Tuesday, December 23, 2008

காஷ்மீர் எல்லை பகுதிக்கு ராணுவ தலைமை தளபதி `திடீர்' பயணம்!. - படைகளின் தயார் நிலை குறித்து நேரில் ஆய்வு!.


புதுடெல்லி, டிச.24-

காஷ்மீர் எல்லைப் பகுதிக்கு ராணுவ தலைமை தளபதி தீபக் கபூர் நேற்று திடீர் பயணம் மேற்கொண்டார். சியாச்சின் உள்ளிட்ட இடங்களில் படைகள் தயார் நிலையில் இருப்பது குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

மும்பை தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான்-இந்தியா இடையே போர் பதட்டம் அதிகரித்து உள்ளது. ராணுவத்தில் உள்ள மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த மத்திய மந்திரிகள், கடந்த சனிக்கிழமை அன்று ஆலோசனை நடத்தினர்.

இது தவிர அனைத்து ராணுவ அதிகாரிகளுக்கும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை விடுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுப்பில் சென்றவர்களையும் உடனே பணிக்கு திரும்புமாறு ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி உத்தரவிட்டார். இது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் எல்லை முழுவதும் ராணுவம் உஷார் படுத்தப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில், ராணுவ தலைமை தளபதியை காஷ்மீர் எல்லைக்கு மத்திய அரசு நேற்று `திடீர்' என அனுப்பி வைத்தது. நேற்று காலையில் சியாச்சின் பகுதிக்கு சென்ற அவர், அந்த இடத்தையும் காஷ்மீர் எல்லை முழுவதையும் நேரில் ஆய்வு செய்தார். இது தவிர, எல்லையோரத்தில் உள்ள கிராமப் பகுதிகளையும் பார்வையிட்டார்.

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் எல்லை வழியாக எத்தகைய அத்துமீறல் ஏற்பட்டாலும் நிலைமையை சமாளிக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தினார். எல்லை நெடுகிலும் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களுடன் உரையாடி, நிலைமையை அறிந்தார்.

இதன் பிறகு சியாச்சினுக்கு வந்த மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் கமாண்டர்கள், தளபதிகள் ஆகியோருடன் தலைமை தளபதி தீபக் கபூர் ஆலோசனை நடத்தினார். அப்போது ராணுவ தளபதிகளுக்கு சில முக்கிய ஆலோசனைகள் மற்றும் உத்தரவுகளை பிறப்பித்தார். பின்னர், தனது `திடீர்' பயணத்தை முடித்துவிட்டு டெல்லிக்கு திரும்பினார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் ராணுவ தலைமை தளபதியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள பகுதிகளில் உள்ள விமானப்படை தளங்கள் அனைத்தும் உஷார் நிலையில் உள்ளன. எந்த நேரமும் தாக்குதல் நடத்துவதற்கு போர் விமானங்கள் தயாராக இருக்கின்றன. ஒரு சில தளங்களில் போர் ஒத்திகையும் நடைபெறுகிறது.

No comments: