
மும்பை, டிச.25:
மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அஜ்மலுக்கு ஜனவரி 6ம் தேதி வரை போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மும்பையில் கடந்த மாதம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் முகமது அஜ்மல் அமீர் இமான் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் சிக்கியுள்ளான். இவன், மும்பை போலீசின் பலத்த காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
இவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லும்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், காவல் நிலையத்துக்கே வந்து நீதிபதி விசாரணை நடத்துகிறார்.
கடந்த 11ம் தேதி அஜ்மல் காவலில் வைக்கப்பட்டு இருந்த மும்பை குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு வந்து விசாரணை நடத்திய மும்பை பெருநகர நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமாங்கலே, அவனுக்கு 14 நாள் போலீஸ் காவல் அளித்தார்.
இந்த காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, அஜ்மல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ரகசிய இடத்துக்கு நீதிபதி மாங்கலேவும் அரசு வழக்கறிஞர் ஏக்நாத் துமாலும் நேற்று காலை வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர், அஜ்மலுக்கு அடுத்த மாதம் 6ம் தேதி வரை போலீஸ் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment