Friday, December 26, 2008

இந்தியா மீது பாகிஸ்தான் கூறிய அபாண்ட பொய் அம்பலம்!. - லாகூர் குண்டு வெடிப்புக்கு தலீபான் இயக்கம் பொறுப்பு ஏற்றது!.


இஸ்லாமாபாத், டிச.27-

லாகூர் குண்டு வெடிப்புக்கு தலீபான் ஆதரவு தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இதனால் இந்தியா மீது வீண் பழி சுமத்திய பாகிஸ்தானின் பொய் அம்பலமாகி உள்ளது.

பாகிஸ்தானில் லாகூரில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பில் கடந்த புதன்கிழமை கார் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் ஒரு பெண் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக, அதே நாளில், சதீஷ் ஆனந்த் சுக்லா என்ற இந்தியரை கைது செய்திருப்பதாக பாகிஸ்தான் உளவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுக்லா அளித்த தகவலின் பேரில், நேற்று முன்தினம் ராம்குமார், ராம்சந்தர், பிரகாஷ் என்ற மேலும் 3 இந்தியர்களை கைது செய்திருப்பதாக உளவு அதிகாரிகள் கூறினர். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தீவிரவாதியை இந்தியா கைது செய்ததால், இந்தியாவை களங்கப்படுத்துவதற்காக பாகிஸ்தான் இந்த வீண் பழி சுமத்தும் வேலையில் ஈடுபட்டது.
இந்த கைது பற்றி லாகூர் போலீசாருக்குக் கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் தகவல் கூறப்படவில்லை.

இந்நிலையில், லாகூர் குண்டு வெடிப்புக்கு `அன்சார் வா மொகாஜிர்' என்ற தலீபான் ஆதரவு தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இது பாகிஸ்தானின் வடக்கு வசீரிஸ்தான் மாகாணத்தில் செயல்பட்டு வருகிறது. இது இதற்கு முன்பு கேள்விப்படாத இயக்கம் ஆகும். இந்த இயக்கத்தின் செய்தித்தொடர்பாளர் டூபான் வாசிர், ஒரு பாகிஸ்தானிய பத்திரிகை அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, லாகூர் குண்டு வெடிப்பை தங்கள் இயக்கம்தான் நடத்தியதாக கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-

பாகிஸ்தான் அரசின் ஒத்துழைப்புடன் அமெரிக்கா, எங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் அமெரிக்கா இரண்டு தடவை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்குதற்காக, லாகூரில் தாக்குதல் நடத்தினோம்.

வருங்காலத்தில் பாகிஸ்தான் மட்டுமின்றி அமெரிக்க அரசின் நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும். மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்படும். முக்கியமான அரசு நிலைகளில் குண்டுகள் வெடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தானில் நடந்த எத்தனையோ குற்றச்செயல்களுக்கு காரணமானவர்கள் இதுவரை பிடிபடாத நிலையில், லாகூர் குண்டு வெடிப்புக்காக, சம்பவம் நடந்த நாளிலேயே இந்தியர் என கூறி, ஒருவரை பாகிஸ்தான் கைது செய்தது, திட்டமிட்ட நாடகம் என்று கருதப்பட்டது. தற்போது, இக்குண்டுவெடிப்புக்கு தலீபான் ஆதரவு தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளதன் மூலம், பாகிஸ்தானின் பொய் ஒரே நாளில் அம்பலம் ஆகியுள்ளது.

No comments: