
விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, டிச.26-
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது குற்றம் என்றும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் டைரக்டர் சீமானும், பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த கொளத்தூர் மணியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசி வருகிறார். அவரையும் கைது செய்யவேண்டும் என்று காங்கிரசார் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் சென்னையில் இன்று தமிழ் ஈழ அங்கீகார மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செயல்பாடுகள் இருக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கிடையே, விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை வருமாறு:-
கேள்வி:- இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறதா?
பதில்:- இலங்கை தமிழர் பாதுகாப்புதான் தி.மு.க.வின் குறிக்கோள். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்போரை தி.மு.க. ஆதரிக்கவில்லை. அவ்வாறு ஆதரித்து பேசினாலும், செயல்பட்டாலும் - அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திட தி.மு.க. ஆட்சி தயக்கம் காட்டாது. இந்த எச்சரிக்கை எல்லோருக்கும் பொருந்தும்.
இவ்வாறு கருணாநிதி கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment