
புதுடெல்லி, டிச.29-
ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும், அடுத்த மாதம் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி கூறினார்.
தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் மே மாத மத்தியில் முடிவடைகிறது. எனவே, அதற்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட வேண்டும். தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. சமீபத்தில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் என்.கோபாலசாமி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், பாராளுமன்ற தேர்தல் எப்போது நடத்தப்படும்? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு கோபாலசாமி கூறியதாவது:-
மார்ச் மாதம், மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் மாதம். எனவே, அதற்கு பிறகு தேர்தல் நடத்துவதுதான் நல்லது. ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடத்துவதற்கு பெருமளவு வாய்ப்பு உள்ளது. இதைப்பற்றி இப்போதே விரிவாக பேச இயலாது. அடுத்த மாத மத்தியில், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு நாங்கள் உட்கார்ந்து பேசுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஷ்மீர் சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு கோபாலசாமி கூறியதாவது:-
அமர்நாத் கோவில் பிரச்சினை காரணமாக, காஷ்மீரில் உடனடியாக தேர்தல் நடத்த ஆரம்பத்தில் நான் விரும்பவில்லை. அரசியல் கட்சிகளும் கூட தேர்தலை விரும்பாமல் இருந்தனர். டிசம்பர் மாதத்தில் வானிலை மோசமாக இருக்கும் என்பதால், அவர்களால் பிரசாரம் செய்யவே முடியாது.
ஆனால் அதையெல்லாம் மீறி, காஷ்மீரில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் முந்தைய தேர்தலை விட, 15 முதல் 20 சதவீதம் கூடுதலாக ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
இதற்கு தீவிரவாதிகள் மீதான பயம் குறைந்துள்ளதும், வானிலை நன்றாக இருந்ததும்தான் காரணம். கடந்த ஓராண்டாகவே தீவிரவாத சம்பவங்கள் பெருமளவு குறைந்து விட்டன. எனவே, மக்களுக்கு பயம் இல்லை. தீவிரவாதம் இல்லாததுதான், கூடுதல் ஓட்டுப்பதிவுக்கு முக்கிய காரணம்.
மேலும், யாரையும் கட்டாயப்படுத்தி ஓட்டுப்போட வைக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தேன். அதன்படி தேர்தல் நடந்திருப்பது எனக்கு திருப்தி அளிக்கிறது. இந்த தேர்தலில் நான் நடுவர்தான். வாக்காளர்களுக்குத்தான் ஆட்ட நாயகர் விருது தர வேண்டும்.
இவ்வாறு கோபாலசாமி கூறினார்.
No comments:
Post a Comment