Saturday, December 20, 2008

சென்னையில் விடுதலை சிறுத்தைகள், பெரியார் தி.க.போராட்டம், காங்கிரஸ் கட்சியினர் மீது திடீர் தாக்குதல்!.



சென்னையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் மற்றும் பெரியார் தி.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். அப்போது காங்கிரஸ் அலுவலகமான சத்திய மூர்த்திபவன் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. அங்கு நின்று இருந்த காங்கிரசாருக்கு அடிஉதை விழுந்தது.

சென்னை, டிச.21-

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் நடந்த ஈழத்தமிழர் ஆதரவு கூட்டத்தில் டைரக்டர் சீமான், வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு கூறியிருந்தார்.

மேலும், டைரக்டர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


இந்த நிலையில், நேற்று முன்தினம் தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் வைத்து டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டார். ஈரோடு கூட்டத்தில் பேசிய பெரியார் திராவிடர் கழக மாநில தலைவர் கொளத்தூர் மணியும் கைது செய்யப்பட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நேற்று ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே பெரியார் திராவிடர் கழகத்தினர், துணை தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோரின் உருவபொம்மையை சாலையில் போட்டு எரித்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

உருவபொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பரவியது. அவர்கள் சம்பவ இடத்தில், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் தாமோதரன் தலைமையில் கூடினார்கள். பின்னர், உருவபொம்மையை எரிக்க எப்படி அனுமதித்தீர்கள் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


போலீசார் அவர்களை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் முடியவில்லை. இந்த நிலையில், அவர்கள் அனைவரும் சத்தியமூர்த்தி பவன் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இணை கமிஷனர் குணசீலன், துணை கமிஷனர் கணேசமூர்த்தி, உதவி கமிஷனர் சோமசுந்தரம் ஆகியோர் வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் இல்லை.

மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து அண்ணாசாலையில் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு பிரிவினரை தடுத்து போலீசார் கைது செய்தனர். அதற்குள், மற்றொரு பிரிவினர் அண்ணா சாலையில் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அண்ணா சாலையிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


பிரச்சினை பெரிதாக சென்றதை அடுத்து, அங்கு அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர். அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களும் கைது செய்யப்பட்டு வேனில் அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த இடைவெளி நேரத்தில் வெறிச்சோடி கிடந்த சத்தியமூர்த்தி பவன் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்ட துணை செயலாளர் சாரநாத், வட்ட செயலாளர் பச்சை தலைமையில் 10 பேர் வந்து, `திருமாவளவனை கைது செய்யச் சொல்லும் தங்கபாலுவை முதலில் கைது செய்ய வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கைகூலி அவர்' என்று கோஷங்கள் எழுப்பினார்கள். அப்போது கட்சி அலுவலகத்தில் இருந்த சிலர் இதை தட்டிக்கேட்டனர்.

அவர்கள் அனைவரையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் அடித்து உதைத்தனர். சத்தியமூர்த்தி பவன் உள்ளேயும் சரிமாரியாக கற்களை வீசினார்கள். அங்கு கட்டப்பட்டிருந்த பேனர்களும் கிழிக்கப்பட்டன. இதனால், அப்பகுதியில் பதட்டம் நிலவியது. கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிஓடிவிட்டனர். இந்த தாக்குதலில், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலக நிர்வாகி கே.கே.ராஜன், வாசுதேவன் ஆகியோர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் வந்தார். கட்சி நிர்வாகிகளிடம் நடந்ததை கேட்டறிந்தார்.

பின்னர், நேற்று மதியம் சத்தியமூர்த்தி பவனுக்கு மத்திய மந்திரி ஜி.கே.வாசன் வந்தார். கட்சி தலைவர்களிடம் நடந்ததை கேட்டறிந்தார். அப்போது, ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சத்தியமூர்த்தி பவன் முன்பு மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிலர், விடுதலைச்சிறுத்தைகள் சார்பில், தமிழீழ அங்கீகார மாநாடு நடப்பதாக வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்து வந்து எரித்தனர். இந்த தொடர் சம்பவங்களால் சத்தியமூர்த்தி பவனில் நேற்று இரவு வரை தொடர்ந்து பதட்டம் நிலவியது.

மறியல் போராட்டங்களில் ஈடுபட்டது தொடர்பாக 300 காங்கிரசார் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சுதர்சனம், எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், அருள் அன்பரசு, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் எஸ்.கே.அகமதுஅலி, மாணவர் காங்கிரஸ் நவீன் உட்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர்கள் புகார் மனு கொடுத்தனர்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

"20 பேர் கொண்ட கும்பல் திடீரென்று காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர்களை மட்டமாக குறிப்பிட்டு கோஷமிட்டனர். பின்னர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜன், விஸ்வநாதன், மனோகரன் ஆகியோர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். தங்களை பெரியார் தி.க. என்றும், விடுதலைச் சிறுத்தைகள் என்றும் சொல்லிக் கொண்டே தாக்கினார்கள்.

காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல் நடக்கக் கூடும் என்று தெரிந்தும் போதிய பாதுகாப்பு வழங்காதது வருத்தம் அளிக்கிறது.

காங்கிரஸ் தலைமையகம் மீதே இவ்வளவு தைரியமாக நுழைந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களின் பின்பலம் என்ன? அவர்களை அனுப்பியது யார்? இந்த முயற்சிக்கு தூண்டிவிட்டவர் யார்? என்பதை விசாரித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

சத்தியமூர்த்தி பவனில் நடந்த கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் நிருபர்களிடம் கூறியதாவது:-

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சக்திகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டும். இது பெரியார் திராவிடர் கழகமாக இருந்தாலும் சரி. விடுதலைச்சிறுத்தைகளாக இருந்தாலும் சரி. அவர்கள் இருக்கும் கூட்டணியில் நாங்கள் (காங்கிரஸ் கட்சி) இருக்க மாட்டோம். அந்த கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொள்ள மாட்டார்கள்.
அவர்களுடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. சத்தியமூர்த்தி பவனில் தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வன்முறை கலாசாரத்தை தமிழகத்தில் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. இந்த சம்பவம் குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்தியமூர்த்தி பவனில் நடந்த விரும்பத்தகாத செயலை வன்மையாக கண்டிக்கிறேன். காங்கிரஸ் கட்சியை ஒடுக்க நினைப்பவர்களை, அடக்குவோம், ஒடுக்குவோம். தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கைது செய்யப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இந்த சம்பவம் குறித்த உண்மை நிலையை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சத்தியமூர்த்தி பவன் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

சத்தியமூர்த்தி பவனில் இருந்த ராஜன், விஸ்வநாதன், மனோகரன் ஆகியோரை தாக்கியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் பச்சை, பகலவன், சாரநாத், ரஜபுத்திரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் உருவ பொம்மையை எரித்து அங்கு கலாட்டாவில் ஈடுபட்டதற்காக பெரியார் தி.க. தலைவர் ஆனூர் ஜெகதீசன் உட்பட 62 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் 68 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

No comments: