்கள்; அதை நிறைவேற்றி முடியுங்கள் என்று இந்த பொதுக்குழுவின் சார்பாக நம்முடைய மத்திய சர்க்காரை மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன். அவர்கள் அதற்கு மதிப்பளிப்பார்கள் என்று நம்புகின்றேன்.

அந்த நம்பிக்கையோடு நீங்களும் நாம் எடுத்திருக்கின்ற வழிமுறை எது, இதைச் சந்திப்பது எப்படி, நம்முடைய தலைவர்கள், நம்முடைய கழகத்தின் தலைமை, இதை எந்த கோணத்திலே பார்க்கிறது என்பதையெல்லாம் மறந்துவிடாமல், எங்கே ஓங்காரப் பேச்சு கேட்கிறதோ, எங்கே ஆவேசப் பேச்சு கேட்கிறதோ, அவர்கள்தான் உண்மையான தமிழர்களுக்காகப் பாடுபடுகிறவர்கள் என்று தயவு செய்து ஏமாந்துவிடாமல்;
குடு குடுப்பை காதைப் பிளக்கிற அளவிற்கு சத்தம் கூட கொடுக்கும். ஆனால் அந்த குடு குடுப்பை முரசமாகாது. அந்த குடு குடுப்பை பேரிகை ஆகாது. அந்த குடு குடுப்பை உங்களுக்கு ஆறுதல் அளிக்காது. ஆகவே, குடு குடுப்பைகளுக்கு மயங்காமல், நம்முடைய கொள்கை நிறைவேற, இலங்கையிலே தமிழர்கள் வாழ, தக்க வழியைக் காண்போம்; அந்த வழி இதுவரையிலே நாம் தேடிச் சென்ற வழி, மத்திய சர்க்காரினுடைய உதவியைக் கேட்கின்ற வழி. அது கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்; கிடைக்கட்டும், கிழக்கு வெளுக்கட்டும், உதய சூரியன் உதிக்கட்டும். அதுவரையிலே அமைதியாக இருப்பதற்கு வழி இல்லாவிட்டாலும்கூட, எப்படி நம்முடைய எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்வது, எப்படி அவர்களுடைய கண்களைத் திறப்பது, எப்படி அவர்களுடைய காதுகளிலே நம்முடைய கருணை மனுவை, அதனுடைய வாசகங்களை திணிப்பது என்பதற்காக பாடுபடுவோம், பணியாற்றுவோம்.

என்னைப் பொறுத்தவரையில் நான் இன்று நேற்றல்ல; நானும், பேராசிரியரும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியையே துறந்தவர்கள். இன்றைக்கு யார் யாரோ, நாங்கள் பதவி துறப்போம், பதவி துறப்போம் என்று பேசலாம். ஆனால், நாங்கள் இரண்டு பேரும் ஏற்கனவே பதவியைத் துறந்தவர்கள் என்பதை அவர்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே, பதவி துறந்தோம்; எதையும் துறப்போம்; இலங்கையிலே உள்ள தமிழன் வாழ, உயிர் துறக்க வேண்டுமென்று சொன்னாலும்கூட, அதற்கும் தயாராக இருக்கிறோம் என்பதை எடுத்துச்சொல்லி, இதற்குப்பிறகாவது மத்திய அரசு மனமிரங்கி, நம்முடைய தமிழர்களைக் காப்பாற்ற முன்வரவேண்டும் என்று; பொதுக்குழுவிலே பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும்; இதுவே மூல, முக்கியமான தீர்மானமாக மத்திய அரசு கருதவேண்டும்; கருதி ஆவன செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டு, என்னை மீண்டும் வம்புக்கு இழுத்திருக்கின்ற இந்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கு, என்னை மீண்டும் சிரமத்திற்கு ஆளாக்கியிருக்கின்ற பொதுக்குழு உறுப்பினர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பாரதிதாசன் பாடினார்; `தொந்தரவுக்குள்ளே சுகம் கண்டேன், தோழி, நான்' என்று; அதைப்போல உங்களுடைய தொந்தரவுக்குள்ளே சுகம் கண்டு, நீங்கள் தருகின்ற இடைïறானாலும், இன்னலானாலும், அவைகளையெல்லாம் இன்பமாக கருதி, உங்களுக்காக என்றென்றும் பணியாற்ற உறுதி எடுத்துக்கொள்கின்றேன் என்று கூறி இந்த நிகழ்ச்சியிலே உங்கள் அனைவருக்கும் நன்றியினை உங்களுடைய காலடியிலே காணிக்கையாக்கி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

No comments: