Monday, December 22, 2008

"இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் தாக்கலாம்'' - பாகிஸ்தானில் போர் பீதி!..




இஸ்லாமாபாத், டிச.23-

"இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் தாக்கலாம்'' என்று செய்தி பரவியதால் பாகிஸ்தானில் போர் பீதி உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமான தீவிரவாத இயக்கம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்றும் இந்தியா மீண்டும், மீண்டும் எச்சரித்தும் பாகிஸ்தான் இதுவரை மவுனம் சாதித்து வருகிறது. இதையடுத்து, "பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம்'' என்று அமெரிக்க உளவு நிறுவனம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்தது.

இதை உறுதிபடுத்தும் வகையில் மத்திய வெளிஉறவு மந்திரி பிரணாப்முகர்ஜி கூறுகையில், "எல்லாவித அம்சங்களும் பரிசீலனையில் இருப்பதாக'' தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், "மும்பையில் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சரியான பதிலடி கொடுக்கப்படும்'' என்று கூறியிருக்கிறார்.

இந்திய ராணுவமும் எல்லையில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விமானப்படை விமானங்கள் தயார்நிலையில் இருக்கின்றன. வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதர்களை நேற்று பிரதமர் மன்மோகன்சிங் டெல்லிக்கு வரவழைத்து பேசியுள்ளார்.


இந்தியாவில் நடக்கும் முஸ்தீபுகள் பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. பாகிஸ்தான் மக்கள் மத்தியில் போர் பீதி உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
`இந்திய போர் விமானங்கள் எந்த நேரத்திலும் குண்டு வீசக்கூடும்' என்று செய்தி பரவி வருவதால் பாகிஸ்தான் முழுவதுமே பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் பாகிஸ்தான் விமானப்படையை சேர்ந்த சண்டை விமானங்கள் திடீரென்று அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ரோந்து சுற்ற ஆரம்பித்தன. தலைநகர் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் ஆகிய நகரங்கள் மீது போர் விமானங்கள் மிகக்குறைந்த உயரத்தில் சுற்றி சுற்றி வந்தன. விமானங்களின் பலத்த ஓசையால் கட்டிடங்கள் குலுங்கின.

போர் விமானங்கள் திடீரென்று வட்டமிட்டதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய விமானங்கள் குண்டு வீச வருகின்றன, அதனால்தான் போர் விமானங்கள் பாதுகாப்புக்காக ரோந்து சுற்றுகின்றன என்று காட்டுத்தீ போல வதந்தி பரவியது.

பொதுமக்களில் பலர் பத்திரிகை அலுவலகங்களுக்கு போன் செய்து போர் வெடித்து விட்டதா? என்று விசாரித்த வண்ணம் இருந்தனர். நாடு முழுவதுமே இந்த அச்சம் நிலவியது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் விமானப்படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஹூமாïன் விகார் ஷெபீர் ஒரு அறிக்கை வெளியிட்டார். "தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக பாகிஸ்தான் விமானப்படை தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு அங்கமாக இந்த ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது'' என்று அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே, பாகிஸ்தானில் உள்ள இந்திய துணை தூதர் வோராவை அந்த நாட்டு நிருபர்கள் சந்தித்து, "பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கங்களின் முகாம்கள் மீது குண்டு வீச இந்தியா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறதே, அது உண்மையா?'' என்று கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

மும்பையில் நடந்த தாக்குதலுக்கு லஸ்கர்-இ-தொய்பா இயக்கம்தான் காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே பாகிஸ்தான் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தனது மண்ணில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளின் முகாம்களை ஒழித்து கட்டவேண்டும் என்று இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனாலும் இரு நாடுகள் இடையே முழு அளவிலான போர் வெடிக்க வாய்ப்பு எதுவும் இல்லை. பாகிஸ்தானுடன் போர் ஏற்படுவதை விரும்பவில்லை என்றும் போரினால் எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்றும் எங்கள் தலைவர்கள் மீண்டும் மீண்டும் கூறியுள்ளனர். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமும் இல்லை.

இவ்வாறு வோரா கூறினார்.

No comments: