Friday, December 19, 2008

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி - "அஜ்மல், பாகிஸ்தானை சேர்ந்தவன்தான்" - முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உறுதி!



இஸ்லாமாபாத், டிச.20-

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அஜ்மல், பாகிஸ்தானை சேர்ந்தவன்தான் என்று, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறினர்.

மும்பையில் தாஜ் ஓட்டல் உள்பட 4 இடங்களில் தாக்குதல் நடத்தி, 200 பேரின் உயிரை பறித்த கொடூர சம்பவத்தில், தீவிரவாதி அஜ்மல் மட்டும் உயிருடன் பிடிபட்டான். தற்போது அவன், சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறான்.

இவன் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவன் என்று, இந்திய புலனாய்வுத்துறை தகவல் கூறுகிறது. ஆனால் இதை பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மறுத்தார். அஜ்மல், பாகிஸ்தானை சேர்ந்தவன் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் கூறி இருக்கிறார்.


இதுபற்றி பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், ஆங்கில டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

எனது சொந்த ஊர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது. அது போல, மும்பையில் தாக்குதல் நடத்தி கைதாகி இருக்கும் அஜ்மல் அமிர் இமான் என்ற அஜ்மல் கசாப்பும், பஞ்சாப் மாநிலம் ஓகரா மாவட்டம் பரீத் கோட் கிராமத்தை சேர்ந்தவன்தான்.

அஜ்மல் எனது மகன் தான் என்று அஜ்மலின் தந்தை அமிர் கசாப், பாகிஸ்தான் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். இதைத்தொடர்ந்து, அஜ்மலின் பெற்றோரை, அவர்களது வீட்டில் இருந்து வேறு இடத்துக்கு அரசாங்கம் கொண்டு சென்று விட்டது. உண்மை வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, இந்த நடவடிக்கையை ராணுவம் மேற்கொண்டு இருக்கிறது.
அந்த கிராமத்துக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல அரசாங்கம் தடை விதித்து இருக்கிறது. அஜ்மல், பாகிஸ்தானை சேர்ந்தவன் அல்ல என்பது உண்மை என்றால், ஏன் இது போன்ற நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட வேண்டும்?

அஜ்மல் பாகிஸ்தானை சேர்ந்தவன் அல்ல என்றால், அவன் வாழ்ந்த கிராமத்தின் மீது ஏன் இத்தனை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

இவ்வாறு நவாஸ் ஷெரீப் கூறினார்.

No comments: